வெளிநாடுகளுக்கு விண்ணப்பிக்கும் முன்! | Kalvimalar - News

வெளிநாடுகளுக்கு விண்ணப்பிக்கும் முன்!ஜூலை 07,2017,00:00 IST

எழுத்தின் அளவு :

தங்களின் உயர்கல்விக்காக, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் மாணவர்கள், சேர்க்கை விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன், அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய ஆவணங்கள் எவை? என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

தேவைப்படும் சான்றிதழ்கள்
வெளிநாடுகளில் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில், விண்ணப்பிக்கும் படிப்பிற்கு ஏற்ப, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 / இளநிலை/ முதுநிலை / டிப்ளமோ படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மிக அவசியம். ஜி.ஆர்.ஜி., ஜி.மேட்., டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ், பரிந்துரைக் கடிதம், பாஸ்போர்ட், ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ், ரெஸ்யூம் மற்றும் வங்கி தொகை இருப்பு சான்று ஆகியவற்றின் நகல்கள். மேலும், விண்ணப்பிக்கும் நாடு, கல்வி நிறுவனம் மற்றும் தேர்வு செய்யும் பாடப்பிரிவுக்கு ஏற்ப பிற சான்றுகளும் தேவைப்படலாம்.

முக்கியத்துவம்
மேற்கண்டவற்றில், பரிந்துரை கடிதம் மற்றும் எஸ்.ஓ.பி., எனும் ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ் ஆகியவை எப்போதுமே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கையில் பெரும் இவை பங்கு வகிப்பதை பலரும் உணர்வதில்லை. இவற்றை தயாரிக்க தனிக் கவனம் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.
 
எஸ்.ஓ.பி.,
உங்களை பற்றி ஒரு கல்வி நிறுவனம் அறிந்து கொள்ள, நீங்கள் எழுதும் சுய விபரக் கட்டுரை தான் இந்த எஸ்.ஓ.பி.,!  விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனங்களில், உங்களின் சேர்க்கையை தீர்மானிப்பதும் இந்த ’ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்’ தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இயங்கும், உயர்மட்ட சேர்க்கை குழுவினர், நீங்கள் சமர்ப்பிக்கும் எஸ்.ஓ.பி., படிவத்தை ஆராய்ந்த பின்னரே, விண்ணப்பிக்கும் பட்டப்படிப்பிற்கு, நீங்கள் தகுதி உடையவரா? என்பதை உறுதிசெய்கின்றனர். அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வுகளில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்,  எஸ்.ஓ.பி., திருப்திகரமாக இருந்தால், பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

இடம்பெற வேண்டியவை
குறிப்பிட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தேர்வு செய்வதற்கான காரணம், உங்களது குறிக்கோள் மற்றும் லட்சியம், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான விவரம், விளையாட்டு, தொழில் போன்ற இதர பிரிவில் உள்ள ஆர்வம் உள்ளிட்ட தகவல் விவரங்களை குறைந்தது, ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் தெளிவாகவும், விரிவாகவும் எழுத வேண்டும். அதனால், கட்டுரையில் நீங்கள் சேர்க்க விரும்பும் அனைத்து தகவல்களையும் பட்டியலிட்டு, அதற்கேற்ப, ஒன்றுக்கு இரண்டு முறை எழுதி பார்த்து கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். பாடப்பிரிவு மற்றும் பல்கலைக்கழகத்தை பற்றி எழுதுவதற்கு முன், நன்கு ஆராய்வது அவசியம்.

உங்களின் தலைமை பண்பு திறன், நிதி நிலவரம், சமூக சேவை நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிடும் போது, உங்களின் தோல்விகளையும் மேற்கோடிட்டு காட்டுவது சிறப்பு. மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முழு நேரம் அல்லது பகுதி நேர, வேலை முன் அனுபவம் இருந்தால், தவறாமல் அதையும் குறிப்பிட வேண்டும்.

முதுநிலை அல்லது ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்புக்கு விண்ணப்பித்தால், பத்திரிகை இதழ்களில் வெளியான உங்களது ஆய்வுக் கட்டுரைகள் பற்றின விவரங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், சக மாணவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதை பற்றின முழு விவரங்கள் மற்றும் நாளிதழ்களில் நீங்கள் எழுதிய கதைகள் ஆகியவற்றை தெளிவான உரைநடையில் எழுத வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை
எஸ்.ஓ.பி.,யில் இலக்கணப் பிழை இருக்கக் கூடாது. மேலும், உங்களை பற்றியும் உங்களது குடும்பத்தினர் பற்றியும் தேவையில்லாத மிகுதியான தகவல்களை கட்டாயம் குறிப்பிடக் கூடாது. அப்படி இருக்கும்பட்சத்தில், எஸ்.ஓ.பி.,யில் இலக்கணப் பிழை இல்லாமல் இருந்தாலும், அவை நிச்சயம் நிராகரிக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில், இசை, விளையாட்டு, நாடகம் மற்றும் இதர கலை பிரிவுகளில், நீங்கள் வென்ற பதக்கங்கள் மற்றும் பரிசு பொருட்கள் பற்றி குறிப்பிடலாம். அதேசமயம், அவை குறித்து அதிக அளவில் எழுதாமல் இருப்பதும் அவசியம்.

