தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள் | Kalvimalar - News

தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள்ஏப்ரல் 15,2014,11:09 IST

எழுத்தின் அளவு :

கோவை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1304 பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படாமல் இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணி நியமனம், ஆய்வக வசதி போன்றவற்றை மத்திய அரசு 75 சதவீத நிதி ஒதுக்கீடு செய்தும், மாநில அரசு 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்தும் வழங்கிவருகிறது.

கடந்த 2010-11ம் ஆண்டு 710 பள்ளிகள், 2011-12ல் 344; 2012-13ல் 200; 2013-14ல் 50 பள்ளிகள் என நான்கு ஆண்டுகளில் 1304 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி கழிப்பிடம், குடிநீர் தொட்டி போன்றவையும், தலைமையாசிரியர் அறை, வகுப்பறை, ஆய்வக கூடம், நூலகம், கம்ப்யூட்டர் லேப் உட்பட 11 அறைகள் முதல்கட்டமாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதுவரை, எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

நடுநிலைப்பள்ளிகளின் கட்டடத்திலேயே தற்போது மிகுந்த இடநெருக்கடிக்கு நடுவில் உயர்நிலைப்பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களை உட்கார வைப்பதற்கு கூட இடமில்லை என்று தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளாக கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி இல்லாத நிலையில் தொடர்ந்து பள்ளிகளை, தரம் உயர்த்தி அறிவித்துக்கொண்டே இருக்கும் மாநில அரசு இப்பிரச்னைக்கு என்ன தீர்வு காணப்போகிறது என்பது கேள்விக்குறியே.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 2009-10ல் தரம் உயர்த்தப்பட்ட நான்கு உயர்நிலை பள்ளிகளை தவிர 2010ம் ஆண்டுக்கு பின் எந்த பள்ளிகளுக்கும் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "எங்கள் பள்ளி 2010ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை, எந்த கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தி வருகிறோம். குறிப்பாக, டாய்லெட் வசதிகள் இன்றி மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

நான்கு ஆண்டுகளாக இதுகுறித்து எந்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்த முடியும். நிதியில்லாமல், பள்ளிகளை, தொடர்ந்து தரம் உயர்த்தி அரசு ஏன் அறிவிக்கிறது என புரியவில்லை" என்றார்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்க திட்ட இயக்குநர் சங்கர் கூறுகையில், "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, பொது பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பிற தகவல்களை தெரிவிக்க இயலாது" என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us