பள்ளிகளில் வழங்கப்படும் தொழிற்கல்வி பாடங்கள் - பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் | Kalvimalar - News

பள்ளிகளில் வழங்கப்படும் தொழிற்கல்வி பாடங்கள் - பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்செப்டம்பர் 23,2014,10:56 IST

எழுத்தின் அளவு :

கோவை: மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பிரிவில், பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றத்தை கொண்டு வராமலும், காலிப் பணியிடங்களை நிரப்பாமலும், பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வியில், மேல்நிலை வகுப்புகளில், அறிவியல், கணிதம் போன்று தொழிற்கல்விக்கென பிரத்யேக பிரிவுகள் உள்ளன. இத்தொழிற்கல்வி பிரிவு, 1978 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, ஆறு பிரிவுகள், 66 உட்பிரிவுகளாக பாடங்கள் வரையறுக்கப்பட்டன. பின், உட்பிரிவுகளை சுருக்கி 12 பிரிவுகளாக்கப்பட்டது.

இதில், பொறியியலும் தொழில்நுட்பமும், வணிகமும் வியாபாரமும், அலுவலக செயலாண்மை பிரிவு, கணிக்கு பதிவியலும் தணிக்கையியலும், மின்னணுவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடங்கும். இப்பிரிவுகளுக்கு, உயர்கல்விக்கு புரபசனல் கோர்ஸ் என அடையாளப்படுத்தி மதிக்கப்படுவதோடு, இட ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது.

தொழிற்கல்வி பிரிவுகளில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜி., படிப்புக்கான சேர்க்கைக்கு நான்கு சதவீதமும், பாலிடெக்னிக் படிப்புக்கு 10 சதவீதமும், ஆசிரியர் பயிற்சியில் சேர 20 சதவீதமும், கலைத்துறை படிப்புக்கு 25 சதவீத இட ஒதுக்கீடும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இப்படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்கல்வி பாடத்திட்டத்திற்கு, செய்முறை பிரிவுகளில் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரவில்லை.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கே இப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. தவிர, மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், உயர்கல்வி ஆசிரியர்களுக்கான தரத்திலே சம்பளம் வழங்கப்படுகிறது. எவ்வித பதவி உயர்வும், இப்பிரிவு ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

இதனால், அதிகப்படியான பணி அனுபவம், கல்வித்தகுதி இருந்தும், கல்வித்துறையின் உயரிய பொறுப்புகளுக்கு செல்ல முடியாமலும், தங்களது கோரிக்கைகளை எடுத்துரைக்க முடியாமலும், ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், உயர்நிலைப்பள்ளியில் இருந்து புதிதாக, தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவே கொண்டு வரவில்லை.

சில பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி ஓய்வு பெற்றால், பாடத்திட்டத்தையே மூடிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை, தொழிற்கல்வி பாடத்திற்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை நீடித்தால், பள்ளிக்கூடங்களில் தொழிற்கல்வி பாடத்திட்டமே இருக்க வாய்ப்பில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் புறக்கணிப்பு

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான சங்க உறுப்பினர்கள் கூறுகையில், "இந்தியாவில், தமிழகத்தை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும், தொழிற்கல்வி பாடத்திட்டத்திற்கென தனி இயக்குனரகமே உள்ளது. மாவட்ட அளவில், பள்ளி அளவில் தொழிற்கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே, புறக்கணிக்கப்படும் பிரிவாக தொழிற்கல்வி இருந்து வருகிறது. இதனால், இப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

மாணவர்களது நலன்கருதி, இனியாவது தமிழக அரசு தொழிற்கல்வி பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து, காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்" என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

டியர் சார்,,இவற்றடன் வேளாண் செயல்முறைகள் என்ற பாட பிரிவும் உண்டு.விரிவான விளக்கத்தினை வேளாண் ஆசிரியர் சங்கத்தின். சார்பில் எழுதுகிறேன். தயவுசெய்து பிரசுரிக்கவும். நன்றி. மு.மாதவன் மாநிலத் தலைவர்.
by agdrmmadhavan Agri ம.மாதவன் ,India    2014-09-24 10:29:58 10:29:58 IST
voc teacher ku salary waste yallam waste
by saravanan,India    2014-09-23 12:08:24 12:08:24 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us