மதுரை: “தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பம் செய்யலாம்” என, தொழிலாளர் உதவி கமிஷனர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பிளஸ் 1 முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைக்கு பாடநூல் நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்ட படிப்புக்கான கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
தொழில் பயிற்சி மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கும், பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிலாளர்களின் குழந்தைகள், தொழிலாளர் நல வாரியத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2012. விவரம் மற்றும் விண்ணப்பங்களுக்கு ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்: 718, சென்னை 6’ என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால்தலை ஒட்டிய உறையுடன் விண்ணப்பம் அனுப்ப வேண்டும், என்றார்.