நாட்டின் சிறந்த பள்ளிகள் வரிசையில் முதலிடம் பெற்ற மத்திய அரசுப் பள்ளிகள்! | Kalvimalar - News

நாட்டின் சிறந்த பள்ளிகள் வரிசையில் முதலிடம் பெற்ற மத்திய அரசுப் பள்ளிகள்!செப்டம்பர் 15,2014,15:33 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஐ.ஐ.டி., சென்னை வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, இந்தியாவின் முதல் சிறந்த பள்ளி என்ற சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. ஒரு சர்வேயின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழகத்தின் இதர 10 பள்ளிகள், பல்வேறு பிரிவுகளில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 சிறந்த பள்ளிகளின் வரிசையில், முதல் 7 இடங்களில் அரசுப் பள்ளிகள் வருகின்றன. அதில் முதலிடத்தை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது. மொத்தப் புள்ளிகளான 1500க்கு, இப்பள்ளி 981 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

977 புள்ளிகளைப் பெற்று, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா என்.எம்.ஆர். பள்ளி, இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில், டில்லியிலுள்ள ராஜகிய பிரதீபா விகாஸ் வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது. இதற்கான புள்ளிகள் 951.

நான்காம் இடத்தை 946 புள்ளிகளுடன், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் வித்யாபீட் பள்ளியும், ஐந்தாமிடத்தை 927 புள்ளிகளுடன், ஐ.ஐ.டி. கான்பூர் வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியும் பெற்றுள்ளன.

சர்வே விபரம்

C-Fore என்ற நிறுவனத்தின் மூலம், டில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, மும்பை, கான்பூர், போபால், கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில், 1000க்கும் மேற்பட்ட, கட்டணம் செலுத்தும் மற்றும் கட்டணம் செலுத்தாத, பல்வேறு சமூக நிலைகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த மே மற்றும் ஜுலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயின் முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் நலம் மற்றும் மேம்பாடு, ஆசிரியர்களின் திறமை, விளையாட்டுக் கல்வி, சிறப்புத் தேவைகளுக்கான கல்வி, திறன்சார் நடவடிக்கைகள் சார்ந்த கல்வி, உள்கட்டமைப்பு, அகடமிக் சார்ந்த நற்பெயர், செலுத்தும் பணத்திற்கான மதிப்பு, ஒவ்வொரு மாணவர் மீதான தனிப்பட்ட கவனிப்பு, தலைமைத்துவ தரம், பெற்றோரை ஒத்த அக்கறை, சர்வதேச தரம், சமூக சேவை, வாழ்க்கைத் திறன் கல்வி மற்றும் சச்சரவு மேலாண்மை ஆகிய பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் இந்த சர்வே. ஆசிரியர் தரம் தொடர்பான விஷயத்திற்கு மட்டும் இரட்டை வெயிட்டேஜ் மதிப்பெண் தரப்பட்டது.

அரசுப் பள்ளிகளின் திறம்

பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 80% அரசுப் பள்ளிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அத்தியாவசிய நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மத்திய மனிதவள அமைச்சகத்தின் கணக்குப்படி, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால், நாட்டில் மொத்தம் 2 லட்சம் பள்ளிகள் வரை நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us