அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிரம்பாத ஆசிரியர் பணியிடங்கள் - விரக்தியில் மாணவர்கள் | Kalvimalar - News

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிரம்பாத ஆசிரியர் பணியிடங்கள் - விரக்தியில் மாணவர்கள்செப்டம்பர் 22,2014,14:46 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு உதவிபெறும் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் கிடைக்காமல், இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 13 அரசு பல்கலைகள், அரசு 74; அரசு உதவி 139; சுயநிதி 443 என, 656 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, 37 பல்கலை உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ளன.

இக்கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா பணியிடங்கள், உயர்கல்வித் துறையின் ஒப்புதலின் கீழ் நடக்கிறது. அரசு கல்லூரிகளில், 2011, 12க்கு 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது; இதன் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்ந்து, 2013 14ல் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 513 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடந்த மூன்றாண்டுகளில், அரசு கல்லூரிகளில் புதியதாக துவக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு, 827 உதவி பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஏற்கனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது.

இப்படித்தான், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆண்டுதோறும், பேராசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதுதவிர, புதிதாக துவக்கப்பட்டுள்ள 12 கல்லூரிகளிலும் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை விரைவில் நிரப்பினால் மட்டுமே, மாணவர்களின் உயர்கல்வி தேவை நிறைவேறும். அரசுக் கல்லூரிகளை பொறுத்தவரை, உதவி பேராசிரியர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம்( டி.ஆர்.பி.,) தேர்வு செய்கிறது.

ஆனால், அரசு உதவிபெறும் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்கு, பல கட்டங்களை தாண்டி வர வேண்டும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்களால், ஒப்புதல் கிடைப்பதில், இழுபறி நிலவுவுதால், மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை புதூரில், அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள், போதுமான பேராசிரியர்கள் இல்லை என்பதால், கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, உள்ளிருப்பு பேராட்டம் நடத்தினர்.

சென்னையில், ஒரு சில கல்லூரிகளை தவிர, மீதமுள்ள கல்லூரிகளில், பல ஆண்டுகளாக, உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதே நிலை, தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் இருப்பதாகவும், கல்வித்துறையில் இந்த ஒப்புதல் விவகாரம் மர்மமாக இருப்பதாகவும், கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளிக்க வேண்டும். அதில், விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அனுமதி எளிதில் கிடைப்பதில்லை. இதனால், பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். மேலும், உதவி பேராசிரியர் நியமனத்தில், கல்லூரிகளும், தங்களுக்காக, விதிகளை தளர்த்திக் கொள்கின்றன. யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வித்துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us