முத்துக்களை அள்ள முன்வாருங்கள்! | Kalvimalar - News

முத்துக்களை அள்ள முன்வாருங்கள்!ஆகஸ்ட் 18,2017,17:33 IST

எழுத்தின் அளவு :

பொறியியல் மாணவர்களின் தரம், முன்பைவிட சமீப ஆண்டுகளாக குறைந்துவருவதாகவே நான் கருதுகிறேன். பொதுவாக இன்று கல்வி நிறுவனங்களிலும் சரி, சமுதாயத்திலும் சரி முன்பைவிட நிறைய வசதிகள், வாய்ப்புகள், ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் போன்றவை பெருகினாலும் கூட, பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் திறன்கள் அதிகரித்ததாக தெரியவில்லை!

மாற்றம் காணும் அரசாங்கம், போட்டிபோட்டுக்கொண்டு இன்ஜினியரிங் படிப்பிற்கான, குறைந்தபட்ச கல்வித்தகுதியை குறைத்து, குறைத்து தற்போது, பிளஸ் 2வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஜினியரிங் படிப்பில் இடங்களும் அதிகமாக இருப்பதால், குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் எளிதில் ‘சீட்’ கிடைக்கின்றன. இவ்வாறு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்கள், படிப்பை முழுமையாக நிறைவு செய்வதையே மிக கடினமாக உணர்கின்றனர். ஏனெனில், மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறக்கூடிய படிப்பு அல்ல, இன்ஜினியரிங்!

தேர்ச்சி பெறுவதே கடினம் என்ற நிலையில், ‘இன்ஜினியரிங் பட்டம் பெற்றால் போதும்’ என்ற மனநிலையே அத்தகைய மாணவர்களிடம் உள்ளது. அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வைப்பதே, இன்ஜினியரிங் கல்லூரிகளின் பிரதான நோக்கமாகவும் மாறிவிட்டது. உண்மையான, தரமான பொறியியல் கல்வியை போதிக்க கல்லூரிகளால் இயலவில்லை.

ஆராய்ந்து, அனுபவித்து, புரிந்து படிக்க வேண்டிய இந்த இன்ஜினியரிங் படிப்பை, தேர்வு செய்யும் மாணவர்களின் தரம் உயர வேண்டும்! பள்ளி மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களே பொறியியல் படிப்பை தேர்வு செய்ய முடியும் என்ற நிலைவர வேண்டும். அப்போதுதான், கல்லூரிகளால் அடுத்தநிலைக்கு உயர முடியும்.

லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் உள்ள நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மிக குறைவாக உள்ளன. இதற்கு, பொறியியல் படிப்பிற்கான அடிப்படை தகுதி இல்லாத மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவதும் ஒரு முக்கிய காரணம். தொழில் நிறுவனங்களில் ஆண்டுக்கு ஆண்டு தொழில்நுட்பத்திலும், பணி முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அதற்கு ஏற்ப, பொறியியல் கல்வி பாடத்திட்டம் மேம்படுத்தப்படுவதில்லை. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டும்!

தேவையான திறன்படைத்த மாணவர்களை பெற்றுள்ள போதிலும், பெரும்பாலான கிராமப்புற கல்லூரிகளில் வளாக நேர்காணல் நடத்த தொழில் நிறுவனங்கள் முன்வருவதில்லை. கிராமப்புற கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், வேகம், ஆர்வம், திறன் இருக்கும் மாணவர்களுக்கும் போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள், பாகுபாடின்றி அத்தகைய மாணவர்களையும் தேடிச் செல்ல வேண்டும். சிறிய, கிராமப்புற கல்லூரிகளிலும் முத்துக்கள் இருக்கின்றன. அவைகளை அள்ளிச் செல்ல தொழில் நிறுவனங்கள் முன்வரவேண்டும்!

-பாபு, செயலாளர், கோஜன் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us