சிறப்பான அறிவுரைகளைக் கேட்டுப் படித்தால் கூடுதல் மதிப்பெண்கள்: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி | Kalvimalar - News

சிறப்பான அறிவுரைகளைக் கேட்டுப் படித்தால் கூடுதல் மதிப்பெண்கள்: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திநவம்பர் 24,2014,11:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மாணவர்கள், சிறப்பான ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டுப் படித்தால், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்களை பெற முடியும் என, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தினமலர் நாளிதழ், டி.வி.ஆர்., அகாடமி சார்பில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அறிவியல் பிரிவு: சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. காலை, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம், கலைப்பிரிவு மாணவர்களுக்கும், தனித்தனியே நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான மாணவர்கள், அதிகாலை முதலே, பல்கலைக்கழக விழா அரங்கத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பமாகும்போது, அரங்க கொள்ளளவை விட அதிக மாணவர்கள் வந்ததால், நிறைய மாணவர்களும் பெற்றோரும், வெளியில் இருந்தே குறிப்பெடுத்தனர்.

அரங்கத்திற்குள் இருந்த அனைத்து மாணவர்களுக்கும், புளூ பிரின்ட் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய, ஜெயித்துக் காட்டுவோம் புத்தகம், நோட்டு, பேனா, மாதிரி வினாத்தாள் போன்றவை வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அளவில், பிளஸ் 2 -வில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, தினமலர் நிறுவனர் ராமசுப்பையரின் உருவம் பொறித்த வெள்ளிப் பதக்கங்களையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய புத்தகங்ளையும் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

பின், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தும்போது, மாணவர்கள் அதிக ஆர்வமுடன் வருகின்றனர். அவர்களுக்கு அரங்கில், போதுமான இடவசதி இல்லாததால், பல மாணவர்கள், வெளியில் இருந்து கூட குறிப்பெடுக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் மழையில் நனைந்தபடியே குறிப்பெடுத்தனர்.

கிராமப்புற மாணவர்கள்: நாங்கள் 15 ஆண்டுகளுக்கு முன், வறுமையின் காரணமாக, தென்னிந்தியாவில் உள்ள கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டிப்போட முடியாமல் பின்தங்குவதை தவிர்ப்பதற்காகவே, இந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை ஆரம்பித்தோம். அது இந்த அளவுக்கு வளர்ந்து வரும் என்பதை நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

எவ்வளவோ சோதனைகளுக்கு இடையிலும், இந்த நிகழ்ச்சியை மிகுந்த பொருட்செலவில் நாங்கள் நடத்தி வருகிறோம். மாணவர்கள், சிறப்பான ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு படித்தால், 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான மதிப்பெண்களை பெற முடியும். மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பரிசு பெற்ற மாணவர்கள்:சென்னை மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்கள்: அண்ணா நகர், அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி, பிரீத்தி 1,185, கோபாலபுரம் டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளி மாணவியர் அறிவரசி, மதுமிதா 1,185, பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 1,185.

சென்னை மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள்: கோபாலபுரம் டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளி மாணவி, மணிஷா 1,183, பழைய வண்ணாரப்பேட்டை கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரவீன் சாய்ராம் 1,183 ஆகியோர், பரிசு பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த அம்பத்துார், சேது பாஸ்கர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பூஜா 1,189 ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us