முடங்கி கிடக்கிறதா பள்ளி வாகனங்களுக்கான கண்காணிப்புக் குழு? | Kalvimalar - News

முடங்கி கிடக்கிறதா பள்ளி வாகனங்களுக்கான கண்காணிப்புக் குழு?நவம்பர் 24,2014,16:30 IST

எழுத்தின் அளவு :

பொன்னேரி: பள்ளி வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு, செயல்படாமல், முடங்கி கிடப்பதாகவும், அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியார் பள்ளி வாகனங்களை கண்காணிக்க, பொன்னேரி ஆர்.டி.ஓ., தலைமையில், கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவில், பொன்னேரி டி.எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

குழுவின் பணி

* மூன்று மாதத்திற்கு ஒரு முறை குழு கூடி, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆராய்தல்.

* மோட்டார் வாகன சட்டம், பிரிவு 84ன் படி, பறக்கும் படையாக செயல்படுவதற்கும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், பிரிவு, 207ன் கீழ், நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

* வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை இக்குழுவால் தணிக்கை செய்தல்.

* குழுவின் தணிக்கை அறிக்கையை, வாகன ஒட்டுனரின் புத்தகத்தில் பதிந்து, குழு சுட்டி காட்டும் குறைகள், பள்ளி நிர்வாகம் மற்றும் வாகன ஓட்டுனரால் நிவர்த்தி செய்யப்பட்டதா? எனவும் ஆராய்தல்.

பள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகள்

* பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாமல், பாதுகாப்பு விதிகளை மீறி, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுத்தல்.

* பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்தல்.

* பள்ளியின் அனுமதியுடன், அரசு விதிமுறையை பயன்படுத்தி, இயக்கப்படும் வாகனங்கள் குறித்து, குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்துதல்.

* பள்ளிகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களில், ஒரு உதவியாளர் அவசியம் இருத்தல் வேண்டும்.

எச்சரிக்கை

மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிப்பதில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுகின்றன. பள்ளி வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவும், செயல்படாமல் முடங்கி கிடப்பதால், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொன்னேரி கோட்ட அலுவலர் மேனுவல்ராஜ் கூறுகையில், "கல்வியாண்டு துவக்கத்தில் அனைத்து பள்ளி வாகனங்களையும், குழு ஆய்வுசெய்து, அனுமதி பெற்ற பின்னர்தான் இயக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன் நடந்த விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், சுழற்சி முறையில் கண்காணித்து வருகிறோம். விதிமுறைகளுக்கு மாறாக, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எதிர்பார்ப்பு

கடந்த 15ம்தேதி, பொன்னேரி அடுத்த, தச்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு, மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயம் அடைந்தனர். பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், விதிகளை மீறி தனியார் பள்ளிகள் இயக்கும் வாகனங்களை, கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement

வாசகர் கருத்து

அதிக கண்காணிப்பு பலனை தரும். அதே நேரத்தில் லஞ்சதிற்கான காரணமும் கூட.
by charles,India    2014-11-25 14:07:30 14:07:30 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us