சாத்தியமா புதிய கல்வி முறை? | Kalvimalar - News

சாத்தியமா புதிய கல்வி முறை?செப்டம்பர் 02,2014,12:31 IST

எழுத்தின் அளவு :

பெரும்பாலான நாடுகளில், பள்ளி மேல்நிலை வகுப்புகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும்? எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்? மற்றும் எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும்? போன்றவற்றை உயர்கல்வி முறையே தீர்மானிக்கிறது.

கடந்த பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட முறைகளில் இருந்தே, ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல்நிலைக் கல்வித் திட்டத்திற்கு ஏற்ப, ஆரம்பக் கல்வி கற்பிக்கப்பட வேண்டியுள்ளது.

கல்வி முறையின் வரலாறு

17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டுகள் வரை, ஐரோப்பிய பேரரசுகள் உலகின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்தன. குறிப்பாக, பிரிட்டிஷார் அதிக பரப்பளவில் தனது பேரரசை நிறுவியதன் விளைவாக, இன்று உலகில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் கல்வி முறை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் போது வடிவமைக்கப்பட்டதாகவே உள்ளது.

கணினி, தொலைபேசி, வான்வழி போக்குவரத்து இல்லாத அன்றைய காலத்தில், பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க காகிதம் சார்ந்த எழுத்து பணிகளுக்கும், சிறந்த கணித வேலைகளுக்கும் ஏற்ப திறன்படைத்த மனித வளம் தேவைப்பட்டது. அதிக தகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் திறன் படைத்த மூளை அந்த மனித வளத்திற்கு அத்தியாவசியம்.

தொழில்நுட்பம் இல்லாதபோது, மிகச் சிறந்த நிர்வாகத்திற்கு, தகவல்களை சரியாக உள்வாங்கி அவற்றை தேவையான போது மிகத் தெளிவாகவும், விரைவாகவும் வெளிக்கொணரும் திறனும் அத்தகைய சாம்ராஜ்யத்திற்கு இன்றியமையாதது. அதேசமயம்,  விதிக்கப்படும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து, ஒரே மாதிரியான பணியை எதிர் கேள்வி கேட்காமல் திரும்ப திரும்ப செய்யும் பணியாளார்களாக இருக்க வேண்டும்.

அத்தகைய பணியாளர்களை அதிகளவில், அதேசமயம் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில், உருவாக்குவதற்காக அன்றைய கல்வி முறை உரிய அலகுகளின் அடிப்படையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டது.

பணிக்காக படிப்பு

கீழ்படிந்த உதவியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் படை வீரர்கள் போன்றோரை உருவாக்க வடிவமைக்கப்பட்டது ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி. எனவேதான், பள்ளி கல்விகளில் படைப்புத்திறன் (கிரியேட்டிவிட்டி) முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

அலுவலக பணியாளர்களை உருவாக்குவதற்காக முதுநிலை வரையிலான பட்டப்படிப்புகள், உயர்கல்வி என்ற பெயரில் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முறையால் உருவாக்கப்பட்ட பணியாளர்களை நிர்வகிக்க உயர்கல்வி முறையால் மேலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உருவாக்கப்பட்டனர்.

சாம்ராஜ்யத்தின் முக்கிய அம்சங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் அனுபவிக்க, உயர்கல்வியில் ஒரே ஒரு தகுதி உருவாக்கப்பட்டது. அந்த தகுதிதான் பிஎச்.டி., அல்லது அதற்கு இணையானவை.

இப்படி உருவாக்கப்பட்ட ஆரம்ப, மேல்நிலை, உயர்நிலைக் கல்வி முறையைத்தான் இப்போதும் நாம் தொடர்கிறோம். எனவே, இதில் உள்ள பிரச்சனையை கண்டறிவது எளிது.

மேம்படுத்துவது சரியா?

கீழ்படிந்த, கேள்வி கேட்காமல் ஒரே பணியை திரும்ப திரும்ப செய்யும் நபர்களுக்கான தேவை தொழில்நுட்பத்தின் காரணமாக குறைந்து வருகிறது. எதிர் கேள்வி கேட்காமல் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யவதோடு மட்டுமின்றி, கார்களை ஓட்டுவது, நோய்களை குணப்படுத்துவது உட்பட சுவாரஸ்மானவற்றை நிஜமாக்கும் பணிகளையும் செய்யும் இயந்திரங்களை உருவாக்க புத்தாக்க சிந்தனை, தீர்வு காணும் திறன் போன்றவற்றிற்கான தேவை அதிகரித்துவருகிறது.

