சென்னையின் அடையாளங்களில் இதுவும் ஒன்றா? | Kalvimalar - News

சென்னையின் அடையாளங்களில் இதுவும் ஒன்றா?ஜூலை 31,2014,10:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை என்றவுடன் எத்தனையோ அம்சங்கள் நினைவிற்கு வரும். மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், கடற்கரைச் சாலையான காமராஜர் சாலை உள்ளிட்ட எத்தனை எத்தனையோ அழகான அம்சங்கள் நினைவுக்கு வரலாம்.

ஆனால், சென்னைவாசிகளை மட்டுமின்றி, சென்னைக்கு ஏதேனும் ஒரு வேளையாக சில நாட்கள் வந்திருந்து, மாநகரப் பேருந்தில் பயணிப்பவர்களையும் ஒரு விஷயம் மகா எரிச்சலுக்கு உள்ளாக்கி, சென்னையின் அம்சங்களில் இதுவும் ஒன்றுதான் எனும் அளவிற்கு அவர்களின் நினைவில் பதியும் ஒரு அம்சம் உண்டு. அதுதான், கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசம். பேருந்து மட்டுமல்ல, சில சமயங்களில், பொது இடங்களிலும், குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள், பொதுமக்களை பாடாய் படுத்துகின்றன.

கல்லூரி மாணவர்களின் அட்டூழியம்

தமிழகத்தில், வேறு எங்கும் இல்லாததாய், சென்னையில் மட்டும், இதுபோன்று பேருந்துகளில் அட்டூழியம் செய்யும் கலாச்சாரம் எப்படி வந்தது? தமிழகத்தின் வேறு பகுதிகளில், மாணவர்களிடையே சாதி மற்றும் ஊர் சார்ந்த பிரச்சினைகள் உண்டுதான். ஆனால் அவற்றின் வடிவமும், அவை வெளிப்படும் விதமும் வேறு.

ஆனால், சென்னையைப்போல், பொதுப் பேருந்தில் ஏறிக்கொண்டு, பேருந்தை உடைப்பது போன்று தாளம் போட்டு, பயணிகளின் காதுகளையும் செவிடாக்கி, பேருந்தில் வரும் மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் மோசமாக பேசிக்கொண்டு, அவர்களை வேண்டுமென்றே உரசுவதுபோல் நின்றுகொண்டு, விசில் அடித்துக்கொண்டு, பேருந்தின் மேலே ஏறிக்கொண்டு, பேருந்து ஜன்னலில் தொங்கிக்கொண்டு, விரும்பத்தகாத முறையில் பஸ் தினம் கொண்டாடிக் கொண்டு, பொதுமக்கள் பயணிக்கிறார்கள் என்று நினைக்காமல், வேறு கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள் என்பதற்காக, பேருந்தின் மீது கல்லெறிவது உள்ளிட்ட அகோரமான செயல்கள் சென்னையில் மட்டுமே நடக்கின்றன. அதற்கு காரணம் என்ன?

இத்தகைய கேள்விகளுக்கு விடைகளைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரம் சென்னையின் சமூக அமைப்பை ஆராய்வதுதான். சென்னையின் சமூக அமைப்பு என்பது உதிரி சமூக அமைப்பு.

பல்வேறு ஊர்களிலிருந்து, ஏன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மக்கள், உதிரியாக, ஆங்காங்கே சிதறி வாழ்ந்து வருவதுதான் இந்த சமூக அமைப்பு.

பிற பகுதிகளின் நிலை

பொதுவாக, தமிழகத்தின் இதர ஊர்களை எடுத்துக்கொண்டால், அங்கே, ஒவ்வொரு சமூகமும், கூட்டம் கூட்டமாக வாழும் அமைப்பு முறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு சமூகம் வாழும். அதற்கடுத்த பகுதியில் இன்னொரு சமூகம் வாழும். அவர்கள், பல தலைமுறைகளாக அங்கேயே இருப்பார்கள். அப்படியே, ஒருசிலர் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றாலும், அங்கே புதிதாக வருபவரும், பெரும்பாலும் அதே சமூகத்தைச் சார்ந்தவராகவே இருப்பார்.

ஆனால், சென்னை போன்ற நகரங்களில் அந்த அமைப்பு முறை, ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். சென்னையில், முன்பு ஒரு சில பகுதிகள், குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிகளாக இருந்தன. ஆனால், அந்தப் பகுதிகள்கூட, தங்களின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன என்றே கூறலாம்.

இதற்கும், கல்லூரி மாணவர்களின் அட்டூழியத்திற்கும் என்ன காரணம் என்று உங்களுக்குத் தோன்றலாம். காரணம் இருக்கிறது. ஆனால், இதுமட்டுமே காரணமல்ல. பெற்றோர்களின் வளர்ப்பு முறையும், குடும்பச் சூழலும் ஒரு காரணம்.

சென்னை கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், நந்தனம் கலைக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளின் மாணவர்கள்தான், சகிக்கமுடியாத அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். பேருந்தில், அவர்கள் செய்யும் அட்டகாசங்களை, சக பயணிகள் யாரும் தட்டிக் கேட்பதில்லை. நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர்.

உதிரி சமூக அமைப்பு

இதற்கு முக்கிய காரணம், பொதுவாக, பெரும்பாலான பயணிகள் வெளியூர்களிலிருந்து வந்து சென்னையில் குடியேறியவர்கள். சென்னையில் பெரிய ஆதரவு பலம் இல்லாதவர்கள். மேலும், அட்டூழியம் செய்யும் மாணவர்களும் சிதறி வாழ்பவர்களே. அவர்கள், ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களோ அல்லது ஒரே பகுதியில் வசிப்பவர்களோ அல்ல.

