மாணவர்களை மனம் உருக வைத்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி! | Kalvimalar - News

மாணவர்களை மனம் உருக வைத்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!நவம்பர் 28,2014,11:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தினமலர் நாளிதழ், டி.வி.ஆர்., அகாடமி நடத்திய, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மனநல பயிற்சியாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின், கல் மனதையும் கரைக்கும் பேச்சால், மாணவர்கள், மனம் உருகி கண்ணீர் மல்கிய காட்சி, மெய்சிலிர்க்க வைத்தது.

மனநல பயிற்சியாளர், தன்னம்பிக்கை குறித்து பேச வரும் போது, சில மாணவர்கள், ஆரவாரமுடன் கைதட்டி, பேச்சை கவனித்த மாணவர்களுக்கு இடையூறாக இருந்தனர். ஆனால், அவர், தியான வழியில் தன் பேச்சை தொடர்ந்ததால், அரங்கமே அமைதியானது.

அவர் பேசியதாவது: இன்றைய சமூகத்தில், ஒவ்வொருவர் மனதையும், நான்கு விதமான பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அந்த பூச்சிகள், உங்கள் மனதையும் அரித்தபடிதான் இருக்கின்றன. சுயநலம், நன்றி கெட்டத்தனம், உணர்ச்சியற்ற தன்மை, எடை போடுதல் ஆகியவையே அவை.

சுயநலம்: நீங்கள் எல்லாம் வறுமையில் இருந்து வந்திருப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியாது என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நானும், உங்களைப் போல, மாநகராட்சி பள்ளியில் படித்துதான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன். வறுமையில் முன்னேறுவது பெரிய விஷயம் இல்லை. சுயநலத்தால்தான் முன்னேற முடியாது.

ஒரு கதை... வறுமையில் உள்ள அப்பா இல்லாத ஒரு குடும்பத்தில், அம்மா தன் நிலத்தை விற்ற பணத்தில், மகளுக்குப் பிடித்த தங்க கம்மலை வாங்கிக் கொடுக்கிறார். அதன் பின்னும், அம்மாவிடம் பணம் இருப்பதை அறிந்து, மற்றொரு கம்மல் கேட்கிறாள் மகள். இப்படித்தான், இன்றைய மாணவர்கள் சுயநலத்துடன் இருக்கின்றனர். ஆனால், அந்த தாய்க்கும் ஆசைகள் இருக்கும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூட உங்களுக்கு தோன்றாது. அப்படி இருந்தால், கண்டிப்பாக, உங்களால் முன்னேற முடியாது.

நன்றி கெட்டத்தனம்: பெரும்பாலான அப்பாக்கள் குடிப்பதாகவும், அவர்களை வெறுப்பதாகவும், மாணவர்கள் கூறுகின்றனர். குடிப்பது தவறுதான். ஆனால், அந்த அப்பாக்கள் குடிப்பதற்கு பின்னால், பல பிரச்னைகள் இருக்கலாம். அதைப்பற்றி ஆராய, யாருக்கும் மனம் வராது. பலர், உடல் உழைப்பின் களைப்பு தீரவும், பலர் ஏமாற்றங்களை மறக்கவும் என, பல்வேறு காரணங்களுக்காகவும் குடிக்கலாம். ஆனால், அந்த அப்பாக்கள் உங்களுக்கு செய்யும் செயல்களை எண்ணிப் பார்த்தது உண்டா?

இன்னொரு கதை... ஒரு அப்பா, ஒரு துணிக் கடைக்குச் செல்கிறார். அவருக்குப் பிடித்த சட்டையைப் பார்க்கிறார். அதை வாங்கப் போகும்போது, மகன் காலில் இருக்கும், பிய்ந்த செருப்பு ஞாபகம் வருகிறது. அவர், உடனே செருப்பு வாங்கி வருகிறார். இப்படி உள்ள அப்பாக்களைத்தான், நீங்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; படிக்க மறுக்கிறீர்கள்.

உணர்ச்சியற்ற தன்மை: உங்களுக்காக, இரண்டு ஜீவன்கள் உருகியபடி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளமையில் வறுமையை விட, முதுமையில் வறுமையே கொடுமையானது. அந்த வறுமையை விரட்ட, நீங்கள் படிக்க வேண்டும். இல்லையேல், உங்கள் தாயைப் போல, எங்கேனும் வீட்டு வேலை செய்துகொண்டோ, தந்தையை போல குடித்துக் கொண்டோதான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள். உணராமல் இருப்பதுதான், உணர்ச்சியற்ற தன்மை.

எடை போடுதல்

மாணவர்களே... இப்போது, நீங்கள் இருக்கும் சூழலையும், பின் இருக்கப்போகும் சூழலையும் எடை போடுங்கள். தியான நிலையில், கண்களை மூடிக்கொண்டு, மனதால், நான் சொல்லும் இடங்களுக்கு வாருங்கள்.

இப்போது, உங்கள் வீட்டுக்கு போகிறீர்கள். அங்கு, வறுமையின் பிடியில் உங்கள் பெற்றோர், ஏதோ ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள், அவர்களை கவனிக்காமல், கிரிக்கெட் விளையாடவோ, திரைப்படம் பார்க்கவோ செல்கிறீர்கள்.
திரும்பி வந்து, உணவை குறை சொல்கிறீர்கள். உங்களுக்கு 3 வயதாக இருக்கும்போது, உங்களுக்கு உடல் நலமில்லை. உங்களை துாக்கிக் கொண்டு, ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடுகின்றனர். அவர்களைத்தான், இப்போது நீங்கள் திட்டுகிறீர்கள்.

