இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., நீட் தேர்வில் குளறுபடளுக்கு கண்டனம்! | Kalvimalar - News

இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., நீட் தேர்வில் குளறுபடளுக்கு கண்டனம்!மார்ச் 13,2018,10:37 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி மாநிலத்தில், எம்.பி.பி.எஸ்., நீட் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்க பணிகளை திட்டமிட்டு, மாநில அரசு முன்கூட்டியே துவங்குவதோடு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களை பெற முனைப்பு காட்ட வேண்டும்.

புதுச்சேரியில், ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி, ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 1000க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

டாக்டர் கனவில் உள்ள புதுச்சேரி மாணவர்கள், நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, பிளஸ் 2 தேர்வினை எழுத துவங்கி விட்டனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி, நாடு முழுவதும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., நீட் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்க பணிகளை திட்டமிட்டு, மாநில அரசு முன்கூட்டியே துவங்குவதோடு, பூதாகரமாகி வரும் பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும்.

பிராந்திய இட ஒதுக்கீடு

புதுச்சேரி பிராந்தியம்-75 சதவீதம், காரைக்கால்-18, மாகி-4, ஏனாம்- 3 சதவீதம் என, பிராந்திய இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியத்திற்கு 75 சதவீத இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அரசாணை ஏதும் கிடையாது.

காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்கள், தங்கள் பிராந்தியங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் மட்டுமின்றி, புதுச்சேரி பிராந்தியத்தின் சீட்டுகளையும் பெற முடியும். அதே நேரத்தில், புதுச்சேரி பிராந்திய மாணவர்கள், பிற பிராந்தியத்தின் ஒரு சீட்டை கூட பெற முடியாது.

இந்த வினோத இட ஒதுக்கீட்டினால், புதுச்சேரி பிராந்தியத்தின் சீட்டுகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் பறிபோய் வருகிறது. இப்பிரச்னை இந்தாண்டும் தொடர உள்ளது. இவ்விஷயத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், புதுச்சேரி பிராந்திய மாணவர்களின் சீட்டுகளை, பிற பிராந்திய மாணவர்கள பறித்து செல்வதை, வேடிக்கை தான் பார்க்க முடியும்.

கூடுதல் இடம் கிடைக்குமா

நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய சுகாதார துறையின் பொது கவுன்சிலிங்கிற்கு சென்று விட்டதால், 137 எம்.பி.பி.எஸ்., இடங்களை புதுச்சேரி மாநிலம் இழந்துள்ளது. எனவே மீதமுள்ள மூன்று தனியார் கல்லுாரிகளில் மட்டுமே சீட்டுகளை பெற முடியும். கடந்தாண்டு மூன்று தனியார் கல்லுாரிகளிலும் 450 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் இருக்கும்போது 165 சீட்டுகள் மட்டுமே பெற முடிந்தது.

இந்தாண்டு நிறைய மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்த தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கையை, முன் கூட்டியே எடுக்க வேண்டும்.

பொறுப்பு யார்

கடந்த 2016-17ம் ஆண்டு, புதுச்சேரியில் இருந்து நீட் எழுதிய 3 ஆயிரம் மாணவர்களில், 187 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பிற மாநிலங்கள் தேர்ச்சி பட்டியலை சுலபமாக பெற்ற போது, தேர்ச்சி பட்டியலை கூட உடனடியாக மாநில அரசு பெற முடியவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இ-மெயில் தவறாக அனுப்பிய கூத்தும் அரங்கேறியது. இதுபோன்று இந்த ஆண்டு நடைபெறாமல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், டில்லியில் முகாமிட்டு தேர்ச்சி பட்டியலை பெற வேண்டும்.

கட்டணம் என்ன

எந்த அரசு வந்தாலும் எம்.பி.பி.எஸ்., கல்வி கட்டணத்தை மட்டும் முன் கூட்டியே அறிவிப்பதில்லை. இந்தாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணத்தை முன் கூட்டியே வெளியிட வேண்டும்.

ஹெல்ப் டெஸ்க்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இவற்றை அரசு தரப்பில் இருந்து தீர்க்க எந்த முயற்சியும் இல்லை. மாணவர்கள் சேர்க்கையிலும் குழப்பத்தை தீர்க்க உதவிமையங்கள் இல்லை. நீட் மாணவர் சேர்க்கை சந்தேகங்களை தீர்க்க நிரந்தர ஹெல்ப் டெஸ்க், தொலைபேசி எண்களோடு ஏற்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைப்பு இல்லை

தனியார் மருத்துவக் கல்லுாரி, சென்டாக் நிர்வாகம், அரசு துறை அதிகாரிகள் இடையில் துளியளவும் ஒருங்கிணைப்பு இல்லை. மாநில கவர்னரே நேரில் சென்றபோது கூட, இந்த நிலைமை தான் ஏற்பட்டது. சாதாரண ஏழை நடுத்தர மாணவர்களின் நிலைமை பற்றி சொல்வதற்கு இல்லை. எங்கு முறையிடுது என தெரியாமல் பெற்றோர்களும், மாணவர்களும் அலைகழிக்கப்பட்டனர். எனவே மாணவர்களின் குறைகளை கேட்பதற்காக, அமைச்சர்கள் தலைமையில் குழு

வினை ஏற்படுத்த வேண்டும்.

நீட் ரிசல்ட் வந்த பிறகே ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் பணிகள் துவங்கப்படுகிறது. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, மாணவர் சேர்க்கையில் கால தாமத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., நீட் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்க பணிகளை அரசு திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்க வேண்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us