நியூசிலாந்து கல்வி நிறுவனங்கள்! | Kalvimalar - News

நியூசிலாந்து கல்வி நிறுவனங்கள்! நவம்பர் 13,2017,00:00 IST

எழுத்தின் அளவு :

நியூசிலாந்தில் உள்ள எட்டு பல்கலைக்கழகங்களும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை! அவற்றில் வழங்கப்படும் படிப்புகள், சேர்க்கை நடைமுறைகள், கல்வி கட்டணம், உதவித்தொகை பற்றிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆக்லாந்து பல்கலைக்கழகம்
1883ம் ஆண்டு தொடங்கப்பட்ட  இப்பல்கலைக்கழகத்தில், தற்போது ஐந்து வளாகங்களில் நாற்பது ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி, வகுப்பறை கல்வியில் ஆராய்ச்சி மற்றும் செயல்முறை பயிற்சிகளுடன் மாணவர்களுக்கு துறை சார்ந்த நுண்ணறிவை வளர்க்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

சான்றிதழ் படிப்புகள் - அகடமிக் பிரிபரேஷன், சுகாதார அறிவியல், மொழியியல், கல்வியியல்.

இளநிலை பட்டப்படிப்புகள் - கட்டடக்கலை, வணிகவியல், கலை, கல்வியியல், பொறியியல், நுண்கலை, சுகாதார அறிவியல், சட்டம், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இசை, நர்சிங், மருந்தியல், ஆப்டோமேட்ரி, அறிவியல், சமூக பணி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, நகர்ப்புற திட்டமிடல்.

இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் - வணிகவியல், இசை, சட்டம், அறிவியல், கலை, கல்வியியல், தடய அறிவியல், சமூக பணி, மொழிபெயர்ப்பு, நுண்கலை, மருந்தியல், உயிரியல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள்.

முதுநிலை படிப்புகள் - ஆடியோலஜி, பயோமெடிக்கல் சயின்ஸ், பயோ சயின்ஸ், கிளினிக்கல் எஜூகேஷன், கிரியேடிவ் ரைடிங், கவுன்சிலிங், டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், எனர்ஜி, இன்ஜினியரிங் மேனேஜ்மெண்ட், எஜூகேஷனல் லீடர்ஷிப், இன்ஜினியரிங், ஹெல்த் சைக்காலஜி, ஹெல்த் லீடர்ஷிப், ஹெல்த் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெரைன் ஸ்டடீஸ், லீகல் ஸ்டடீஸ். அனைத்து துறைகளிலும் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகிறது.

ஆங்கில புலமை: பொதுவாக, மொழிபுலமை தேர்வான  ஐ.இ.எல்.டி.டி.எஸ்., தேர்வில் 6.0 மதிப்பெண்ணுக்கு மேல் அல்லது டோபல் தேர்வில் 80 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். எனினும், படிப்பு நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

உதவித்தொகை திட்டங்கள்: ஆக்லாந்து சர்வதேச மாணவர் உதவித்தொகை, ஆக்லாந்து சர்வதேச வர்த்தக முதுநிலை உதவித்தொகை, ஆக்லாந்து புல்பிரைட் ஸ்காலர்ஷிப், டீன் ஏசியன் ஸ்காலர்ஷிப், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்காலர்ஷிப், டீன் டாக்டோரல் ஸ்காலர்ஷிப், சீனியர் ஹெல்த் ரீசர்ச் ஸ்காலர்ஷிப் மற்றும் சீனியர் ஹெல்த் ரீசர்ச் டாக்டோரல் ஸ்காலர்ஷிப்.

கல்வி கட்டணம்: இளநிலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு, 19 லட்சத்து 65 ஆயிரம் முதல் 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை. முதுநிலை படிப்புகளுக்கு  ஆண்டுக்கு, 19 லட்சத்து 65 ஆயிரம் முதல் 21 லட்சத்து 58 ஆயிரம் வரை.

விபரங்களுக்கு: www.auckland.ac.nz

ஒடாகோ பல்கலைக்கழகம்

அறிவியல், உடல்நல அறிவியல், மானுடவியல் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஏற்ற கல்வி நிறுவனம், ஒடாகோ பல்கலைக்கழகம். நியூசிலாந்தில் மிகப்பழமையான மற்றும் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் என்ற சிறப்பினை பெற்ற இப்பல்கலைக்கழகம் 1869 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்கின்றனர்.

