இன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா? துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

இன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா? துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.ஜனவரி 16,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

 

உங்களைப் போன்றே பல மாணவர்கள் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். இன்றும் அதிக வாய்ப்புகளை உள்ளடக்கி அமைதியாக முன்னேறிக் கொண்டிருக்கும் துறை கணிதம் தான். இன்று ஐ.டி., துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிதம் பயன்பெறுகிறது என்பதையும் நாம் கூற வேண்டும். வணிகத்திற்குத் தேவைப்படும் எண்ணற்ற தகவல்களை கணிதம் படித்தவர்கள் ஐ.டி., தொழில்நுட்ப உதவியால் பயனுள்ள தகவல்களாக மாற்றுகின்றனர்.

அடிப்படையில் கணிதம் பியூர் மேதமெடிக்ஸ் மற்றும் அப்ளைட் மேதமெடிக்ஸ் என்று  2 பிரிவுகளாக அமைகிறது. கணிதத் தியரி, கம்ப்யூடேஷனல் டெக்னிக், அல்காரிதம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி என்று பல்வேறு பயன்பாடுகளை கணிதவியலாளர்கள் உபயோகித்து பொருளாதார, அறிவியல், இன்ஜினியரிங், இயற்பியல் மற்றும் வணிகச் சேவைகளை தருகிறார்கள்.

கணிதம் படித்தவர்கள் கணித ஆசிரியர்களாக செல்வதைத் தான்  பொதுவாகக் காண்கிறோம். மேலும் கணிதத்தில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர்கள் பொருளாதார நிபுணர்கள், இன்ஜினியர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், இயற்பியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்களோடு இணைந்து  பணியாற்றுகிறார்கள். இதுதவிர தொழில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கணிதத் திறன் பெற்றவர்கள் கிரிப்டா அனலிஸ்டுகளாக பணியாற்றுகிறார்கள். மேத் ஆன்டர்பிரனர் என்னும் கணிதத் தொழில் முனைபவர்கள் பகுத்து ஆராயப்படாத தகவல்களை ஆய்வு செய்து உபயோகமான முடிவுகளாக மாற்றித் தருகிறார்கள். ஐ.பி.எம்., யாகூ, கூகுள் போன்ற நிறுவனங்களில் இப்பணிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

குறிப்பிட்ட கால இலக்குக்குள் பணி புரிவது, ஓவர்டைமாகப் பணியாற்றுவது, தகவல் மற்றும் பகுத்து ஆராயும் சிறப்புப் பணிகளில் ஈடுபடுவது போன்றவை கணிதவியலாளர்களின் சிறப்புப் பணித் தன்மையாகும். கணிதம் படிக்க வேண்டும்; அதிலேயே பணி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் வெறும் பட்டப்படிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அதில் பி.எச்டி., வரை படித்தால் தான் இது போன்ற சிறப்புப் பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

அரசுத் துறையில் பாதுகாப்புப் பிரிவில் கணிதம் பயின்றவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. சாப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஏரோஸ்பேஸ் மற்றும் பார்மாசூடிகல் நிறுவனங்களிலும் கணிதம் பயின்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பட்ட மேற்படிப்பு முடித்திருந்தால் போதும். ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் இதைப் படிப்பதை விட சிறப்பான கல்வி நிறுவனங்களில் திறம்பட முடித்தால் நல்ல வேலை வாய்ப்புகள் கட்டாயம் உருவாகும். ஐ.டி., மட்டுமே எதிர்காலமல்ல, எல்லாத் துறைகளிலுமே ஒவ்வொரு படிப்பு முடித்து திறன் பெற்றவருக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us