கோரிக்கை: நாட்டியத்திற்கென தனி பல்கலை துவங்க வேண்டும் | Kalvimalar - News

கோரிக்கை: நாட்டியத்திற்கென தனி பல்கலை துவங்க வேண்டும்ஜூலை 25,2014,10:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "சிலப்பதிகாரம் என்பது ஒரு நாட்டிய காப்பியம். இசைக்கு தனி பல்கலை துவங்கும் தமிழக முதல்வர், நாட்டியத்திற்கும் தனி பல்கலை ஒன்றை துவங்க வேண்டும்" என தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி, மதுரத்வனி ஆகிய அமைப்புகள் இணைந்து சிலப்பதிகாரத்தில் விலக்கு இசை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தின. இதில் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசியதாவது:

முத்தமிழ்

தமிழ் ஆசிரியர்கள், இயல் என்ற இலக்கியத்தை மட்டுமே படித்துள்ளனர். தமிழ் என்பது இயல் மட்டும் சார்ந்ததல்ல; இயல், இசை, நாடகம் இணைந்தது. முத்தமிழையும் கற்றறிந்தால் தான் தமிழ் அறிஞராக ஆக முடியும்.

தமிழக முதல்வர் இசைக்கு என தனி பல்கலை துவங்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோன்று நாட்டியத்திற்கென தனி பல்கலையை துவக்க வேண்டும். சிலப்பதிகாரம் என்பது பொருள் நிறைந்த, அழகு நிறைந்த, பிராந்திய மொழியில் எழுதப்பட்ட முழு நாட்டிய காப்பியம்.

ஆழ்ந்து படிக்கும்போது இளங்கோவடிகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், மக்களின் வாழ்க்கையையும் இணைந்து செய்யுளாக எழுதி, பின் இசைப்பாடலாக்கியுள்ளார். நாட்டியத்துக்கு ஏற்ப வடிவமைத்து, நாட்டியத்தின் வாயிலாக செந்தமிழின் இயற்கையை, கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் அவர் உருவாக்கியது போற்றுதற்குரியது.

வேதனைக்குரியது

கோவில்கள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காலை, நடுப்பகல், மாலை, இரவு வழிபாடுகளின் போது நாட்டியம் இன்றியமையாததாக இருந்தது. நாட்டியம் தான் வழிபாட்டை முழுமை பெற வைத்தது. நாளடைவில் இந்த நிலை மாறியது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பேசுகையில், "பரத நாட்டிய சாஸ்திரத்தை பின்பற்றி சிலப்பதிகாரம் எழுதப்பட்டுள்ளதை நாகசாமி ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார். யாராவது உண்மையைச் சொல்ல வேண்டும்; அதை திறம்பட செய்துள்ளார். இந்திய வரலாற்றில் போதிய ஆராய்ச்சி இல்லை. அதனால் தான் வேட்டி கட்டியவாறு கிரிக்கெட் கிளப்பிற்குள் போக முடியவில்லை. இந்திய வரலாற்றில் புது ஆராய்ச்சிகள் வேண்டும்" என்றார்.

விழாவில் மதுரத்வனி அமைப்பின் தலைவர் ராகிருஷ்ணன், அபிரமாசுந்தரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

கண்டிப்பாக வேண்டும்
by parthiban,India    2014-07-24 16:48:52 16:48:52 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us