எம்.டி.டி.எஸ் பயிற்சி - சில சந்தேகங்களுக்கான பதில்கள் | Kalvimalar - News

எம்.டி.டி.எஸ் பயிற்சி - சில சந்தேகங்களுக்கான பதில்கள்

எழுத்தின் அளவு :

மாணவர்கள், தங்களின் கணிதத்திறனை வளர்த்துக் கொள்வதற்கென நடத்தப்படும், எம்டிடிஎஸ் பயிற்சி படிப்பு தொடர்பாக பல சந்தேகங்கள் எழலாம். அவற்றுள், சில சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

1. கணித ஆய்வில், ஒரு சுதந்திர சிந்தனையை, MTTS எவ்வாறு உருவாக்குகிறது?

MTTS பயிற்சியில், முதல் நாளிலிருந்தே, மாணவர்கள், நிறைய கேள்விகளைக் கேட்க தொடங்குகிறார்கள். ஆசிரியர் கற்பிக்கும்போது, அவர், எவ்வாறு சிந்திக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். எனவே, பங்கேற்கும் மாணவர், ஒரு கணித சிக்கலைத் தீர்க்கும் செயல்பாடானது, கேள்விகள் கேட்பதில் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்கிறார். இறுதியில், விடையும் கிடைக்கிறது.

2. கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவோர் பற்றி?

பல மாணவர்கள், தாங்கள் கணிதப் பாடத்தில், அதிக மதிப்பெண் பெறுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காகவே, தாங்கள் கணிதப் புலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், MTTS பயிற்சியில் அவர்கள் தங்கள் திறன் குறித்து ஏமாந்து போகிறார்கள். அதுபோன்றவர்களுக்கு, தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேற விரும்பினாலும், வெளியேறலாம். அப்படி செல்பவர்களுக்கு, சான்றிதழ் கிடைக்காது.

3. MTTS -க்கான மாணவர் தேர்வின்போது, பரிந்துரை போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திறமை புறக்கணிக்கப்படுமா?

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பற்றிய Mental record -ஐ நாங்கள் வைத்திருப்போம். ஒரு ஆசிரியர், தனது மாணவனுக்கு கொடுத்த வாய்வழி நற்சான்றிதழ், அம்மாணவனின், செயல்பாடு மற்றும் திறமையோடு ஒத்துப்போனால், அடுத்தமுறை, அந்த ஆசிரியரின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

சில இடங்களில், பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஒரே ஆசிரியரின் மாணவர்கள் மத்தியில், திறமையை மதிப்பிட, வேறு அளவுகோள்களும் உள்ளன.

4. ஒருவர் நல்ல ஆசிரியர் என்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

ஒருவரின் கற்பித்தல் அனுபவம் மற்றும் கணிதத்திற்கான அவரது சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறந்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மை.

5. பிற சவால்கள் என்னென்ன?

நல்ல பயிற்சி மையங்கள் மற்றும் பகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் உள்ளன. MTTS பயிற்சிக்காக வாடகைக்கு எடுக்கப்படும் சில மையங்கள், எப்படியெல்லாம் பணம் வசூலிக்கலாம் என்பதிலேயே குறியாக உள்ளன.

சமையல் ஒப்பந்தக்காரர்கள்தான் பெரிய பிரச்சினையே. 19 முதல் 22 வயது கொண்ட 200 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் ஆகியோருக்கு, தரமான சிறந்த உணவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆனால், அனைத்துக்கும் தலையாட்டும் சமையல் ஒப்பந்தக்காரர்கள், தங்களின் கடமையை நிறைவேற்றுவதில்லை.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us