கல்லூரிகள்
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், அக்வினாஸ் கல்லூரி, அரானா கல்லூரி, கேரிங்டன் கல்லூரி, சிட்டி கல்லூரி, கம்பர்லேண்ட் கல்லூரி, ஹேவார்ட் கல்லூரி, நாக்ஸ் கல்லூரி, செயின்ட் மார்கரெட்ஸ் கல்லூரி, சால்மண்ட் கல்லூரி, டோரா கல்லூரி, அபே கல்லூரி மற்றும்  யூனிவர்சிட்டி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், முழு நேர ரெசிடென்ஷியல் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.

படிப்புகள்
இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ், 190க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சமூக பணி, இசை , உலக கலாச்சம், வணிகவியல், வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.,), வணிக தரவு அறிவியல், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்முனைவு, நிதி மேலாண்மை, உலக வர்த்தகம், சந்தைப்படுத்தல், சுற்றுலா, தொழில்முறை கணக்கியல், பல் மருத்துவம், மருத்துவ ஆய்வக அறிவியல், மருத்துவம், மருந்தியல், பிசியோதெரபி  உடற்கூற்றியல், உயிர்வேதியியல், உயிர் மருத்துவ அறிவியல், மரபியல், மருத்துவ ஆய்வக அறிவியல், நுண்ணுயிரியல், நரம்பியல், நச்சுயியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்பும்  வழங்கப்படுகிறது.

உதவித்தொகை
இங்கு, பட்டப்படிப்பை தொடரும் கல்வியில் சிறந்த இந்திய மாணவர்களுக்கு ‘நியூசிலாந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்ஸ்’ திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவிகள் வழங்கப்படும்.

சேர்க்கை முறை
இளநிலை பட்டப்படிப்புக்கு, பிளஸ் 2வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி பாடத்தில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், மொழி புலமை தேர்வான ஐ. இ.எல்.டி.எஸ்., மற்றும் டோபல் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கு, ஐ. இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6.5 மதிப்பெண்ணுக்கு மேல் மற்றும்  டோபல் - தாள் வழி தேர்வில் 587 மதிப்பெண் அல்லது டோபல் - இணைய வழி தேர்வில் 95 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விபரங்களுக்கு: www.otago.ac.nz

புதுமை புகட்டும் கல்வி நிறுவனங்கள்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு நவீனத்துவம் கொண்ட கல்வி திட்டங்களை வடிவமைத்து, தரமான வகுப்பறை மற்றும் செயல்முறை கல்வியைவழங்குகின்றன, கேன்டர்பரி பல்கலைக்கழகம் மற்றும் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்!

தனித்துவம்
கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் செயல்படும் ‘என்ரோல் இனோவேட்டிவ் புரொக்ராம்’ மற்றும் ‘வைபரன்ட் ஸ்டூடன்ட் கம்யூனிட்டி’ திட்டங்களில், கள பயிற்சிகள் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தப்படுகின்றன. மேலும், வணிகவியல், கலை அறிவியல், சட்டம், குற்றவியல் போன்ற துறை பிரிவில் இரட்டை பட்டப்படிப்புகளும், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் வணிகவியல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அறிவியல் ஆகிய பாடப்பிரிவில் இணைப்பு பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

படிப்புகள்
கேன்டர்பரி பல்கலைக்கழகம்:
கலை, வணிகவியல், குற்றவியல், பொறியியல், நுண்கலை, வனவியல், சட்டம், சமூகப் பணி, இசை, அறிவியல் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு.

விபரங்களுக்கு: www.canterbury.ac.nz

விக்டோரியா பல்கலைக்கழகம்: கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு, வணிகம், கல்வியியல், பொறியியல், சட்டம், அறிவியல், சுகாதாரம், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்.

தனித்துவம்
விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பட்டப்படிப்பு திட்டத்தின்படி, இளநிலை இரண்டாம் ஆண்டில், கட்டடக்கலை, உயிரி மருத்துவ அறிவியல், கட்டட அறிவியல், கலை, வணிகவியல், வடிவமைப்பு, கல்வியியல், பொறியியல், சட்டம், இசை, அறிவியல் மற்றும் சுற்றுலா மேலாண்மை போன்ற ஏதேனும் ஒரு படிப்பை கூடுதலாக, தேர்வு செய்து படிக்கலாம். தவிர, இரட்டை பட்டப்படிப்பு எனும் ‘டபுள் டிகிரி’ படிப்பையும் இங்கு மேற்கொள்ளலாம். 

