குறைந்த செலவில் அயல்நாட்டு கல்வி! | Kalvimalar - News

குறைந்த செலவில் அயல்நாட்டு கல்வி!மே 12,2017,00:00 IST

எழுத்தின் அளவு :

தங்களது உயர் கல்வியை வெளிநாட்டில் தொடர விரும்பும் பெரும்பாலான மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடைக் கல்லாய் அமைந்து விடுகிறது.

கல்வி கட்டணத்தை தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட பெறும் தொகையை போக்குவரத்து மற்றும் தங்கும் செலவிற்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், மலிவான செலவில் சிறந்த கல்வியை வழங்கி வரும் நாடுகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான தகவல்கள் இதோ...

இத்தாலி
மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், குறைந்த கல்வி கட்டணத்துடன் தரமான உயர்கல்வியை வழங்கி வருகிறது, இத்தாலி. இங்கு, கி.பி. 1088ம் ஆண்டு துவங்கப்பட்ட போலோக்னா பல்கலைக்கழகம் பிற மதிப்புமிக்க கல்வி நிலையங்களான, தி சேபைன்ஷா ரோம் பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிகோ மிலானோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தாயகமாக திகழ்கிறது.

மாநில அரசாங்க நிதியின் கீழ் செயல்படும் பொது பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில மாகாணங்களின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் இத்தாலியில் செயல்படுகின்றன. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கான விடுதி சேவைகளை வழங்குவதில்லை. எனினும், குறைந்த செலவில் உள்ள தனியார் வாடகை குடியிருப்புகளை வழங்குகின்றன. இங்கு, வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் போன்றவற்றிற்கு விண்ணப்பித்து தங்களின் நிதி சுமையை குறைத்து கொள்ளலாம்.

ஸ்பெயின்
ஆங்கில மொழி புலமைத் திறன்களை வளர்த்து கொள்ள ஏற்ற இடம். வெறும், மொழியியலுக்கு மட்டுமல்லாமல், மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளுக்கு ஏற்ற பல்கலைக்கழகங்கள் ஸ்பெயினில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா பல்கலைக்கழகம், மாட்ரிட் பல்கலைக்கழகம், கிரானாடா பல்கலைக்கழகம் மற்றும் சலமன்க்கா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள், இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்பில், தரமான கல்வி மற்றும் துறை சார்ந்த ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன.

பொது பல்கலைக்கழகங்களின் கல்வி கட்டணங்களை இந்நாட்டு அரசாங்கம் நிர்ணயிக்கிறது. அதனால், கல்வி கட்டணத்தில் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. மேலும், தங்களின் நிதி தேவைக்கு, மாணவர்கள் பகுதிநேர வேலைகளில் பணிபுரியலாம். இதற்கு, பணி அனுமதி படிவம் பெற அவசியம் இல்லை. இங்கு, உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஸ்பானிஷ் மொழியை கற்று கொண்டால், மேலும் சிறப்பான வாய்ப்புகளை பெறலாம்!

ஜெர்மனி
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் ஆகிய துறைகளில், சிறந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் குறைந்த கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றோடு சிறந்த பாடத்திட்டங்களுடன் வடிவமைக்கப்பட்ட கல்வியை வழங்குவதில் ஜெர்மனி முன்னிலை வகிக்கிறது.

ப்ரீபர்க்கில் பல்கலைக்கழகம், கோட்டிங்கென் பல்கலைக்கழகம், டுபிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் முனிச் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பயின்றவர்கள், பின்னாளில் நோபல் பரிசு வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதி உதவித்தொகையுடன் இலவச கல்வியை மாணவர்கள் பெறுவதற்கான சட்டங்களை வகுத்து, அதை சிறப்புடன் நடைமுறை படுத்தி வருகின்றது அந்நாட்டு அரசாங்கம். மேலும், நிதி பற்றாக்குறையை போக்க மாணவர்கள், படிக்கும் போதே ஆண்டுக்கு, முழு நேர வேலையாக 112 நாட்கள் அல்லது பகுதி நேர வேலையாக 240 நாட்கள் பணிபுரிந்து கொள்ளலாம்.

டென்மார்க்
குறைந்த மக்கள் தொகை, புதுமைத்துவத்தை வளர்க்கும் நாடு என்ற தனக்கென தனிப்பட்ட அடையாளத்தை கொண்டுள்ள, டென்மார்க்கில், மலிவான கல்வி கட்டணத்துடன், சமூக அறிவியல், வேளாண்மை மற்றும் வனவியல், மருத்துவம் மற்றும் சுகாதாரம், வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 1300க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஆல்போர்க் பல்கலைக்கழகம் போன்றவை, இளநிலை பட்டப்படிப்பு முதலே ஆராய்ச்சி வழி கல்வி அடிப்படையில் படிக்க மாணவர்களை ஊக்குவித்து, பகுப்பாய்வு மற்றும் நுட்ப திறன்களை சோதிக்கும் வகையில் துறை சார்ந்த செயல்முறை பயிற்சிகளை வழங்குகின்றன. இங்கு, உயர்கல்வி மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ‘டேனிஷ்’ மொழி கற்க வேண்டிய அவசியம் இல்லை.

நியுசிலாந்து
தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான ஏற்ற இடம். பிரிட்டிஷ் கல்வி அமைப்பின், அடிப்படையிலானது நியுசிலாந்து கல்வி முறை. ஆக்லாந்து பல்கலைக்கழகம், ஒடாகோ பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம் மற்றும் வெல்லிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை, உலகின் சிறந்த கல்வியை வழங்கும் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கல்வி கட்டணம், பொது பல்கலைக்கழகங்களில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்வி கட்டணங்களில் இருந்து வேறுபடுகிறது. கல்வி கட்டணம் சற்றே அதிகம் இருப்பினும், அரசாங்கம் கல்வி நிறுவனங்களுடன் இனைந்து, அதற்கு ஈடாக பல்வேறு கல்வி நிதி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. மேலும், தங்களது நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரமும், விடுமுறை நாட்களில் முழு நேரமாகவும் பணிபுரியலாம்!

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us