8 லட்சம் பேர் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? | Kalvimalar - News

8 லட்சம் பேர் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? செப்டம்பர் 02,2015,10:08 IST

எழுத்தின் அளவு :

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை.


அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்படவில்லை. 


எனவே, பெரும்பாலான பட்டதாரிகள் தகுதித்தேர்வு எழுதி, தனியார் பள்ளியில் கூட சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் வரும் முன், தமிழக அரசு, புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவித்து, ஆசிரியர்களை நியமனம் செய்யும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


சிறப்புபாடங்களுக்கு மட்டும், 1,188 பேர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என, தெரிவித்தனர்.


1,390 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை:


பள்ளிக்கல்வி மானியத்தில், அரசின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 338 பாட வாரியான ஆசிரியர் பணியிடங்களில், 72 ஆயிரத்து, 843 பணியிடங்கள், இதுவரை நிரப்பப்பட்டு உள்ளன. பார்வையற்ற இளங்கலை பட்டம் பெற்ற, 654 பேருக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க, பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழங்குடியின பட்டதாரிகள், 906 பேருக்கு, 66 லட்சம் ரூபாய் செலவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி தரப்படும்.


மாற்றுத்திறனாளிகளின் இடைநிலை கல்விக்கு, அரசு பள்ளிகளில், 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். மேலும், சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு, 1,188 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்.


அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 530 விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, 192 உதவி பேராசிரியர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு, 605 உதவி பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்ப, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளின் நிர்வாக வசதிக்கு, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர் மற்றும் துப்புரவாளர் போன்ற இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


சட்டசபையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது, ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், பெருமளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அலட்சியமான நடவடிக்கை என்பது, அரசு பள்ளிகளின் தரத்தை குறைக்கவும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் சேர்க்கை குறையவும் வழிவகுக்கும். மேலும், அரசின் இந்த போக்கு, மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

super
by விமல்ராஜ்,India    2015-09-04 16:58:11 16:58:11 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us