பரிந்துரை கடிதம்
வெளிநாட்டு கல்வி நிறுவனங்குகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவசியம் இணைக்க வேண்டிய ஆவணங்களில் அடுத்து முக்கிய இடம் பெறுவது, எல்.ஓ.ஆர்., எனும் ‘லெட்டர் ஆப் ரெக்கமென்டேஷன்’!

உங்களைப் பற்றியும், உங்களது திறன் பற்றியும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கடிதம் தான் எல்.ஓ.ஆர்.,! ஒரு குறிப்பிட்ட படிப்பு அல்லது பணிகளில் சலுகை பெற நீங்கள் தகுதியுடையவர் என்று சான்றளிக்கும் கடிதமும் இதுவே. அதனால், பரிந்துரை கடிதத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.

எல்.ஓ.ஆர்., யாரிடம் பெறலாம்?
கல்லூரி மற்றும் பள்ளி பருவத்தில், உங்களது பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த, நன்கு அறிமுகமான, பேராசிரியரிடம் இருந்து பரிந்துரை கடிதம் (லெட்டர் ஆப் ரெக்மெண்டேஷன்) பெறுவது சிறந்தது. விண்ணப்பித்திருக்கும், பட்டப்படிப்பு துறை சார்ந்த வேலையில், முன் அனுபவம் பெற்றிருந்தால், உங்களுடன் இணைந்து பணியாற்றிய, நம்பிக்கையான உயர் அதிகாரியிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெறலாம்.  குடும்பத்தினர் மற்றும் சக நண்பர்களிடம் இருந்து பரிந்துரை கடிதம் வாங்குவதை, தவிர்த்து விடுங்கள். ஏனெனில், உங்களின் நிரைகளை மட்டுமே, அவர்கள் குறிப்பிட்டு எழுதுவர்.

கவனிக்க வேண்டியவை
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், பரிந்துரை கடிதம் வழங்குபவரின் முகவரி அச்சிடப்பட்ட அஞ்சல் தாளினால் எழுதிய கடிதங்களை மட்டும் தான் ஏற்றுக் கொள்கின்றன. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் மற்றும் நேரடியாகவும், அழகிய மொழி நடையில், 400 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுதியிருக்க வேண்டும். மேலும், எஸ்.ஓ.பி., (ஸ்டேட்மெண்ட் ஆப் பர்பஸ்) மற்றும் ரெஸ்யூமில் குறிப்பிடப்படாத, உங்களது ஆளுமைத்திறன், குணநலன்கள்,  தனிப்பட்ட விபரங்கள், செயல்திறன் மற்றும் ஆற்றல், உள்ளிட்டவை இக்கடிதத்தில் இருக்க வேண்டும். 

வேலை முன் அனுபவம் இருந்தால், அந்நிறுவனத்தில் வகித்த பதவி, பணி பொறுப்புகள், முன்முயற்சி, கண்ணியம், குழுவோடு சேர்ந்த பணிபுரியும் திறன் மற்றும் தனியாக பணிசெய்யும் தன்மை, முதலியவற்றை பரிந்துரையாளர் எழுதி இருக்கிறாரா, என்பதை பார்க்க வேண்டியது கட்டாயம்.

பகுதிகள்
ஒரு பரிந்துரை கடிதம், தொடக்கம், உள்ளடக்கம் மற்றும் நிறைவு ஆகிய மூன்று பகுதிகளை கொண்டிருக்க வேண்டும். எழுதுபவர், தனக்கும், சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்குவதோடு, கடிதம் எழுதும் காரணத்தையும் விரிவாக, தொடக்கப் பகுதியில் குறிப்பிட வேண்டும்.

உள்ளடக்கப் பகுதியில், மாணவனின் பாடம் தொடர்பான அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், இணைந்து பணியாற்றும் திறன், அதிகபட்ச ஆற்றல் திறன், தகவல்தொடர்புத் திறன், ஆராய்ச்சி சார்ந்த நுண்ணறிவு திறன் உள்ளிட்ட மாணவர் பற்றிய குறிப்பான தகவல்கள், இப்பகுதியில் இடம் பெறுவது அவசியம். நிறைவு பகுதியில், முந்தைய பகுதிகளில் எழுதிய விஷயங்களை, நேர்த்தியாக மிக சுருக்கமாக எழுதி முடிக்க வேண்டும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us