‘கேட்’ தேர்விற்கு தயாராவது எப்படி? | Kalvimalar - News

‘கேட்’ தேர்விற்கு தயாராவது எப்படி?அக்டோபர் 17,2018,12:52 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களால், மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வான ‘கேட்’ (காமன் அட்மிஷன் டெஸ்ட்) வரும் நவம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ளது. மேலாண்மை படிப்புகளுக்கான முக்கியமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ‘கேட்’ தேர்விற்கு தயாராவது குறித்து இங்கே பார்ப்போம்!

தேர்வு முறை:
ஆன்லைன் மூலம் நடைபெறும் இத்தேர்வில் பொதுவாக, ‘அப்ஜெக்டிவ்’ முறை கேள்விகள் கேட்கப்படும் என்றாலும், சில கேள்விகளுக்கான பதில் தட்டச்சு வடிவிலும் இடம்பெறும். ’அப்ஜெக்டிவ்’ முறையிலான தவறான பதில்களுக்கு மட்டும், ‘நெகடிவ்’ மதிப்பெண் உண்டு.

ஒட்டு மொத்தமாக 180 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில், நான்கு பிரிவுகளில் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தேர்வர்கள் 60 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மொத்த கால அவகாசம் 3 மணி நேரம். ‘வெர்பல் அண்ட் ரீடிங் காம்ப்ரிஹென்ஷன்’ பிரிவில் கேட்கப்படும் 34 கேள்விகளில் 22 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான மொத்த மதிப்பெண் 66. ‘டேட்டா இண்டர்பிரிடேஷன் அண்ட் லாஜிக்கல் ரீசனிங்’ பிரிவில் மொத்தம் கேட்கப்படும் 32 கேள்விகளில், 15 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண் 45. இறுதியாக ‘குவாண்டிடேடிவ் எபிலிட்டி’ பிரிவில் கேட்கப்படும் 34 கேள்விகளில் 23 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான மொத்த மதிப்பெண் 69.

மாதிரி வினாத்தாள்கள்:
தேர்விற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாணவர்கள், சுயபரிசோதனை செய்து, தங்களது பலவீனங்களைக் களைய முயல்வது தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தரும். புத்தகங்கள் மற்றும் இணைய தளங்களில் கிடைக்கும் மாதிரி வினாத்தாள்கள்களை பயன்படுத்தி சுயபரிசோதனைகளில் ஈடுபடலாம்.

நேரம் கையாளுதல்:
குறிப்பாக, வழங்கப்படும் நேரத்திற்குள் எப்படி திறம்பட கேள்விகளை கையாள்வது என்பது குறித்து பயிற்சி எடுப்பது மிக அவசியம். மாதிரி தேர்வில் பதில்களை மட்டும் சரிபார்க்காமல் அவற்றின் துள்ளியதையும் சரிபார்த்து அதற்கேற்றார் போல் மதிப்பெண் இடுங்கள். ஒரு கேள்விக்கு எத்தனை நிமிடங்கள் செலவிட்டால் 3 மணி நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்றார் போல் உங்களது வேகத்தை அதிகரியுங்கள். 3 மணி நேரத்தின் இறுதி நிமிடங்கள் வரை பதில்களை எழுதாமல் 10 நிமிடங்களுக்கு முன்னாதகவே தேர்வினை எழுதி முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒருசில கேள்விகள் அதிகமான நிமிடங்களை எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தேர்வுக்கு ஒரு வாரம் முதலே தேவையில்லாத பதட்டங்களைத் தவிர்த்து, தேர்வுக்குத் தேவையான அனைத்து உபகரணம் மற்றும் சான்றுகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நிதானமாகவும், தெளிவாகவும் தேர்வை எதிர்கொண்டால் முதல் முயற்சியிலேயே உழைப்பிற்கேற்ற தக்கப் பயனை பெறமுடியும்!

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us