மொழிப் புலமைத் தேர்வு
இளநிலை பட்டப்படிப்புக்கு, ஆங்கில மொழி புலமைத் தேர்வான  ஐ.இ.எல்.டி.இ.எஸ்., தேர்வில் 6.0 மதிப்பெண்ணுக்கு மேல் அல்லது டோபல் தேர்வில் 80 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கு ஐ.இ.எல்.டி.இ.எஸ்., தேர்வில் 6.5 மதிப்பெண்ணுக்கு மேல் அல்லது டோபல் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்.

உதவித்தொகைகள்
புல்பிரைட்  கல்வி நிதி உதவி, பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலஷிப் மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்ட நிதி உதவிகள் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.victoria.ac.nz

மஸ்சி பல்கலைக்கழகம்
80 ஆண்டுகளாக பழமைவாய்ந்த இப்பல்கலைக்கழகத்தில், கணக்குப்பதிவியல், வேளாண் வர்த்தகம், வேளாண் அறிவியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், கலை, விமான மேலாண்மை, தொடர்பியல், நர்சிங், விலங்கு அறிவியல், கட்டுமானம் மற்றும் கல்வியியல் உட்பட  18 துறைகளில் மூன்று ஆண்டுகள் கொண்ட முழு நேர இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

வடிவமைப்பு, பொறியியல், நுண்கலை, உணவு தொழில்நுட்பம் மற்றும் மொழியியல் ஆகிய பிரிவுகளில், நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை ‘ஹானர்ஸ்’ படிப்புகளும், அறிவியல், தொடர்பியல், கலை மற்றும் தகவல் அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கு பிறகான, ஓர் ஆண்டு ‘ஹானர்ஸ்’ இளநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

நிதி மேலாண்மை, தத்துவவியல், சமூக பணி, வர்த்தகம், உளவியல், தொழில்முறை கணக்கியல் மற்றும் நிதி, அறிவியல், இதழியல், விளையாட்டு மேலாண்மை, ஆசிரியர் கல்வி மற்றும் தொழில்நுட்பம் உட்பட மொத்தம்  41 பாடப்பிரிவில் முதுநிலை  படிப்புகள் உள்ளன. இவை தவிர்த்து, பல்வேறு துறைகளில், சான்றிதழ், டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகை திட்டங்களும் உள்ளன.

விபரங்களுக்கு: www.massey.ac.nz

வைகாட்டோ பல்கலைக்கழகம்
கணக்கியல், வேளாண் வர்த்தகம், மானிடவியல், கம்ப்யூட்டிங், உயிர்வேதியியல், உயிரியல் அறிவியல், உயிர் தொழில்நுட்பம், வேதியியல், சிவில் இன்ஜினியரிங், கோஸ்டல் புராசஸ், தொடர்பியல் வடிவமைப்பு, கிராபிக்ஸ் டிசைன், கணினி அறிவியல், கிரியேட்டிவ் டெக்னாலஜி, கிரியேட்டிவ் ரைட்டிங், ஊடக வடிவமைப்பு, டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் சினிமா, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல், பொருளாதாரம், கல்வியியல், ஆங்கிலம் உட்பட 119 பாடப்பிரிவில், சான்றிதழ், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.

உதவித்தொகை விபரங்கள்: இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, ‘யூனிவர்சிட்டி ஆப்  வைகாட்டோ இன்டர்நேஷனல் எக்சலன்ஸ் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கல்வி நிதி உதவி வழங்கப்படும். முழு நேர ஆய்வு படிப்புகளை மேற்குள்ளும் மாணவர்கள், ‘யூனிவர்சிட்டி ஆப் வைகாட்டோ டாக்டோரல் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெறலாம்.

மேலும், ‘யூனிவர்சிட்டி ஆப் வைகாட்டோ ரீசர்ச் மாஸ்டர் ஸ்காலர்ஷிப்’, ‘கம்பியூட்டர் சயின்ஸ் அண்டர் கிராஜூவேட் ஸ்காலர்ஷிப்’ , ‘இன்ஜினியரிங் போஸ்டு கிராஜூவேர்ட் ஸ்காலர்ஷிப்‘, ‘டி பிர்ரிங் - லா கிராஜூவேட் ஸ்காலர்ஷிப்’, ‘சயின்ஸ் போஸ்டு கிராஜூவேர்ட் ஸ்காலர்ஷிப்’ ஆகிய உதவித்தொகை திட்டங்களும் உள்ளன.

