சாட் தேர்வு - தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்! | Kalvimalar - News

சாட் தேர்வு - தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்!

எழுத்தின் அளவு :

சாட் என்பது, உலகின் பழமையான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். அமெரிக்காவின், கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், 4 வருட இளநிலைப் படிப்புகளில் சேர, இத்தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுவாக, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். நீங்கள் பள்ளியில் வளர்த்துக் கொண்ட அறிவு மற்றும் திறன்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் லாவகம் போன்றவை, இத்தேர்வின் மூலம் அளவிடப்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வை நடத்தும் பல்கலைகள் கூட, SAT -ன் பகுதியை எதிர்பார்க்கின்றன. மேலும், பல பல்கலைகள், ஒன்று மற்றும் அதற்கும் மேற்பட்ட சாட் பாடத் தேர்வுகளின் மதிப்பெண்களை, சமர்ப்பிக்குமாறு கேட்கின்றன. தற்போதைய நிலையில், சாட் தேர்வானது, 170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்படுகிறது.

சாட் மதிப்பெண்களின் பயன்பாடு

பல்கலைகளின் மாணவர் சேர்க்கை அதிகாரிகள், ஒரு மாணவர், பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் திறனையும், தகுதியையும் பெற்றுள்ளாரா என்பதை அளவிட, வேறுபல சோதனை முறைகளுடன், சாட் தேர்வையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். சாட் மதிப்பெண் என்பது, கல்லூரி அல்லது பல்கலையில் சேர்க்கைப் பெறுவதில், ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது என்பதை தெரிந்து வைத்திருக்கும் அதே நேரத்தில், வேறொன்றையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அதாவது, ஒரு மாணவரை சேர்த்துக் கொள்ளும் முன்னதாக, கணக்கில் எடுக்கப்படும் பல அம்சங்களில், இந்த சாட் தேர்வு மதிப்பெண்களும் ஒன்றாக இருக்கிறது என்பதே அது. எனவே, சாட் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே, ஒரே தகுதி அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வின் கட்டமைப்பு

ஒரு மாணவரின் கிரிடிகல் ரீடிங், கணித அறிவு, எழுத்துத்திறன் மற்றும் அறிவு போன்றவற்றை சோதிக்கும், தாள் அடிப்படையிலான தேர்வாகும் சாட். கேள்வி முறைகளில், கட்டுரைகள், multiple choice கேள்விகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும். ஒவ்வொரு பிரிவுக்குமான மதிப்பெண்கள் 200-800 என்ற அளவீட்டில் அறிவிக்கப்படும்.

Critical reading பிரிவானது, பல்கலைக்கழக அளவிலான ஆங்கில அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக இருக்கிறது. விடுபட்ட வார்த்தைகளை நிரப்புதல், அரைகுறையாக விடப்பட்ட ஒரு sentence -ஐ நிறைவு செய்தல் போன்ற பலவிதங்களில் கேள்விகள் கேட்கப்படும்.

கணிதப் பிரிவானது, நீங்கள் பள்ளியில் கற்றவை என்ன மற்றும் உங்களுக்கு பல்கலை அளவில் தேவையானவை என்ன என்பதை அளவிடும் விதமாக அமைந்துள்ளது. algebraic formulas, linear functions, exponential growth and manipulations with exponents, properties of tangent lines, absolute value, funtional notation, geometric figures, probability and analyse date போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

சாட் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஒரு பிரிவில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானது. ஆனால், ஒரு கேள்வி கடினமாக இருக்கிறது என்பதற்காக, அதிலேயே அதிகநேரம் செலவிடுதல் கூடாது. எளிதான கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிட்டு, பிறகு, கடினமான கேள்விகளுக்கு வரலாம்.

ஒரு கேள்விக்கான சரியான பதில் எது என்று தெரியாவிட்டால், சில ஆப்ஷன்களை நீக்கி, சரியான ஆப்ஷன் எது என்பதை புத்திசாலித்தனமாக முடிவு செய்யலாம்தான். ஆனால், அதிலும் அதிக கவனம் தேவை. ஏனெனில், ஒரு தவறான பதிலுக்கு 1/4 பாயின்டுகளை நீங்கள் இழப்பீர்கள்.

தேர்வு மையத்தில், ஒவ்வொரு செக்ஷனின் தொடக்கம் மற்றும் முடிவும் அறிவிக்கப்படுகிறது. எனவே, முன்னதாகவே முடித்த ஒரு செக்ஷனுக்கு, நீங்கள் திரும்பவும் செல்ல முடியாது.

இத்தேர்வில் மதிப்பெண் பெறுவதானது, 9 செக்ஷன்களில் மாணவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தது. கணிதம், critical reading அல்லது writing questions போன்ற அம்சங்களைக் கொண்ட கூடுதல் செக்ஷனும் உண்டு. ஆனால், இந்த செக்ஷனின் மதிப்பெண், சாட் மதிப்பெண்ணாக கணக்கிடப்படாது.

சாட் தேர்வுக்கு தயாராதல் எப்படி?

உங்களின் சொந்த படிப்பில், ஆர்வத்துடனும், சிறப்பாகவும் ஈடுபடுதலே, முதல் படியாகும். Challenging வகுப்புகளில் கலந்து கொள்ளுதல், பள்ளியிலும், பள்ளிக்கு வெளியேயும் முடிந்தளவு, அதிகமாக படித்தல் மற்றும் எழுத்துப் பயிற்சி செய்தல் போன்றவை முக்கியமானவை.

Test - preparation course -கள் அவசியமில்லை என்றாலும், test format மற்றும் question type ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக தெரிந்து வைத்துக்கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், தேர்வை தைரியமாக எதிர்கொள்ள, இந்த முன்தயாரிப்பு மிகவும் உதவியாக இருக்கும். www.sat.collegeboard.com/practice என்ற வலைதளத்தில், பல மாதிரி சாட் கேள்விகள் இருப்பதோடு, ஒரு முழுநீள இலவச பயிற்சி தேர்வும் உண்டு. இவைத்தவிர, தேர்வு தொடர்பான வேறுபல ஆலோசனைகளும் இதில் உண்டு.

பல இந்திய மாணவர்களுக்கு, multiple choice தேர்வுகள் பற்றி தெளிவான புரிதல் இல்லை. எனவே, முறையான பயிற்சியை எடுத்துக்கொள்வது நல்லது.

சாட் II : சப்ஜெக்ட் தேர்வுகள்

சாட் சப்ஜெக்ட் தேர்வுகள், ஆங்கிலம், கணிதம், அறிவியல, மொழியியல் மற்றும் வரலாறு போன்ற பலவிதமான பாடங்களில் நடத்தப்படுகின்றன. பல பல்கலைகள், சாட் சப்ஜெக்ட் தேர்வுகளை, தங்களின் சேர்க்கை செயல்பாட்டிற்காக எடுத்துக்கொள்கின்றன.

ஒரு பல்கலை, சாட் சப்ஜெக்ட் தேர்வை ஏற்கவில்லையெனில், அது, தனக்கென தனியாக சேர்க்கை விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம். சாட் சப்ஜெக்ட் தேர்வை எழுதும் விஷயத்தில், நீங்கள் எந்தப் பாடத்தில் சிறந்து விளங்குகிறீர்கள் மற்றும் எதில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us