வங்கி நேர்முகத்தேர்வை வசியப்படுத்தலாம்... | Kalvimalar - News

வங்கி நேர்முகத்தேர்வை வசியப்படுத்தலாம்...

எழுத்தின் அளவு :

சமீபகாலமாக, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், அதிகம் நடத்தப்படுகின்றன. சிலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று விடுவர். ஆனாலும் வேலை கிடைப்பதில்லை. காரணம் இவர்கள் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி செய்வதுடன் நிறுத்திக் கொள்வது தான். நேர்முகத் தேர்வு குறித்து முன்னரே போதிய பயிற்சி பெறாமல் இருந்திருப்பர்.

பொது அறிவு போதாமல், தெரிந்தவற்றை நேர்முகத் தேர்வில் தெரிவிக்கவும் முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். இதற்காக, சில கூடுதல் திறமைகளை தொடக்கம் முதலே வளர்த்துக் கொள்வது அவசியம்.

* எந்தப் பிரிவு படிப்பவராக இருந்தாலும், அடிப்படையில் தப்பு இல்லாத, ஆங்கில மொழித் திறன் கட்டாயம் தேவை. பேசும் திறன், இலக்கணம், வார்த்தை பயன்பாடு, எழுதும் திறன் ஆகியவற்றைக் பட்டப்படிப்பு முடிக்கும் போதாவது பெற்றிருக்க வேண்டும்.

* எந்த வங்கியின் நேர்முகத் தேர்வுக்கு செல்கிறோமோ, அந்த வங்கியைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடத்துவோரிடம், கேட்க விரும்புவதை, முன்பே தயார் செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

* அடிப்படை கம்ப்யூட்டர் திறன்கள் கட்டாயம் தேவை. பி.ஏ., படிப்பவராக இருந்தாலும் பி.காம்., படிப்பவராக இருந்தாலும் டேலி போன்ற அக்கவுண்டிங் சாப்ட்வேர்களில் திறன் தேவை. இது போன்ற அக்கவுண்டிங் பேக்கேஜ்களோடு, என்டர்பிரைஸ் சோர்ஸ் பிளானிங் எனப்படும் நவீன அலுவலக சாப்ட்வேர் தொகுப்பை அறிவதும் அவசியம்.

கணக்கு நமக்கு வராது என்பதால் தானே கலைப் பிரிவு எடுத்தோம் என்றெல்லாம் தயங்க வேண்டாம். கம்ப்யூட்டரில் இது போன்ற பிரிவுகளைப் படிப்பதற்கு அடிப்படைக் கணிதத் திறன் பெற்றால் போதும். பயம் தேவையில்லை.

* அடிப்படை ஆப்டிடியூட் டெஸ்ட், பயிற்சி பெறுவதும் அவசியம். சில கல்வி நிறுவனங்கள், இங்கே கூறப்பட்டுள்ளவற்றை ஏற்கனவே பாடத் திட்டத்திலேயே வைத்திருக்கின்றனர்.

* இது தவிர, ஆங்கில செய்தித்தாள் வாசிப்பது, செய்திகளைப் பார்ப்பது, கேட்பது, ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பது ஆகியவையும் அவசியம். சரியோ, தவறோ ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி பெற்றால், ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம்.

* பொது அறிவு என்பது, எல்லோரிடமும் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அறிவு என்பதால், உங்களைச் சுற்றி நடப்பதையும், தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களில் அடிப்படை விஷயங்களை எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us