உங்கள் தவறுகளை உணராவிட்டால், உங்களால், எதையும் செய்ய முடியாது. இப்போது, காலங்கள் ஓடி விட்டன. நீங்கள், வசதியான வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள், பெற்றோரின் கால்களை, உங்கள் மடியில் வைத்துக் கொண்டு, நீங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர்களும் மன்னித்து விடுகின்றனர்.

அதேபோல், அவர்கள் சூழ்நிலையால் செய்த தவறுகளையும் நீங்களும் மன்னித்து விடுங்கள். இப்போது, ஆண்டவனிடம் வேண்டுங்கள். இறைவா, என் குடும்பத்தை காப்பாற்றி நல்ல நிலைக்கு வர, நான் தினமும், மூன்று மணி நேரம் படிக்க வேண்டும். அதை புரிந்து படிக்கும் மன நிலையை எனக்கு அருள வேண்டும்.

நான், பிளஸ் 2வில் ஜெயிப்பேன். அதற்கான, மன உறுதியை கொடு என, வேண்டிக் கொள்ளுங்கள். இப்போது, ஜெயித்து விட்டீர்கள். மெதுவாக, கண்களைத் திறந்து அருகில் இருப்பவர்களைப் பார்த்து ஆல் தி பெஸ்ட் சொல்லி அணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அவர், இடை இடையே மாணவர்களுக்கு நெருக்கமான கதைகளை சொன்னதால், பெரும்பாலான மாணவர்கள், கண்ணீர் மல்கி, மனத்தால், பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதை உணர முடிந்தது.

புத்தகம் பரிசு: கடந்த ஆண்டு, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல், மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்கு, தினமலர் நினைவுப் பரிசையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, அக்னிச் சிறகுகள் புத்தகத்தையும், தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கி, வாழ்த்தினார்.

பரிசு பெற்றவர்கள்

1,173 மதிப்பெண் பெற்று, முதல் இடம் பிடித்த ஆனந்தி; 1,168 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம் பிடித்த சவுஜன்யா ஆகியோர், சைதாபேட்டையில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்.

1,160 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பிடித்த அனுசுயா, திருவொற்றியூரில் உள்ள, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.

வழிகாட்டியவர்கள்

காலை: இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியம் - வேதியியல்.

இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோபி ஆனந்த் - இயற்பியல்.

பி.ஏ.கே., பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜ் - கணிதம்.

சர்.எம்.சி.டி.எம்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சவுந்தரபாண்டியன் - உயிரியல்.

மாலை: இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சீனிவாசன் - வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல்.

பி.ஏ.கே., பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரத்தன் ராஜ் - வணிக கணிதம்.

இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரமேஷ் - கணினி அறிவியல்.

செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவி - பொருளியல்.

காலை, மாலை நிகழ்ச்சிகளை, தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர், மதியழகன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு முன்: சில தினங்களுக்கு முன், தினமலர் நாளிதழ் பார்த்தேன். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு வந்த பலருக்கு, இடம் கிடைக்காமல் வெளியில் நின்றனர் என்ற செய்தி இருந்தது. அதனால், இன்று, எங்கள் பள்ளி மாணவர்கள், முதலில் வந்து விட்டோம். இந்த நிகழ்ச்சியில், நல்ல அனுபவம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
 
- ராஜேஸ்வரி, மடுவாங்கரை

பத்தாம் வகுப்பு படித்தபோது, இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். அதனால், ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண் கிடைத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனியார் பள்ளிகளுக்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற என் தோழி, என்னை கட்டாயப்படுத்தினாள். இப்போது வந்திருக்கிறேன். நிகழ்ச்சியில்தான், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக உள்ளதா என்பது புரியும்.

- அருணா, மடுவாங்கரை

இந்த நிகழ்ச்சிக்கு, ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மாணவர்களை அழைத்து வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்து போனால், அரையாண்டு தேர்விலேயே, மாணவர்களின் மதிப்பெண்ணில், நல்ல மாற்றம் தெரியும். அவர்கள், இந்த நிகழ்ச்சியின் மூலம், பொதுத் தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

- சாந்தி, ஆசிரியை

ஆசிரியர்கள் பேட்டி: இன்று தான், எங்கள் மாணவர்களின் முழு வருகை உள்ளது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு, மாணவர்கள் இடையே, தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும், இங்கு வெறும் பாடங்களை சொல்வதுடன் நின்று விடாமல், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டுகின்றனர்.

- அர்ச்சனா, அமைந்தகரை

கடந்த ஐந்து ஆண்டுகளாக, எங்கள் பள்ளி மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால், தேர்ச்சி பெற்றுள்ளனர். தன்னம்பிக்கை குறித்து பேசிய, கீர்த்தன்யா, மாணவர்களின் மன நிலைக்கு இறங்கி வந்து பேசினார். அவரது பேச்சு, மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

- ஜெயஸ்ரீ, அமைந்தகரை

வகுப்புகளில் மட்டும், பாடங்களை படித்த மாணவர்களுக்கு, தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி ஒரு புத்துணர்வை அளித்துள்ளது. இங்கு, அளிக்கும் புத்தகங்களை பெறுவதற்காகவே, பல மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். அதை பயன்படுத்தி வெற்றியும் பெறுகின்றனர்

- பலராமன், சைதாப்பேட்டை

Advertisement

வாசகர் கருத்து

in chrompet when is next jaithu kattuvom for 12th std. please tell me the timinig.
by N.Evangelin Glory,India    2014-11-28 19:07:19 19:07:19 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us