பெண்கல்வி; சாதனையா? சோதனையா? | Kalvimalar - News

பெண்கல்வி; சாதனையா? சோதனையா?மார்ச் 12,2018,15:32 IST

எழுத்தின் அளவு :

இந்த 21ம் நூற்றாண்டிலும் ஆண்களுக்கு நிகரான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி தான்!

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து, நடந்து வரும் பெண் கல்விக்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகளுக்கு பிறகும் 65 சதவீத பெண்கள் மட்டுமே இந்தியாவில் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரங்கள்.

பெண்களுக்குக் கல்வி என்பது அவர்களுக்கான உரிமைகளையும், கடமைகளையும் உணர்ந்து, தடைகளை தகர்த்து சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுவது. ஏனென்றால், ’ஒரு பெண் கல்வி கற்றால், அந்தச் சமுதாயமே உயரும்’ என்பது  சான்றோர் கூற்று. ஆனால் நமது சமூகத்தில் ஆண்களின் கல்விக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத் துவத்தை பெண்களின் கல்விக்கும்  தருகிறோமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட பாதிக்கு பாதி, அதாவது, 48.5 சதவீத பெண்கள் இருக்கும் நிலையில், அதில் 65 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு பெறுகிறார்கள் என்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இந்தியாவில் 82.14 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதற்காகப் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். நாட்டின் அனைத்துத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்று அதிகம் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றே சொல்லலாம். ஆனால், ஆண்களுக்கு நிகராக...  வேண்டாம்; அவர்களது எண்ணிக்கையில் கால்பகுதிகூட இல்லை என்பதே உண்மை நிலவரம்.

நாட்டிலேயே பெண்கல்வி வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக உயர்கல்வி துறை தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பெண் கல்வி வளர்ச்சி விகிதம் 22.7 சதவீதம் என்றால், தமிழகத்தில் மட்டும் 42.7 சதவீதம் உள்ளது. இதன் அடிப்படையில் பெண் கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்று சொல்லலாம். அதேசமயம், தமிழகத்தில், 86.81 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றிருக்கும் நிலையில், பெண்களில் 73.86 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் இது 91.98 சதவீதமாக உள்ளது.

இதைச் சரி செய்யவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தப் பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடும் நோக்கத்தோடு பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதைத் தவிர பெண் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, மத்திய அரசு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இதைப் போன்ற பல சலுகைகள் அரசங்கத்தால் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ‘பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை’ என்பது உறுதி.

பள்ளி பொதுத் தேர்வு ‘ரேங்க்’ பட்டியலில் பெண்களே அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவ்வளவு ஏன்? கடந்த பல ஆண்டுகளாக ஆண்களை விடப் பெண்களின் தேர்ச்சி சதவீதமே பொதுத் தேர்வுகளில் அதிகம். பிளஸ் 2 வரை இருக்கும் பெண்களின் சாதனைகள், உயர்கல்வியில்..., ஆராய்ச்சியில்..., வேலை வாய்ப்பில்..., மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே செல்கிறது, என்பதே இங்கே சிந்திக்க வேண்டிய விஷயம்.

தான் விரும்பும் படிப்பை, நேசிக்கும் துறையை, ஆசைப்படும் வேலையைச் செய்வதில் இருந்து பெண்களை தடுப்பது எது?! வறுமையா? சமூகமா? குடும்பமா? இல்லை தயக்கமா?

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us