ஆகஸ்ட் 1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியாகும் - அறிவித்தது டி.ஆர்.பி. | Kalvimalar - News

ஆகஸ்ட் 1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியாகும் - அறிவித்தது டி.ஆர்.பி.ஜூலை 29,2014,10:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் தெரிவித்தது.

வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என, ஏற்கனவே டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது. இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி பணி முடிந்தால், வரும் 30ம் தேதி 10,700 ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியாகும்.

பணி முடிய சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

பல்வேறு சிக்கல்கள் - விடிவு கிடைக்குமா?

தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இனிமேல் ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று தமிழகத்தில் 2011ம் ஆண்டில் பொறுப்பேற்ற புதிய அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே பல்வேறு குளறுபடிகளும், சிக்கல்களும் ஏற்பட்டன. 2012ம் ஆண்டுகளில் நடைபெற்ற 2 தகுதித் தேர்வுகளில் பெரிதாக சிக்கல் எழவில்லை. தேர்ச்சி பெற்றவர்கள், உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

ஆனால், 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுக்குப் பிறகுதான் சிக்கல்கள் ஏற்பட்டன. பல்வேறு மாநிலங்களிலும், தேர்வு மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும் நிலையில், இடஒதுக்கீட்டின் தாயகமாய் திகழ்ந்து, இந்தியாவிலேயே அதிகளவான 69% இடஒதுக்கீடு வழங்கிவரும் தமிழகத்தில், மதிப்பெண் சலுகை இல்லையா? என்ற குமுறல்கள் எழுந்தன. குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையில், பார்வையற்றவர்களுக்குக் கூட மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகள் கடுமையான போராட்டங்களை தெருவில் இறங்கி நடத்தினார்கள்.

மேலும், மதிப்பெண் சலுகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, பலர், நீதிமன்றங்களில் வழக்குத் தொடந்தனர். மதிப்பெண் சலுகைப் பிரச்சினை தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு சென்றது.

அப்போதுதான், அந்த எச்சரிக்கை வந்தது. தமிழகத்தின் சமூகநீதி போராட்டம் பற்றிய அறிவே இல்லாமல் செயல்படும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கையை அந்த ஆணையம் விடுத்தது. "மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆணையம் எச்சரித்தது. அதன்பிறகுதான் அரசு இறங்கி வந்தது.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அறிவிப்பு வெளியானது. அதன்பிறகும் பிரச்சினை ஓயவில்லை. தவறான வெயிட்டேஜ் முறையின் மூலம், மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இதை எதிர்த்தும் பலர் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார்கள். எனவே, உயர்நீதிமன்றம், அறிவுக்குப் பொருந்தும் வகையில் வெயிட்டேஜ் முறையை பின்பற்றும்படி, அரசுக்கு அறிவுரை வழங்கியது. இதனையடுத்து, புதிய வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது.

ஆனாலும், குமுறல்கள் அடங்கவில்லை. இன்று வாங்கும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே, வெறுமனே மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து, அதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் நடைமுறைகளால், தேவைக்கு அதிகமான தகுதிகளைக் கொண்டிருந்தும், பல ஆசிரிய பட்டதாரிகள், சரியான காலத்தில் பணி கிடைக்காமல் நொந்து நூலாகியுள்ளனர். புதிதாக படிப்பை முடித்து, பெரிதாக எந்த அனுபவம் மற்றும் அறிமுகமும் இல்லாமல், பலர் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படாதா? என்ற கேள்வியும் எழுகிறது. 

மேலும், சட்டப் பேரவையில், ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக, தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறிக்கொண்டே வந்த அமைச்சர்களால், பல்வேறு மாறுபட்ட தகவல்கள் அளிக்கப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக ஓய்ந்து, ஆசிரியர் பட்டியல் வெளியாக உள்ளது. வெளியான பின்னர், மீணடும் என்னென்ன வழக்குள் பதிவாகுமோ? என்பது தெரியவில்லை.

Advertisement

வாசகர் கருத்து

Stupid comment.. Have u sense Mr. Marimuthu.. Behave as a teacher
by senthilkumar,India    2014-07-30 19:43:53 19:43:53 IST
paper 1 kku gointho goiintho.....
by marimuthu,India    2014-07-29 11:28:55 11:28:55 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us