சேர்க்கை முறை: விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கு மொழி புலமை தேர்வான  ஐ.இ.எல்.டி.டி.எஸ்., அல்லது டோபல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

பகுதி நேர வாய்ப்புகள்: நியூசிலாந்தில் பிரத்யேகமாக செயல்படும் ‘ஸ்டூடன் ஜாப் சர்ச்’ எனும் வலைத்தளம் மூலம், பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களில் விருப்பத்திற்கு இணங்க, பகுதி நேர வேலை வாய்ப்பை பெறலாம்.

விபரங்களுக்கு: https://squiz-matrix.its.waikato.ac.nz/

லிங்கன் பல்கலைக்கழகம்
1878ம் ஆண்டு தொடங்கப்பட்ட, மூன்றாவது பழமையான, இக்கல்வி நிறுவனம், கணக்கியல், வேளாண் ஆராய்ச்சி கல்வி, தோட்டக்கலை, சுற்றுச்சூழல், மேலாண்மை, கட்டடக்கலை மற்றும் அறிவியல் ஆகிய துறை சார்ந்த படிப்புகளுக்கு பிரபலமானது.

இளநிலை படிப்புகள்: வேளாண் வணிகம் மற்றும் உணவு சந்தைப்படுத்தல், வேளாண்மை, வேளாண்மை அறிவியல், வணிகவியல் (வேளாண்மை), வர்த்தகம், சுற்றுச்சூழல் மேலாண்மை, அறிவியல், கட்டடக்கலை, சுற்றுலா மேலாண்மை, ஒயின் தயாரிப்பு.

முதுநிலை படிப்புகள்: வணிகம் (கணக்கியல் மற்றும் நிதி), அறிவியல் மற்றும் உணவு கண்டுபிடிப்பு, வணிகம் (சர்வதேச மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல்), வடிவமைப்பு, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் மேலாண்மை, சர்வதேச கிராமப்புறம் வளர்ச்சி, வேளாண் வணிக மேலாண்மை, வேளாண் மேலாண்மை அமைப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை, சுற்றுலா மேலாண்மை.

ஆராய்ச்சி படிப்புகள்: விவசாயம் மற்றும் முதன்மை உற்பத்தி, அப்ளைடு கம்ப்யூட்டிங், உயிரியல் மற்றும் உடல் அறிவியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பால் ஆராய்ச்சி, சூழல் அமைப்பு சேவைகள், சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் மேலாண்மை, உணவு, சர்வதேச மேன்பாடு, சுற்றுலா, சமூகம் மற்றும் கலாச்சாரம்.

விபரங்களுக்கு: www.lincoln.ac.nz

ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம்    
உலகின் சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ள இக்கல்வி நிறுவனம், 1895ம் ஆண்டு, 137 மாணவர்களை கொண்ட தொழில்நுட்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. தற்போது 29 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது!

துறைகள்: கலை மற்றும் அறிவியல், வணிகம், தொடர்பியல், கல்வியியல், பொறியியல், சுகாதார அறிவியல், கணிதம், கணினி அறிவியல், சுற்றுலா மேலாண்மை, மொழி மற்றும் கலாச்சாரம், சட்டம், அறிவியல், விளையாட்டு, சமூகம் மற்றும் பொது துறை. இளநிலை படிப்பில், ஆறு ஒருங்கிணைந்த மற்றும் மூன்று இரட்டை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.

பொறியியல் பிரிவு: அனலிட்டிக்ஸ், கணினி மற்றும் தகவல் அறிவியல், கட்டுமான மேலாண்மை, பொறியியல் திட்ட மேலாண்மை, சுகாதார தகவல், தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல், அறிவியல், சேவை சார்ந்த கணினி மையம், பொறியியல் தொழில்நுட்பம், கணித அறிவியல், கட்டிட பொறியியல் மற்றும் கட்டிட சேவைகள் பொறியியல், தகவல் தொழில்நுட்ப சேவை அறிவியல், மென்பொருள் மேம்பாடு, நெட்வொர்க் மற்றும் செக்யூரிட்டி ஆகிய துறைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

உதவித்தொகை: மொழிப் புலமை தேர்வில் தேர்ச்சி பெற்ற, பொருளாதாரத்தில் பின் தங்கிய, கல்வியில் சிறந்த மாணவர்கள், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை திட்டத்தின்கீழ், உதவித்தொகைகளை பெறலாம்.

விபரங்களுக்கு: www.aut.ac.nz

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us