வேறு ஊர்களில் இப்படி மாணவர்கள் நடந்துகொள்ளும்போது, அந்த மாணவர்களை அடையாளம் காண்பது எளிது. மேலும், பேருந்துகளில் வரும் பயணிகளும், அந்த ஊரில் பல தலைமுறைகளாக வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு இதை தட்டிக்கேட்கும் ஒரு துணிச்சல் இயல்பாகவே வந்துவிடும். மேலும், அந்த தவறை செய்யும் மாணவர்கள், தாங்கள் வாழும் பகுதியிலேயே கண்டிக்கப்படுவார்கள், தேவைப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு, அவர்களின் பகுதியிலேயே ஆதரவு இருக்காது.

எனவேதான், வெளியூர்களில், சாதி, காதல் உள்ளிட்ட சில பிரச்சினைகள் பேருந்துகளில் இருந்தாலும், இதுபோன்ற வெளிப்படையான அட்டூழியமாக மாறுவதில்லை. அப்படி மாறுவதை, அப்பகுதிகளின் மக்களும் அனுமதிப்பதில்லை.

பெற்றோர் பங்கு

சென்னையில் திரியும் அனைத்து மாணவர்களும் இதுபோன்று நடந்துகொள்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட குழுவினர் மட்டும், அதுவும் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிப்பவர்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?

அதேசமயம், அந்தக் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இப்படி செய்வதில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. பெற்றோரால் சரியான முறையில் கண்காணிக்கப்பட்டு, முறையான குடும்ப சூழல்களிலிருந்து வரும் மாணவர்கள், எந்தக் கல்லூரியில் படித்தாலும், இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் மனதில் இதுபோன்ற விஷயங்கள் தொடர்பாக எப்போதும் ஒரு பயம் இருக்கும்.

குறிப்பிட்ட கல்லூரிகளின் சூழல்கள் நெடுநாட்களாகவே இவ்வாறு உள்ளது மற்றும் மாறிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. மேலும், மாணவர்களுக்குள் ரவுடிகளும் புகுந்து தங்களின் வேலையைக் காட்டுகிறார்கள் என்ற புகார்களும் உண்டு.

மாணவர் பருவம் இதற்குத்தானா?

மாணவர் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் உச்சகட்டப் பருவம் எனலாம். அப்பருவத்தில் உடல் பலம் மட்டுமல்ல, மூளைத் திறனும் உச்சகட்டத்தில் இருக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், அது சாதிக்கும் பருவம்.

ஆனால், மாணவர் பருவம் என்றாலே, இதுபோன்ற கழிசடை விஷயங்களை செய்துகொண்டு, பெண்களிடம் ஸ்டைல் காண்பித்துக் கொண்டு, போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி திரியும் பருவம் என்பதே, இதுபோன்ற மாணவர்களுக்கு மனதில் பதிந்துள்ளது. அவர்களின் குடும்ப சூழல் மற்றும் வளர்ப்பு முறையானது, கல்லூரி பருவத்தில், அவர்களை இதுபோன்ற ஒரு நட்பு வட்டத்திற்குள் தள்ளுகிறது. சென்னையின் உதிரி சமூக சூழல், அவர்களின் அட்டூழியத்தை தடையின்றி அனுமதிக்கிறது.

பள்ளிப் பருவத்திலேயே...

பொதுவாக, கடந்த தலைமுறை மாணவர்களைவிட, இந்த தலைமுறை பள்ளி மாணவர்கள் அதிக தைரியம் உடையவர்களாய் உள்ளனர். ஆசிரியர்களைப் பற்றி புகார் சொல்வதிலிருந்து, தங்களின் உரிமைகளுக்காக போராடுவதிலிருந்து இவர்களுக்கு தைரியம் அதிகம்.

ஆனால், அவைத்தவிர, வேறு விஷயங்களிலும் தைரியம் அதிகமாய் உள்ளது. பேருந்துகளில், வேண்டுமென்றே படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவது, கல்லூரி மாணவர்கள் செய்யும் சில சேட்டைகளை செய்வது, பள்ளி சீருடையுடன் தைரியமாக ஒயின் ஷாப் செல்வது, பொது இடங்களில் தைரியமாக மாணவிகளை கிண்டல் செய்வது மற்றும் அவர்களுக்கு பலவிதங்களில் தொல்லைக் கொடுப்பது, பள்ளி சீருடையுடன் பொது பூங்காக்களில் ஜோடியுடன் அமர்ந்திருப்பது, இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு, சாலைகளில், மற்றவர்கள் பயப்படும் வகையில் வேகமாக செல்வது, மோசமான முறையில் உடையணிவது உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்கள், சென்னை பள்ளி மாணவர்களிடையே அதிகளவில் உள்ளன.

எனவே, இதுபோன்ற மாணவர்கள், எதிர்காலத்திலும் உருவாகிவிடாமல் இருக்க, பெற்றோர்களே அதிக பொறுப்பேற்க வேண்டும். ஏதோ பிள்ளையைப் பெற்றோம், அவர்களை செல்லமாக வளர்த்தோம், அவர்கள் விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோம் என்பதோடு, தங்களின் கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல மனிதர்களாக வளர்கிறார்களா? என்பதை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான புத்திமதிகளை வழங்கி, அதன் மதிப்பை புரியவைத்து, தேவையான குடும்ப சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் பெற்றோர்களின் இன்றியமையாத பணியே.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us