வெளிநாட்டுக் கல்வி தொடர்பான விளக்கங்கள் | Kalvimalar - News

வெளிநாட்டுக் கல்வி தொடர்பான விளக்கங்கள்அக்டோபர் 21,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்ளுக்கும், பெற்றோர்களுக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம். அதுதொடர்பாக, ஒவ்வொருவருக்கும் பல கேள்விகள் எழலாம். அத்தகைய சில முக்கியமான கேள்விகளுக்கு, பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. நான் எனது பிள்ளையை, இளநிலைப் படிப்பிற்காக வெளிநாடு அனுப்பலாமா?

இந்தக் கேள்வி வசதி படைத்த பல பெற்றோர்களிடம் இருக்கிறது. முதலில், உங்களின் பிள்ளையானது, கடின உழைப்பு, மனப் பக்குவம், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மை, புத்திசாதுர்யம் மற்றும் சுதந்திரமாக செயல்படும் தன்மை போன்ற பண்புக் கூறுகளைக் கொண்டுள்ளதா? என்பதை அறியவும். புதிதாக வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் ஒருவர் அங்கிருக்கும் அனைத்துவித புதிய சூழல்களையும் சமாளிக்க, மேற்கூறிய தகுதிகள் கட்டாயம் தேவை.

2. பின்பற்றப்பட வேண்டிய காலஅட்டவணை யாது?

இந்தியாவைப்போல், சர்வதேச அளவிலான உயர்கல்வி மாணவர் சேர்க்கைகள், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு நடத்தப்படுவதில்லை. எனவே, நீங்கள் பதிவு செய்வதற்கு 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்பித்தல் செயல்பாட்டை துவக்கி விடுங்கள்.

3. வெளிநாடு சென்று படிக்க எவ்வளவு செலவாகும்?

கல்விக் கட்டணம் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவினங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. பொதுவாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அவை அதிகம். பல நாடுகளில், பகுதிநேர பணிபுரிதலுக்கான வாய்ப்புகள் உள்ளன.

4. உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்புகளை எவ்வாறு அதிகப்படுத்திக் கொள்வது?

வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க, பல கல்வி நிறுவனங்கள், மெரிட் அடிப்படையிலான, பகுதிநேர மற்றும் முழுநேர உதவித்தொகைகளை வழங்குகின்றன. தன்னைப் பற்றிய ஒரு சோகமான கதையை எழுதினால், அதன்மூலம் உதவித்தொகை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று சில மாணவர்கள் தவறான நம்பிக்கைக் கொள்கிறார்கள்.

இளநிலை படிப்பைப் பொறுத்தவரை, உங்களின் படிப்பு தொடர்பான மெரிட், என்.எஸ்.எஸ், என்.சி.சி, கலை, இலக்கியப் பங்களிப்புகள், அறிவியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பாடத்திட்டத்திற்கு வெளியேயான திறன்கள் பரிசீலிக்கப்படும். உதவித்தொகை விண்ணப்பமானது, உங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டி விளம்பரப்படுத்துவதற்கான ஓர் அரிய வாய்ப்பு.

5. வெளிநாட்டு பல்கலைகளின் ராங்கிங் நிலைகள் பற்றிய விளம்பரங்களை எவ்வாறு நம்பலாம்?

வெளிநாட்டுப் பல்கலைகளின் ராங்கிங் பற்றி பல்வேறு சர்வேக்கள் வெளியிடப்படுகின்றன. நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட பல்கலைகயைப் பற்றி, குறைந்தபட்சம் 3 அல்லது 4 சர்வேக்களை ஆய்வுசெய்து ஒரு முடிவுக்கு வரலாம். சில பல்கலைகள் நன்கு அறியப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அதற்கு விளம்பரம் குறைவாக இருக்கலாம்.

sசில பல்கலைகள் அதிகளவு விளம்பரம் செய்யக்கூடியதாக இருக்கலாம். பொதுவாக, QS World Rankings, THE, Academic Rankings போன்ற ராங்கிங் சர்வவேக்கள் புகழ்பெற்றவை. மிக அரிதான நேரங்களில்தான், ஒரு பல்கலையானது, ஒரு சர்வேயால் உயர்வாகவும், மற்றொரு சர்வேயால் தரம் குறைந்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. மற்றபடி, சர்வேக்களின் மத்தியில் அதிக வித்தியாசம் இருப்பதில்லை.

