குழந்தைகளுக்கும் கலந்தாலோசனைகள் உள்ளன | Kalvimalar - News

குழந்தைகளுக்கும் கலந்தாலோசனைகள் உள்ளன

எழுத்தின் அளவு :

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குத்தான் கவுன்சிலிங் எனப்படும் கலந்தாலோசனை அளிக்கப்படும் என்பதல்லாமல், குழந்தை மற்றும் மாணவருக்கும் கலந்தாலோசனை நடத்தப்படுகின்றன.

சில குழந்தைகள் சரியான பழக்க வழக்கம் இல்லாமல் இருப்பதும், படிப்பில் நாட்டமின்மை, அடம்பிடித்தல், உணவு உண்ணாமை, பள்ளிகளில் சரியாக நடந்து கொள்ளாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பர்.

பொதுவாக உடல்நிலை சரியில்லாத குழந்தையைத்தான் பெற்றோர் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வர். ஆனால், நடவடிக்கைகளில் சீரற்ற தன்மை நிலவுவதற்காக நாம் மருத்துவரை நாடுவதில்லை. அவர்கள் குறித்து குறை கூறுவோம். அது மிகவும் தவறு.

ஒரு குழந்தையின் நடவடிக்கைகள் சீரற்ற நிலையில் இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனை அல்லது கவுன்சிலிங் செல்ல வேண்டியது அவசியம்.

5 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருப்பின் மருத்துவரின் கவுன்சிலிங்கில் பெற்றோர் இடம்பெற்றிருப்பர். குழந்தையின் மன நிலை, விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை அறிந்து பெற்றோர் அக்குழந்தைக்கு எந்த வகையான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், குழந்தையின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துவர்.

அதேப்போல பள்ளி செல்லும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கலந்தாலோசனையில் சில சமயங்களில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் இடம்பெறுவர். பள்ளியில் அவனது நடவடிக்கை, வீட்டில் அவனது நடவடிக்கை, படிப்பின் மீதான ஆர்வம், நண்பர்களுடன் பழகும் விதம் ஆகியவற்றை கணித்து, மருத்துவர் உளவியல் ஆலோசனைகளை வழங்குவர்.

10 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு சில நேரங்களில் குழு அல்லது தனி நபர் கவுன்சிலிங் வழங்கப்படும். சில பிரச்சினைகளை பிள்ளைகள் பெற்றோர் இருக்கும் போது பேச யோசிப்பர். அதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும் என மருத்துவர் கருதினால் தனி நபர் கவுன்சிலிங்கை பரிந்துரைப்பர். அல்லது குடும்பச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருப்பின் பெற்றோருடனான கவுன்சிலிங் தரப்படும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது பாடச் சுமை அல்லது நட்பு வட்டாரத்தில் ஏற்படும் பாதிப்புகளால் மன அளவில் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை அளிக்கும் போது சமுதாயத்தில் அவர்களால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காண முடியும். மனிதர்களுடனான தொடர்பை பரந்த கண்ணோட்டத்துடன் அணுகி எளிதாக வாழ்க்கையை வாழ வழி வகுக்கப்படும்.

பொதுவாக படிப்பில் பிரச்சினை என வரும் பிள்ளைகளுக்கு இதுபோன்ற உளவியல் நிபுணர்கள் வாசிப்புத்திறன், கேட்கும் திறன், எழுத்தாற்றல், நிறைவாற்றல், கற்கும் போது உடனுக்குடன் குறிப்பெடுக்கும் திறன், பாடங்களை படித்து புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை ஏற்படுத்தி, தேர்வு மீதான அச்சத்தை போக்குகின்றனர். படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிகோலுகின்றனர்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us