5 ஆண்டுகளாக அங்கீகாரம் இல்லாத படிப்பு; மாணவ, மாணவியர் உண்ணாவிரதம் | Kalvimalar - News

5 ஆண்டுகளாக அங்கீகாரம் இல்லாத படிப்பு; மாணவ, மாணவியர் உண்ணாவிரதம்டிசம்பர் 18,2014,12:53 IST

எழுத்தின் அளவு :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதுநிலை மருத்துவ இயற்பியல் படிப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பொறுமை இழந்த முதுநிலை மாணவ, மாணவியர், நேற்று மருத்துவமனை முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

புகார்:

காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, 1981ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், 2009ம் ஆண்டு மருத்துவ கல்வி இயக்ககம் மூலம் மூன்றாண்டு முதுநிலை மருத்துவ இயற்பியல் படிப்பு துவக்கப்பட்டது. இந்த படிப்புக்கு அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், ஒரே ஆண்டு மட்டும் அங்கீகாரம் அளித்தது.

கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறி அடுத்த ஆண்டு அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த, 2009ம் கல்வியாண்டு மாணவர்கள் மட்டுமே அங்கீகாரத்துடன் பட்டப்படிப்பை முடித்து வெளியே சென்றுள்ளனர். எனினும், அங்கீகாரம் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் நடத்தியுள்ளது.

இந்த படிப்பிற்கு எப்போது அங்கீகாரம் கிடைக்கும் என்ற தகவலை மருத்துவமனை நிர்வாகம் முறையாக தெரிவிப்பதில்லை என்று கூறி, மருத்துவ இயற்பியல் துறை மாணவர்கள், நேற்று மருத்துவமனை வாசலில் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அப்போது, மருத்துவ இயற்பியல் படிப்பிற்கான அங்கீகாரத்தை பெறவும், துறை தலைவரை கண்டித்தும், முழக்கங்களை எழுப்பினர்.

அங்கு வந்த மருத்துவமனை இயக்குனர் கிரிதரன், மாணவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, துறை தலைவர் மீது அடுக்கடுக்காக புகார்களை மாணவர்கள் கூறினர். துறை தலைவரை இடமாற்றம் செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டம்:

போராட்டம் குறித்து முதுநிலை மருத்துவ இயற்பியல் துறை மாணவர்கள் கூறியதாவது: கல்லூரியில் பயின்ற மாணவர்கள், தங்கள் படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல், வேலைவாய்ப்பு இன்றி தங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது, 14 பேர் பயின்று வருகின்றனர்.

எங்கள் துறைக்கான அங்கீகாரத்தை அணுசக்தி கட்டுப்பாடு வாரியம், கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வருகிறது. மாணவர்கள் பயில வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை, விடுதி போன்ற எந்த உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததாலேயே, அங்கீகாரம் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்தும் வந்த எங்களுக்கு, அங்கீகாரம் பெற்ற படிப்பை, மத்திய - மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் கிடைக்குமாம்!

அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் கிரிதரன் கூறுகையில், ”போதுமான உட்கட்டமைப்பு இல்லாத காரணத்தாலேயே, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், மருத்துவமனையில் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அடுத்த மாதம் மருத்துவ இயற்பியல் துறைக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

Let me know Engineering And M.B.B.S course Age limit? I know 17 Years must complete as on 31 Dec or 31 Jan. They calculate either 31 Dec Or 31 January?
by Manzur,India    2014-12-18 16:22:56 16:22:56 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us