மாணவியருக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் உருவாகும் நிலை: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி | Kalvimalar - News

மாணவியருக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் உருவாகும் நிலை: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திநவம்பர் 27,2014,10:56 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மாணவியருக்கான பிரத்யேக, ஜெயித்துக் காட்டுவோம் உருவாக்க வேண்டிய நிலை உண்டாகும் என, தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நேற்று, சென்னை பல்கலைக் கழக, நூற்றாண்டு விழா அரங்கில் காலை 9:00 மணி, மதியம் 1:00 மணி என, இரண்டு பகுதிகளாக நடந்தது.

அதில் தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் மாணவ, மாணவியரை பார்க்கும்போது, மாணவியரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இனி, எல்லா பதவிகளும், அவர்களுக்கே தந்தாக வேண்டும் போல் இருக்கிறது.

மாணவியருக்காக, போதிய இடம் கொடுக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு, மாணவியருக்காகவே பிரத்யேகமாக, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்த வேண்டியிருக்கும் போல் இருக்கிறது. மாணவ, மாணவியரே... ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டால், நீங்கள் கூடுதலாக, 20 சதவீத மதிப்பெண்களை பெறலாம்; வாழ்த்துகள். இவ்வாறு, அவர் பேசினார்.

வெற்றி பரிசு

கடந்த ஆண்டு, சென்னை மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, தினமலர் நினைவு பரிசையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, அக்னிச் சிறகுகள் புத்தகத்தையும் வழங்கி, தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி கவுரவித்தார்.

திடீர் பரிசு

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியின் இடையில், மாணவர்களிடம், கணக்குப் பாடத்தில் இருந்து, சில கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கு, சரியான விடையளித்த, அப்துல் ஆரீப், லட்சுமி, ரபியா பானு ஆகியோருக்கு, அக்னி சிறகுகள் புத்தகத்தை, தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கி கவுரவித்தார்.

மதிய உணவு

நிகழ்ச்சியில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களும், திரளாக வந்திருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும், புளூ பிரின்ட், வினாத்தாள் புத்தகம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன. காலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர், மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற மாணவர்கள்

* புலியூர் - சென்னை மேல்நிலைப் பள்ளியில் படித்து, 494 மதிப்பெண்களைப் பெற்று, முதல் இடம் பிடித்தவர், வெங்கட் பிரசாத்.

* புல்லா அவென்யூ - சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, 493 மதிப்பெண்களைப் பெற்று, இரண்டாம் இடம் பிடித்த மாணவி, மகாலட்சுமி.

* எம்.எம்.டி.ஏ., சென்னை உயர்நிலைப் பள்ளியில் படித்து, 491 மதிப்பெண்களை பெற்று, மூன்றாம் இடம் பிடித்த மாணவி தரணி.
வழிகாட்டிய ஆசிரியர்கள்: நேற்றைய காலை மற்றும் மாலை நிகழ்ச்சிகளில், பாட வாரியாக, வினாத்தாள் அமைப்பு முறை, படிக்கும் போதும், தேர்வெழுதும் போதும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, அந்தந்த பாட ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

அவர்களின் விவரம் வருமாறு;

* இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் - அறிவியல்,

* சென்னை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முனிராமையா - ஆங்கிலம்.

* பி.ஏ.கே., பழனிசாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் - கணிதம்.

* அரியலூர் நாயகனைப் பிரியாள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜென்னீஸ் - சமூக அறிவியல்.

* ராமகிருஷ்ணா உறைவிட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தாயுமானவன் - தமிழ். நிகழ்ச்சிகளை, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, மதியழகன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் விவரத்தை, தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. நேர மேலாண்மை குறித்து, ஆசிரியர்கள் விளக்கியது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

- சசிகுமார், புலியூர் மேல்நிலைப் பள்ளி

கடந்த ஆண்டு, என் அக்கா பத்தாம் வகுப்பு படித்த போது, ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், 430 மதிப்பெண் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு, நானும் வர வேண்டும் என, அக்கா தான் வற்புறுத்தினார். அதனால், முதல் ஆளாக இங்கு வந்துள்ளேன்.

- சங்கீதா, புலியூர் மேல்நிலைப் பள்ளி

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு, எங்கள் பள்ளி மாணவர்களை, ஒவ்வொரு ஆண்டும் அழைத்து வருகிறோம். கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எங்கள் பள்ளி மாணவன், வெங்கட் பிரசாந்த், மாநகராட்சி பள்ளி அளவில், முதல் இடம் பிடித்தான். இந்த ஆண்டு, எங்கள் மாணவர்கள்தான் முன்னதாகவே வந்துள்ளனர். இந்த ஆர்வமே, எங்கள் மாணவர்கள் முதல் இடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

- சாந்தி, புலியூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்

நான், கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அப்போது கொடுத்த, புளூ பிரின்ட் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை, நீங்களும் பின்பற்றி படிங்க. எனக்கு எல்லா பாடத்திலேயும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. ஆனால், உங்களால் எடுக்க முடியும். வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு படித்து, வெற்றி பெற என் வாழ்த்துகள்.

- மகாலட்சுமி, பரிசு பெற்ற மாணவி

எங்கள் பள்ளியில், இந்த அளவுக்கு விரிவாகவும், பாட வாரியாகவும் ஆலோசனைகளை வழங்கவில்லை. இந்த நிகழ்ச்சியில், பாடவாரியாக, எந்தெந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை விளக்கினர். அடுத்த ஆண்டு, இதே மேடையில், பரிசு வாங்க வேண்டும் என நினைத்துள்ளேன்.

- மகாலட்சுமி, கோடம்பாக்கம், மேல்நிலைப் பள்ளி மாணவி

எங்கள் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மிகவும் ஏழை பிள்ளைகள். அவர்களில் பலர், தங்களின் குடும்ப சூழலை எண்ணி, தன்னம்பிக்கை குன்றி இருப்பர். அவர்களை, இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரும்போது, வறுமையிலும் சாதனை படைத்திருக்கும் மாணவர்களை நேரடியாக பார்த்து, அவர்களின் பேச்சை கேட்கின்றனர். அதனால், தன்னம்பிக்கை பெறுகின்றனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, ஊக்கப்படுத்தும், தினமலர் நாளிதழுக்கு நன்றி.

- ஜெயந்தி, தி.நகர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியை

கடந்த இரு ஆண்டுகளாக, தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறோம். மேலும், இங்கு அளிக்கப்படும் புத்தகத்தை, முழுவதுமாக படிக்க வைக்கிறோம். இதனால், கடந்த இரு ஆண்டுகளாக, எங்கள் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெறுகிறது. இந்த ஆண்டும், நூறு சதவீதம் தேர்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

- ஜெயமாலா, சேத்துப்பட்டு

நான்கு சுவற்றில், தினமும் ஒரே ஆள் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் சலிப்படைகின்றனர். புதிதாக இன்னொருவர், வேறு விதமாக சொல்லும்போது, மாணவர்கள் கவனிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

- ஆண்டாள், புளியந்தோப்பு

தேர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி தேர்வின்போது, நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது என்று சொல்லுகின்றனர். மேலும், பர்வீன் சுல்தானா போன்றவர்கள் பேச்சு, மாணவர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் உள்ளது.

- ராஜ்குமார், கொருக்குப்பேட்டை.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us