ஆசியாவின் பெருமை ‘என்.யு.எஸ்.,’! | Kalvimalar - News

ஆசியாவின் பெருமை ‘என்.யு.எஸ்.,’!நவம்பர் 24,2017,11:05 IST

எழுத்தின் அளவு :

சிறந்த பாடத்திட்டங்களை வடிவமைத்து, ஆழ்ந்த கல்வி அறிவை புகட்டி, ஆசியாவின் முன்னணி பல்கலைக்கழகம், என்ற இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது, ‘என்.யு.எஸ்.,’ எனும் ‘சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்’!

துறைகள் மற்றும் படிப்புகள்
மருத்துவக் கல்லூரியாக 1905ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தற்போது சிங்கப்பூரின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாக திகழும் இந்நிறுவனம், கலை, அறிவியல், வணிகம், கம்ப்யூட்டிங், மருத்துவம், பல் மருத்துவம், வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சுழல், பொறியியல், சட்டம், இசை, பொது சுகாதாரம், அறிவியல், பொது கொள்கை, கல்வியியல், ஒருங்கிணைந்த அறிவியல் போன்ற துறைகளில், மிகவும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.

சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் மொழியியல், கணக்கியல், பகுப்பாய்வு மற்றும் செயல்பாடுகள், நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல் மற்றும் தகவல் பாதுகாப்பு, கட்டடக்கலை, தொழில்துறை வடிவமைப்பு மற்றும் வசதி மேலாண்மை, உயிரிமருத்துவ பொறியியல், இரசாயனம் மற்றும் உயிர் வேதியியல் பொறியியல், சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மின் மற்றும் கணினி பொறியியல், பொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல், இயந்திரவியல், தொழில்துறை பொறியியல், ஜியோ தொழில்நுட்ப பொறியியல், ஹைட்ராலிக் மற்றும் நீர் வள மேலாண்மை பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.

மருத்துவ மையம்
மருத்துவக் கல்வியில் முன்னோடியாக உள்ள, இப்பல்கலையின் ’யாங் லூ லின்’ மருத்துவ பள்ளியானது, சிங்கப்பூரின் மருத்துவம் மையமாக செயல்படுகிறது. மயக்க மருந்தியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், நோயியல், உடலியல், உளவியல் மருத்துவம், நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பு, மருந்தியல், கதிரியக்கம், எலும்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறியலில் மற்றும் செவிமடலியல் போன்ற, மொத்தம் 18 துறை பிரிவுகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை
இளநிலை பட்டப்படிப்பில், 2018ம் ஆண்டிற்கான சேர்க்கை துவங்கியுள்ளது. ஆங்கில மொழியை ஒரு பாடமாக கொண்டு, மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்டர்நேஷனல் பக்களுரெட் (ஐ.பி.,) அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்,  ஏ.சி.டி., மற்றும் ‘சேட்’  ஆகிய தகுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச்  31, 2018

விபரங்களுக்கு: www.nus.edu.sg

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us