திட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள் | Kalvimalar - News

திட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள்

எழுத்தின் அளவு :

ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி சிறப்பாக படிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

திட்டத்தை மேம்படுத்துங்கள்

படிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக, அதற்கான சிறப்பான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். சரியான திட்டமிடல் இல்லையெனில், எதிர்பாராத திடீர் நெருக்கடி ஏற்படுகையில் சமாளிப்பது கடினம். உங்களின் நேரம், உங்களின் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும். உங்களின் திட்டத்தில், தேவை மற்றும் சூழலுக்கேற்ப மாறுதல்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், உங்களின் திட்டத்தை, தவறாமல் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

அதிக கற்பனை வேண்டாம்

தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஆனால், அதேநேரத்தில், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை நிச்சயம் கெடுதலையே தரும். படித்தல் என்பது, அதிக கவனம் தேவைப்படும் ஒரு விஷயம் என்பதால், இதற்கு மூலதனமாக, அதிக ஆற்றலும் தேவை. எனவே, பல மணிநேரங்கள், ஒரே விஷயத்தை எளிதாக படித்துவிட முடியாது.

உங்களுக்கான சரியான நேரம்

எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்ற வாதம் நீடித்த ஒன்றாக உள்ளது. இதற்கான பதில் என்னவென்றால், யாருக்கு எந்த நேரம் ஒத்துவருமோ அந்த நேரத்தில் படிக்கலாம் என்பதுதான். சிலருக்கு காலை வேளையில் படிப்பது பிடிக்கும். சிலருக்கோ, இரவு நேரம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். காலையில் படித்தால்தான் நன்றாக நினைவில் நிற்கும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. காலை நேரத்தைவிட, இரவு என்பது அமைதியான நேரம்.

உங்களுக்கு பிடித்தமான நேரத்தை, சீரிய கவனம் செலுத்தி சிறப்பாக படித்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில், வேறு எந்த தொந்தரவையும் அனுமதிக்கக்கூடாது.

பொருத்தமான இடம்

சிறப்பாக படிப்பதற்கு, சரியான இடம் என்பதும் முக்கியமான ஒன்று. எனவே, உங்களின் இல்லத்திலோ அல்லது நண்பர் இல்லம் அல்லது வேறு இடங்களிலோ, படிப்பதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து கொள்வது உங்களின் பொறுப்பு. எந்த இடம், அமைதியாகவும், தொந்தரவின்றியும், நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளதோ, அது படிப்பதற்கு சிறந்த இடம்.

ஒரே பாடம் வேண்டாம்

நீங்கள், ஒரே பாடப் புத்தகத்தை, ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால், அதில் சலிப்பு ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு ஒரு பாடப்புத்தகமோ அல்லது சில மணி நேரங்களுக்கு ஒரு பாடப்புத்தகத்தை மாற்றியோ, படிக்கலாம். மேலும், இடைபட்ட நேரங்களில் மாதிரி தேர்வுகளையும் எழுதிப் பார்க்கலாம்.

சரியான நுட்பங்களைப் பயன்படுத்தல்

உங்களின் படித்தல் செயல்பாட்டை சிறப்பாக்கும் வகையில், பல நுட்பங்கள் உள்ளன. எனவே, அவற்றில் உங்களுக்குப் பொருத்தான நுட்பத்தை பின்பற்ற வேண்டும். படிக்கும்போதே, முக்கியமான பாயின்டுகளை, அடிக்கோடிட்டு, அர்த்தம் தெரியாத வார்த்தைகளுக்கு, புத்தகத்தின் ஓரத்திலேயே அர்த்தம் எழுதிவைத்து படிப்பது ஒரு சிறந்த நுட்பம்.

உங்களின் செயல்பாட்டை மதிப்பிடுதல்

நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட பாடங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட்டீர்களா? மாதிரி தேர்வுகளை சிறப்பாக செய்துள்ளீர்களா? கடினமான பகுதிகளை சரியாகப் புரிந்து கொண்டீர்களா போன்ற மதிப்பீடுகளை செய்துகொள்வது அவசியம்.

சுய மதிப்பீடு

நீங்கள் சரியாக படித்து தயாராகி விட்டீர்களா என்பதை சுய மதிப்பீடு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். மாதிரி தேர்வுகள் இவற்றில் முக்கியமானவை. இல்லையெனில், பிறரை கேள்விகள் கேட்கவிட்டு, அதற்கு பதில் சொல்லி, படித்ததை தெளிவாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம். படிக்கிறேன் என்ற பெயரில், அதிக நேரம் புத்தகமும், கையுமாக அமர்ந்து, பெற்றோரை ஏமாற்ற தயவுசெய்து நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களின் தேர்வு மதிப்பெண்கள் நீங்கள், உண்மையிலேயே என்ன செய்தீர்கள் என்பதை தெளிவாக கூறிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us