மாணவர்களிடம் ‘கண்டிப்பு’ தேவையில்லை! | Kalvimalar - News

மாணவர்களிடம் ‘கண்டிப்பு’ தேவையில்லை!ஆகஸ்ட் 21,2017,16:49 IST

எழுத்தின் அளவு :

வீட்டுச் சூழலில் வளர்ந்து பழகிப்போன குழந்தைகளுக்கு, பள்ளி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள சில காலங்கள் தேவைப்படுகிறது. அதேபோன்று தான், பள்ளி சூழலில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் நிலையும்... கல்லூரி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள ஓர் ஆண்டிற்கும் மேல் தேவைப்படுகிறது. இது கல்வி கற்கும் விதம், வசதிகள் என அனைத்தும் அடங்கும்!

குறிப்பாக, பள்ளிகளில் பொதுவாக, மனப்பாடம் செய்யும் முறையே பின்பற்றப்படுவதாலும், பிளஸ் 1 பாடங்கள் கற்பிக்கப்படாததாலும், பொறியியல் படிப்பை படிக்கும்போது, மாணவர்கள் கடினமாக உணர்கிறார்கள். இந்நிலையில், கல்லூரி சூழலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் பக்குவப்பட, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தான் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்!

முதலாமாண்டு மாணவர்களுக்கு, கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படைகளை கற்பிக்கவேண்டியதும், ஆங்கில பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அப்போதுதான், மாணவர்களால் பொறியியல் படிப்பை புரிந்து கற்க முடியும்.

பள்ளி படிப்பில், குறைவான கட்-ஆப் மதிப்பெண் எடுத்துள்ளார்கள் என்றால் அவர்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன் குறைவாக இருக்கிறது என்று பொருள் கொள்ளவேண்டுமே தவிர, அவர்களுக்கு கல்வி கற்கும் திறன் குறைவு என்று பொருள் கொள்ளக் கூடாது. எந்த பாடத்திலும், அதன் அடிப்படைகளை மாணவர்களுக்கு புரிய வைத்தாலே போதும், ஆழ்ந்த அறிவை அவர்களாகவே வளர்த்துக்கொள்வார்கள்.

கற்பித்தலின்மூலம் ஒரு பாடத்தில் அதிகபட்சம் 20 சதவீத அறிவை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க முடியுமே தவிர, 100 சதவீத அறிவை எந்த ஒரு கல்வி நிறுவனத்தாலும் வழங்கிவிட முடியாது. மீதமுள்ள 80 சதவீத அறிவை வளர்த்துக்கொள்ள ஏதுவான சூழல்களைத்தான் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி தரவேண்டும்.

பயமும், பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் பேச ஊக்கம் அளிக்க வேண்டும். இணையதளத்தை அனைவருமே பயன்படுத்துகின்றனர்; ஆனால், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறியவில்லை. சமூக ஊடகங்களையும், இணையதளத்தையும் எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஒரு கல்வி நிறுவனம் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றிற்கு கூடுதல் முயற்சியும், கூடுதல் நேரம் தேவை அவ்வளவு தான். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாணவர்கள் அவற்றை புரிந்து திறம்பட செயல்படுவதை கண்கூடாக பார்க்க முடியும்.

மாணவர்களிடம் புரிந்து படிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்துவதே சவாலான விஷயம் போல தோன்றலாம். ஆனால் அது மிக சுலபமானது. எந்த ஒரு விஷயத்தையும் சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்ளப்படும். ‘தண்டனையோ; கண்டிப்போ’ தேவையில்லை.

சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை மாணவர்களிடம் ஏற்படுத்தினாலே, ‘வேலை வாய்ப்பு இல்லை’ என்ற நிலை இல்லாமல் போய்விடும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., போன்ற கூடுதல் பயிற்சிகள் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் அவசியமானது. இவற்றில் ஈடுபடும் மாணவர்கள், வாழ்க்கையில் எத்தகைய சூழல்களையும் சமாளிக்கும் திறன் பெறுகிறார்கள். செயல்முறையில், இவற்றை நாங்கள் உணர்கிறோம்!

-எஸ்.லட்சுமி, முதல்வர், தாகூர் பொறியியல் கல்லூரி, சென்னை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us