உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்! | Kalvimalar - News

உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்!பிப்ரவரி 13,2018,11:00 IST

எழுத்தின் அளவு :

துணைவேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல், குளறுபடிகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிய துணைவேந்தர் பதவி பற்றி எல்லாம் தினமலர் நாளிதழில் கட்டுரை வெளியானது. இதனை தொடர்ந்து மின்னஞ்சலில் வந்த கருத்துக்கள்...

நல்லவர்களை தேடாத தேடல் குழு
பல்கலை துணைவேந்தர் பதவி காலியானால் மூவர் கொண்ட தேடல் குழு அமைக்கப்படும். இதில் கவர்னர், சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகள் இடம் பெறுவர்.அந்த காலத்தில் தேடல் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து தகுதி, திறமையின் அடிப்படையில் அவர்களாக போய் நல்லவர்களை சந்தித்து இப்பணிக்கு உங்களை தேர்வு செய்ய உள்ளோம். வருவீர்களா? என அவரது விருப்பத்தை எழுத்துப் பூர்வமாக பெற்று அதன் பின் கவர்னர் மூலம் பெயரை வெளியிடுவர். 

எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அதன் பெயர் தான் தேடல் குழு. ஆனால் இன்று நடப்பதென்ன. ஒரு துணைவேந்தர் பதவிக்கு 150 - 250 பேர் விண்ணப்பிக்கின்றனர். அப்படியானால் அரசு என்ன செய்ய வேண்டும். தேடல் குழுவின் பணி அடிபட்டு போகிறது. எனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று துணைவேந்தர் தேர்வு என ஆண்டுதோறும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களை வரிசையாக ஒவ்வொரு பல்கலைக்கும் துணைவேந்தராக நியமனம் செய்யலாம். 

அதற்கு அடுத்துள்ள பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன்கள் என பல பதவிகளையும் இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளதே. எனவே மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை கருத்தில்கொண்டு மாற்றுங்கள் சட்ட திட்டங்களை. முயன்றால் முடியாதது உளவோ.
-சு.சுப்பிரமணியன், முதுநிலை கண்காணிப்பாளர் (ஓய்வு), மதுரை காமராஜ் பல்கலை.

கல்விச்சந்தை நடத்தும் வியாபாரிகள்
&'கல்வியில் சிறந்த தமிழ் நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ் நாடு&' என்றார் பாரதி. ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் கல்வி கடைச் சரக்காய் மாறிப்போனது.இதற்கு அரசியலும், அரசியல்வாதிகளின் குறுக்கீடும்தான் காரணங்கள். 50 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் யூனிவெர்சிட்டி துணைவேந்தராக லட்சுமணசாமி முதலியார், மதுரை பல்கலையின் துணைவேந்தர்களாக தெ.பொ. மீ., மு.வ., இருந்த போது உண்மையிலேயே தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்கியது. 

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர் பெருமக்கள் துணைவேந்தர் பீடத்தை அலங்கரித்தனர்.அவர்கள் நியமனம் கல்வித் தகுதியின் அடிப்படையில் இருந்தது. கல்வி காசுக்கு விலை போகவில்லை. கல்வித் தந்தை என்ற போலி போர்வையில் கல்விச்சந்தை நடத்தும் வியாபாரிகள் அப்போது இல்லை. ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் நடந்தன.

அதில் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பணப்பரிமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.ஆனால் திராவிட கட்சிகள் ஆளவந்த பின் நிலைமை சீரழிந்தது கண்கூடு. தமிழாசிரியர் பதவிக்கு நேர்காணலுக்கு வந்தவரிடம், &'&'கலித்தொகை&'&', &'&'குறுந்தொகை&'&' பற்றிய கேள்விகள் கேட்கப்படவில்லை; &'&'பெருந்தொகை&'&' உள்ளதா என்று மட்டுமே கேட்கப்பட்டது.