6. வெளிநாடு செல்ல எந்தத் தேர்வை எழுத வேண்டும்?

பொதுவாக, உலகளவிலான அனைத்துப் பல்கலைகளும், தங்களிடம் வரும் வெளிநாட்டு மாணவர்கள், ஆங்கிலத் தேர்வை எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்வானது, ஒரு மாணவரின் மொழிப் புலமையை, 4 நிலைகளில் சோதிக்கிறது. வாசித்தல், எழுதுதல், கவனித்தல் மற்றும் பேசுதல் என்பவையே அவை.

வாசித்தல் மற்றும் எழுதுதல் பிரிவுகளில், பல இந்திய மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதில்லை. எனவே, Grammar மற்றும் Comprehension திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வுகள் கடினமான Vocabulary திறமையை சோதிப்பதற்காக அல்ல. மாறாக, பிழையற்ற ஆங்கிலத் திறனை சோதிப்பதற்காகவே.

சில பல்கலைகள், பாடத்திட்டங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே, மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறு சில கல்வி நிறுவனங்கள், SAT போன்ற தேர்வுகளின் மதிப்பெண்களைக் கோருகின்றன. ஒருவர் 11ம் வகுப்பு படிக்கும்போதே, SAT தேர்வை எழுதுவது நல்லது. அப்போதுதான், அனைத்துவிதமான விண்ணப்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான அவகாசமும், வாய்ப்புகளும் இருக்கும்.

7. சில ஏஜென்சிகள் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் சில, அவ்வாறு செய்வதில்லை. ஏன் இந்த வேறுபாடு?

ஒரு ஏஜென்சியானது, ஒரு பல்கலையின் அதிகாரப்பூர்வ அமைப்பாக இருந்தால், பொதுவாக அங்கே கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வணிக நோக்கில் செயல்படுபவைகள், கட்டணம் வசூலிக்கின்றன. நல்ல வெளிப்படையான ஏஜென்சிகள், தாங்கள் ஏன் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றன.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பல்கலையை தேர்ந்தெடுக்கையில், அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, அவற்றுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் பற்றி விபரம் சேகரிக்கவும். ஒரு கன்சல்டன்சி, தான் வழங்கும் பல்கலைப் பட்டியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பல்கலையைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களை வற்புறுத்தாத கன்சல்டன்சிகளை, நல்ல கன்சல்டன்சிகள் பட்டியலில் சேர்க்கலாம்.

நீங்கள், எப்பக்கமும் சார்பற்ற தகவலை பெற விரும்பினால், நீங்கள் பணம் செலுத்தி கவுன்சிலிங் பெறுவதே நல்லது. நல்ல கவுன்சிலிங் கட்டமின்றி கிடைப்பது அரிது. கட்டணம் செலுத்தி ஆலோசனை நாடுகையில், சம்பந்தப்பட்ட ஆலோசகரின் தகுதிகள் மற்றும் சாதனைகள் குறித்து அறியுங்கள். ஒரு ஆலோசகருடனான உங்களின் தொடர்பு 1 வருடம் நீடிக்கும். எனவே, முழுத் தொகையை அவரிடம் செலுத்தும் முன்பாக, ஒரு குறிப்பிட்ட தவணையை செலுத்திவிட்டு, அவரின் அறிவுரைகள் உண்மையாக ஒத்துவருகிறதா என்பதை சோதித்துப் பார்க்கலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us