மாற்றம் தேவை! | Kalvimalar - News

மாற்றம் தேவை! செப்டம்பர் 20,2017,16:30 IST

எழுத்தின் அளவு :

பொறியியல் படிப்பின் முக்கிய குறிக்கோள், நான்கு ஆண்டுகள் படித்து முடித்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகள், பொருட்களை தயாரிக்கவும் அல்லது வடிவமைக்கவும் கற்றுக்கொண்டு, தங்களை தொழில்முனைவோராக மேம்படுத்திக் கொள்வது தான்! ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகி உள்ளதா?

முதலில், மாணவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அடிப்படையில், பொறியியல் என்பது கற்று கொண்ட அறிவியலை பயன்படுத்தி ஒரு பொருளை இயக்குவது அல்லது தயாரிப்பதே.

கவனியுங்கள்
பொறியியல் படிக்கும் மாணவர்கள், எலட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் போன்ற கருவிகளை, பிரித்து அதில் உள்ள மின்சுற்றுக்கள் மற்றும் மோட்டார்கள் எவ்வாறு இயங்குகின்றன?, காந்த விசையின் அளவு, மின்விசை ஆற்றல் மற்றும் வேகம், உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மீண்டும் அதை பழைய நிலையில் பொருத்தி, சுயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

’தியரி’யாக பொறியியல் பாடங்களை கற்றுக்கொள்ளாமல், நடைமுறை வாழ்க்கையுடன் பாடங்களை ஒப்புகை படுத்தி,செயல்முறை விளக்கங்களுடன் படிக்க வேண்டும். தாமாக ஒரு பொருட்களை கண்டுபிடித்து அல்லது ஏற்கனவே இருக்கும் சாதனங்களை பயன்படுத்தி புதிய கருவிகள், பொருட்கள் அல்லது மென்பொருள் போன்றவற்றை  தயாரிப்பதற்கு தேவைப்படும், அறிவுசார் நுண் திறன்களை வளர்த்து கொள்வது அவசியம். அதனால், கல்லூரி நாட்களில் வரும் ஆய்வக வகுப்புகளை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பயன்படுத்துங்கள்
தீபாவளி அன்று சாதாரணமாக நாம் வெடிக்கும், ராக்கெட் பட்டாசுகள் எப்படி மேலே சென்று வெடிக்கிறது, அதன் நீலம், அகலம் மற்றும் எடை என்ன, என்பதை ஆராய்ந்து, தெரிந்து கொண்டால், விண்ணில் செல்லும் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் பற்றின அடிப்படை கணித அறிவியல் கோட்பாடுகளை எளிதில் புரிந்து, கற்றுக் கொள்ளலாம்.

நிமிடத்தில் தோன்றும் கேள்விகளுக்கு பதில் கிடைக்க, புத்தகத்தில் இல்லாத எண்ணற்ற தகவல்கள், கூகுள் இணையதளத்தில் கொட்டி கிடக்கின்றன. முகநூல் பக்கங்கள், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து, நம்மை சுற்றி உள்ள அறிவியலை பொறியியலுடன் இணை படுத்தி, கற்றல் அறிவை  மேம்படுத்தி கொள்வது சாலச் சிறந்தது.

வாய்ப்புகள்
தங்களது குழந்தைகளை பொறியியல் படிப்பில் சேர்க்கும் பெரும்பாலான பெற்றோர்களின் முதல் பார்வை, ’கேம்பஸ் பிலேஸ்மெண்ட்’ இந்த கல்லூரியில் இருக்கிறதா? என்பதுதான். இது தவறான அணுகுமுறை! பொறியில் பாடங்களை மனப்பாடம் செய்து, செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து, ’கேம்பஸ்’ மூலம் தகவல் தொழில்நுட்பம் அல்லது ’சர்வீஸ் பேஸ்டு’ துறைகளில் பணியமர்வது, வெற்றி என்ற மாயை பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியர்களுக்கு ’சர்வீஸ் பேஸ்டு’ தொழில் வாய்ப்புகளை மட்டுமே அதிக அளவில் வழங்குகின்றன. மேலும், நிறுவனங்களில் ஏற்படும் பொருளாதார நிர்வாக மாற்றங்களால் பலர் வேலை இலக்கும் சூழலும் உருவாகிறது. அதனால், இத்தகைய வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை நோக்கி, பொறியியல் பட்டதாரிகள் பயணிக்காமல், உங்களை படைப்பாளியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்தியாவில், காற்றாலை, சூரிய ஆற்றல் நிறுவனம், எரி சக்தி நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் உருவாகவும் மற்றும் வளர்ச்சி அடைய, விஞ்ஞான பொறியியல் அறிவு கொண்ட இளம் பட்டதாரிகள் பெறும் அளவில் தேவை! அவர்களுக்கான வாய்ப்புகளும் விரிவடைந்து உள்ளன.

முக்கியம் இல்லை
ஜி.பி., கணக்கில் மனப்பாடம் செய்தால் சிறந்த மாணவன், எம்.பி., கணக்கில் மனப்பாடம் செய்தால் சராசரி மாணவன் மற்றும் கே.பி., கணக்கில் மனப்பாடம் செய்தால் படிப்பில் பின்தங்கிய மாணவன் என்று அவர்களின் அறிவாற்றல் திறன்களை மதிப்பெண்களை வைத்து தரம் பிரித்து, மதிப்பெண்களை நோக்கியே ஓட விடுகிறோம். இது அவசியமற்றது.

’வாழ்க்கைக்கு மதிப்பெண்’ உதவாது என்ற வரிகளுக்கு இணங்க, புத்தாக்கு தொழில்நுட்ப திறன் கொண்டவர்களாக மாணவர்கள் தங்களை, பொறியியல் சார்ந்த அனைத்து துறைகளிலும் மேம்படுத்தி கொள்வது அவசியம்.

-பிரேமானந்த் சேதுராஜன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us