அன்று தொடங்கியது இந்த ஊழல் சாம்ராஜ்யத்தின் அத்தியாயம் இன்று வரை தொடர்கதையாய் நீண்டு கொண்டிருக்கிறது.முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், சசிகலா முன் துணைவேந்தர்கள் பலர் கைகட்டி நின்ற கண்கொள்ளாக் காட்சி அதற்குள் மறந்துவிடுமா என்ன? மதுரை காமராஜ் பல்கலையில் தகுந்த கல்வித் தகுதி இல்லாத போதும் அரசியல் செல்வாக்கால், சிலர் துணைவேந்தராக ஆக முடிந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை.

இப்போது சந்திசிரிக்கும் பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி தான் நாற்பது கோடி ரூபாய் தந்து துணைவேந்தர் பதவியை &'&'வாங்கி&'&'யதற்கு வாக்குமூலம் தந்தது மறந்திட முடியுமா.சரி. அதெல்லாம் போகட்டும். இனி இந்த கல்விச் சாலைகள் ஊழலில் இருந்து விடுபட்டு நல்ல முறையில் செயல்பட என்ன வழி என சிந்தித்தால் அதற்கு ஒரே தீர்வு ஊழலின் ஊற்றுக்கண்ணாய் இருக்கும் இந்த திராவிட கட்சிகளின் ஆட்டம் முடிவுக்கு வரவேண்டும். கல்வியாளர்கள் கை கோர்ப்போம். புதியதோர் கல்வி உலகம் செய்வோம்.
- முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், கல்வியாளர், மதுரை.

மதிப்பீடு நிறைந்த கல்வி அவசியம்
சின்ன இடத்தில் சின்ன ஊழல்; பெரிய இடத்தில் பெரிய ஊழல் என்றார் எழுத்தாளர் கல்கி. பெரிய பதவிகளுக்கு பணியமர்த்தம் செய்யும்போது பெரிய அளவில் பாதாளலோகப் பரிவர்த்தனைகள் நடப்பது இயல்பாகிறது. 

எள்ளை விதைத்தால் கொள்ளு முளைக்காது; பதவியை சேவை செய்யும் வாய்ப்பாக கருத வேண்டும். பெரிய மீனை போட்டு பிரமாண்ட மீனை பிடிக்கலாம் என லட்சிய கனவுடன் பதவிக்கு வந்தவர்களின் செயல்கள் அவர்களின் லட்சியப்படி தான் உள்ளன. இதில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. இந்த இடத்தில் ஒன்று சிந்திக்க வேண்டும். எல்லோரும் தம்மை விட்டு வேறு ஏதையோ சீர்த்திருத்த முயற்சி செய்கிறார்கள். சர்வகலா சாலையில் சகலமுமானவரின் பணி நியமனம் சரியான முறையில் நடந்தால் மட்டுமே அடுத்தடுத்த நியமனங்கள் அறப்படி நடக்கும். கொடுக்க முடிந்தவர்கள் கொடுத்து சாதிக்கிறார்கள். 

கொடுக்க முடிந்த அளவு என்றால் கொடுத்திருப்பேன்; கொடுக்க இயலாத தொகை; எனவே கொடுமையை ஒழிக்க போர்க்கோலம் பூண்டு புறப்படுகிறேன் என்பவர்களால் ஊழல் ஒழியாது.மத்திய மாநில பணிகளுக்கு பொதுப் போட்டி தேர்வுகள் நடத்தி பணி நியமனம் நடப்பது போல் பல்கலைகளிலும் பணிநியமனங்கள் நடந்தால் மகன், மருமகன், மச்சினன், சகலை, பேரன் என உறவினர்களுக்கு உரிமை கொண்டாடும் போக்கு மறையும். 

பல்கலை விதிமுறைகள் அரசியல் சாசனத்திற்கு நிகராக போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். விதிமுறை மீறல்களை விதியே என ஏற்றுக்கொள்ளாமல் செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆரம்ப கல்வியிலேயே மதிப்பீட்டு கல்வியை கொண்டு வந்தால் உயர்கல்வித்துறை உண்மை சார்ந்து மட்டும் இருக்கும். ஊழல் ஊற்றுக்கண்ணாக இருக்காது.
- ரா.நடராஜன், தமிழ் பயிற்றுனர், மதுரை.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us