இதற்கு எதிர்மறையான உயர்கல்வி முறையை பல ஆண்டுகளாக வைத்துக்கொண்டு, அதிலிருந்து புத்தாக்க சிந்தனை உள்ளவர்களை உருவாக்கும் வகையில் கல்வி முறையை மேம்படுத்த முயல்வது, தோல்விக்கு வித்திடும். அது பயனற்றது; வீண் செலவும் கூட.

எனவே, கல்வி முறையை மாற்ற வேண்டுமே தவிர, மேம்படுத்த முயலக் கூடாது. உதாரணமாக, குதிரை வண்டியை ஒரு காராக மேம்படுத்த முடியாது.

சுயமாகக் கற்றல்

புத்தாக்க சிந்தனை மிக்கவர்கள் அவ்வப்போது முரண்பட்ட குணநலனை வெளிப்படுத்தலாம். கட்சிதமாக அமைக்கப்பட்ட வகுப்பறைகளில் வரையறுக்கப்பட்ட வரிசையில், மிகப் பெரும் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு அவர்கள் கற்க மாட்டர்கள். Self Organised Learning Environments (SOLEs) என்ற சுயமாக ஒருங்கமைக்கப்பட்ட கற்றல் சூழலில் இருந்தே அவர்களை உருவாக்க முடியும்.

ஆரம்ப நிலைக் கல்வி முறையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லாதது. ஏனெனில், தற்போதைய உயர்கல்வி முறை அதற்கு உடன்படாது. பட்டப் படிப்பு நிலையில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த்துவதும் நிச்சயமாக பொருந்தாத ஒன்று. கல்வி முறையில், தேவையான மாற்றத்தை கொண்டுவர நமக்கு வேறு வழி தேவைப்படுகிறது.

மாற்றத்திற்கான ரகசியம்

உயர்கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்பட்சத்தில் அது பள்ளி மேல்நிலைக் கல்வி முறையிலும் மாற்றத்தை தூண்டும். அது ஆரம்பநிலைக் கல்வி முறையிலும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிஎச்.டி., படிப்பு வழங்கும் முறையில் தான் அத்தகைய மாற்றத்திற்கான ரகசியம் மறைந்திருக்கிறது என நினைக்கிறேன். கலந்துரையாடல், ‘viva voce’, குழு மதிப்பீடு உள்ளிட்டவற்றின் மூலமாக பிஎச்.டி., மதிப்பிடப்படப் படுகிறது. பள்ளிகளில் பயன்படுத்துவது போல் ‘தேர்வு’ என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தபடுவதில்லை.

பிஎச்.டி.,யில் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறைக்கு பொருந்தக்கூடிய வகையில், பள்ளி மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு மதிப்பீட்டு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் சி.பி.எஸ்.இ., இங்கிலாந்தில் ஜி.சிஎஸ்.இ., போன்ற வழக்கிழந்த தேர்வு முறை கைவிடப்பட்டு, புதிய முறை பின்பற்றப்பட வேண்டும்.

எவரிடமும் உரிய பதில் இல்லாத கேள்விக்கு, சரியான பதில் அளிக்கும் திறன், பிஎச்.டி., மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்ற திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறை தான் நமக்கு தேவையானது. நமக்கு தெரிந்தவை பாடத்திட்டமாக இருக்கக்கூடாது; நமக்கு தெரியாவை தான் பாடத்திட்டமாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆசிரியரின் பங்கு

இந்த முறையில், ஆசிரியரின் பங்கு என்ன? என்ற பிரதான கேள்வி எழும். பிஎச்.டி., ஆய்வில் ஒரு கண்காணிப்பாளருக்குள்ள பொறுப்புகள், ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். கற்பவருக்கு, ஒரு நண்பனைப் போல அறியாதவற்றை அறிய ஊக்கமளிக்க வேண்டும்.

புதிதாக ஒன்றை அறிந்துகொள்ள விரும்பும் குழந்தைகளின் மிகப் பெரிய கேள்விகளுக்கு, அத்தகைய ஊக்கம் அவசியம். அதற்கேற்ப பள்ளி மேல்நிலைக் கல்வி முறையிலும், உயர்நிலைக் கல்வி முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது ஆரம்ப நிலைக் கல்வி முறையிலும் புத்தாக்க சிந்தனைக்கும், தீர்வுகாணும் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு வித்திடும்.

மதிப்பீட்டு முறையில் மேற்கொள்ளப்படும் மாற்றமே, புதிய கல்வி முறையை உருவாக்குவதற்கான எளிய வழி!.

-சுகதா மித்ரா, இங்கிலாந்தின் நியூகேஸில் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ‘TED’ விருது பெற்றவர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us