கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தோண்டி எடுத்து முன்னேறுங்கள்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி | Kalvimalar - News

கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தோண்டி எடுத்து முன்னேறுங்கள்: டாக்டர் ஆர்.லட்சுமிபதிமார்ச் 01,2015,10:53 IST

எழுத்தின் அளவு :

நாகர்கோவில்: "கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தோண்டி எடுத்து முன்னேறுங்கள்; தடைகளை சாதனையாக மாற்றுங்கள்" என்று தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் லட்சுமிபதி மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவரது உரை

நான் இந்த கல்லூரியில் இன்டர்மீடியட் மற்றும் இளம் பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர். என்னுடைய தந்தையும் தினமலர் நாளிதழ் நிறுவனருமான டி.வி.ஆர்., எனது சகோதரர்கள் டாக்டர் ஆர்.வெங்கடபதி, டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த கல்லூரியில் படித்தவர்கள்.

என்னுடைய வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்தது இந்த கல்லூரி. 1809ம் ஆண்டு ஒரு கிராம தேவாலய பள்ளியாக துவக்கப்பட்ட இது தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.

மறக்க முடியாத தினம்

பட்டமளிப்பு தினம் என்பது மாணவர்களின் வாழ்நாள் முழுவதும் நினைவில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு நாள். இந்த சான்றிதழ், பணியில சேர, உங்களுடைய வளத்தை உருவாக்குவதற்கான ஒரு பாஸ்போர்ட்டாக விளங்குகிறது. ஆனால், பட்டம் பெற்றுவிட்டாலே, பணி உறுதி என கருதக்கூடாது. பணியில் அமர்த்துபவர் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சிறந்த வாழ்க்கைக்கான கல்வி

சிறந்த வாழ்க்கைக்கான அனுமதிச் சீட்டாகவும் உலகையே மாற்றி அமைப்பதற்கான அனுமதி சீட்டாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். கற்றதைப் பயன்படுத்தி, சிறந்த வாழ்க்கைக்காக உழைப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கான இடமாக உலகையும் மாற்றுங்கள்.

தனித்திறமை, கலாச்சாரம், ஒழுக்கம், அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றை வெளிக் கொணரும் வகையில், பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கலாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். கல்வி முறை, மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இந்தப் பட்டம், ஒரு வேலையைப் பெறவும், வருமானம் ஈட்டுபவராக மாறவும் உதவுவதாக இருக்க வேண்டும்.

வாழ்க்கைத் தரம்

கற்றல் என்பது எப்போதுமே முற்றுப்பெறுவதில்லை; இன்று பட்டம் பெறும் ஒருவர், கற்பதை நாளை நிறுத்தி விட்டால், அதற்குப் பிறகு அவர் கல்வி அறிவு இல்லாதவராக மாறிவிடுவார்.

வாழ்க்கைத் தரம் என்றால்...

1. அச்சமும் ஆபத்தும் இல்லாத அமைதியான சமுதாயம்.
2. விருப்பப்படி ஓட்டளித்தல்; ஓட்டுரிமையை விலை பேசாதிருத்தல்.
3. ஊழல் இல்லாத ஒரு சமுதாயம்.
4. மாசு இல்லாத சூழ்நிலை.
5. நியாயமான கட்டணத்தில் தரமான கல்வி.
6. நியாயமான சம்பளத்துடன் சிறந்த சூழ்நிலையில் பணி.
7. இயற்கை வளம் சூறையாடப்படுவதை தடுத்தல்.
8. எரிசக்தியை மிச்சப்படுத்துதல்.
9. வேலையில்லா நிலையை முழுமையாக அடைதல் போன்றவை.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கக்கூடிய, சினிமா, அரசியல் போன்றவற்றைத் தவிருங்கள்.

இலக்கு நிர்ணயுங்கள்

பொறுப்புகளை நிறைவேற்ற எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுங்கள். அப்துல் கலாம் கூறுவதுபோல், "இலக்கை நினைத்து கனவு காணுங்கள்; ஒவ்வொரு வினாடியும் அதைப் பற்றியே முழு மூச்சாக சிந்தியுங்கள்".

தன்னாட்சி

உங்கள் கல்லூரி தன்னாட்சி கொண்ட பழமையான கல்வி நிறுவனம். கல்லூரியின் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தை அமைக்க தன்னாட்சி உதவுகிறது. மதுரையில் தன்னாட்சி அந்தஸ்துடன் நான் கல்லூரி நடத்தி வருகிறேன். அனிமேஷன், திரைப்படம் தயாரிப்பு, கடல்சார் கல்வி, நெட் ஒர்க்கிங் போன்ற வேலைவாய்ப்பை அளிக்கும் படிப்புகள் அதில் உள்ளன. அனுபவ அறிவைக் கொடுக்கவும், சூழ்நிலைக்குத் தேவையான திறனை மாணவர்கள் பெறவும், தன்னாட்சி உதவுகிறது.

கட்டுப்பாடு

கட்டுப்பாட்டிற்கு உண்மையான முக்கியத்துவம் கொடுத்து வருகிறது உங்கள் கல்லூரி. முறைப்படுத்தப்பட்ட செயல்கள் மற்றும் வழக்கத்தின்படி செயல்படுவதே கட்டுப்பாடு என்பதாகும். ஒரு பணியில் சேர்வதன் மூலம், போதிய சுதந்திரம் கிடைக்கிறது.

உங்களுக்கோ, சமுதாயத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணியில் நீங்கள் இருக்க வேண்டும்.

சுயக்கட்டுப்பாடு, சுய வழிகாட்டுதலுடன் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வத்தோடு செயல்படுங்கள். உங்களுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமையட்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us