‘கிராமப்புற மாணவர்களும் சாதிக்கவே ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி’: ’தினமலர்’ ஆசிரியர் | Kalvimalar - News

‘கிராமப்புற மாணவர்களும் சாதிக்கவே ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி’: ’தினமலர்’ ஆசிரியர்அக்டோபர் 20,2014,12:15 IST

எழுத்தின் அளவு :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று, ’தினமலர் கல்விமலர்’ நடத்திய, ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் கலந்து கொண்ட, பத்து மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு ’தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து கூறினார்.

தமிழகத்தில், பத்து மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்கும், தேர்வில் அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது என்பது குறித்தும், தேர்வு குறித்த பயத்தை போக்குவதற்கும், ’தினமலர் கல்விமலர்’ சார்பில் ஆண்டுதோறும், அனைத்து மாவட்டங்களிலும், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 14வது ஆண்டாக, நேற்று காஞ்சிபுரத்தில், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 4:00 மணி முதலே மாணவ, மாணவியர், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள, அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்திற்கு வர துவங்கினர். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு அரங்கமும் நிரம்பி வழிந்தது. அரங்கிற்கு வெளியேயும் மாணவ, மாணவியர் அமரவைக்கப்பட்டனர். காலை 8:45 மணிக்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி துவங்கியது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ’தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மாணவ, மாணவியருக்கு வாழ்த்து கூறி பேசியதாவது: என் அருமைக்குரிய மாணவர்களே, மாணவிகளே, விடாது மழை பெய்தாலும், நீங்கள் வந்து அமர்ந்திருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாணவிகள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். இது வருங்காலத்தை காட்டுகிறது. கல்வியில் அவர்கள் வேகமாக முன்னேறி, சமுதாயத்தில் அவர்கள் பல பொறுப்புகளை ஏற்க போகிறார்கள். காஞ்சிபுரத்தில், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை நாங்கள் 14 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருகிறோம்.

கிராமப்புறத்து மாணவர்கள், மாணவியர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கிறார்கள். குறிப்பாக, பின்தங்கிய வகுப்பு மாணவர்கள், கல்வியில் முன்னேற முடியவில்லை. சிறப்பு வகுப்பு வைத்து படிக்க முடியவில்லை. பணக்கார குழந்தைகளுடன் போட்டி போட முடியவில்லை என்ற சிக்கல்களை உணர்ந்து கிராமப்புறக் குழந்தைகளுக்கு நாம், நம்மால் செய்ய முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த ’ஜெயித்துக் காட்டுவோம்’நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

பெரும் பணச்செலவில் நடத்துகிறோம். நீங்கள் எல்லோரும் பொறுமையாக இருந்து பாடத்தை கேளுங்கள். இந்த நிகழ்ச்சியில், நான் கடந்த 14 ஆண்டுகளாக பார்ப்பது என்னவென்றால், சிறந்த ஆசிரியர்கள் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சென்னையில் சிறந்த பள்ளி ஆசிரியர்கள். அவர்களே தேர்வாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கின்ற பாடங்களை நீங்கள் குறிப்பெடுத்து, அதை முக்கியமாக படித்தாலே, 20 மதிப்பெண் கூடுதலாக வாங்கலாம். 20 மதிப்பெண் கூடுதலாக வாங்கும்போது, உங்கள் வாழ்க்கையின் ஆதாரமே மாறிப்போகும்.

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும்; பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும். அதாவது, எனது வேண்டுகோள் என்ன வென்றால், பொறுமையாக இருந்து, குறிப்புகளை எடுத்துக் கொண்டு, நன்றாக படியுங்கள். விடாத மழையிலும், நீங்கள் வந்திருப்பதை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ’தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், ஆங்கில ஆசிரியர் முனி ராமையா, தமிழ் ஆசிரியர் தாயுமானவன், கணித ஆசிரியர் சுரேஷ், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஷ் ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி எனவும், தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி எனவும் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினர்.

காலை 11:40 மணிக்கு பத்தாம் வகுப்பு நிகழ்ச்சி முடிந்தது.அதைத் தொடர்ந்து, வரிசையாக அணிவகுத்து நின்ற, பிளஸ் 2 மாணவ, மாணவியர், பகல் 12:15 மணிக்கு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். 12:35 மணிக்கு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி துவங்கியது.

வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆசிரியர் சீனுவாசன், இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்த், வேதியியல் ஆசிரியர் சரவணன், கணித ஆசிரியர் ராஜு, உயிரியல் ஆசிரியர் சவுந்திரபாண்டியன், கணினி அறிவியல் ஆசிரியர் ரமேஷ், வணிக கணித வியல் ஆசிரியர் ரத்தன்ராஜு ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளை பிளஸ் 2 மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

’தேர்வு பயத்தை போக்குகிறது’

பாபு, பிள்ளையார்பாளையம்: தினமலர் கல்விமலர், ’ஜெயித்துக் காட்டு வோம்’ நிகழ்ச்சியின் பலனாக, என் மூத்த மகள் பத்தாம் வகுப்பில் தேர்வு பயம் நீங்கி, 454 மதிப்பெண்கள் பெற்றார். அதேபோல், என் இளைய மகளும் இந்த நிகழ்ச்சி மூலமாக, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

வெங்கடேசன், கோட்டூர்: ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வழங்கும் குறிப்புகளை, மாணவர்கள் கவனமாக கடைபிடித்து, நிச்சயமாக பின்பற்றினால், அதிக மதிப்பெண்கள் பெறலாம். குறிப்பாக, எந்தெந்த வினாக்களுக்கு எத்தனை மணி நேரம் எடுத்து கொள்ளலாம் என, கூறுவது நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

அமுல், நத்தப்பேட்டை: பொதுத்தேர்வு பயத்தினால், மாணவர்கள் அதிக அளவு பிழை செய்கின்றனர். இந்த பிழை ஏற்படாமல் இருக்க, தினமலர் ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி உறுதுணையாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு, வழி வகுக்கும்.

ரவி சென்னை போரூர்: இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கும் குறிப்புரை மற்றும் தன்னம்பிக்கையான பேச்சு, படிக்காத மாணவர்களுக்கும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நிகழ்ச்சி மூலம் என் மகனின் தேர்வு பயம் நீங்கி கூடுதல் மதிப்பெண்கள் எடுக்க வழிவகுக்கும்.

’வழிகாட்டி புத்தகம், வினா புளூ பிரிண்ட்’
* ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை, ’தினமலருடன்’ இணைந்து, பூர்விகா மொபைல், பச்சையப்பாஸ் சில்க்ஸ், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோழன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், தூசி பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீசப்தகிரி பொறியியல் கல்லூரி, சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, பெர்ரி பொறியியல் கல்லூரி ஆகியவை நடத்தின.
* ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய, ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள் அடங்கிய புளூ பிரிண்ட் புத்தகம், குறிப்பெடுக்க நோட்டு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
* கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், வந்திருந்த மாணவர்கள், நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை குறிப்பெடுத்துக் கொண்டனர்.
* 10ம் வகுப்பு மாணவியர், ஏராளமானோர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
* ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொள்வதால், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளாகத்தில் தீயணைப்பு வாகன மும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us