இதுவும் தற்கொலையே! | Kalvimalar - News

இதுவும் தற்கொலையே!ஜூலை 17,2017,16:22 IST

எழுத்தின் அளவு :

நாம் எடுக்கும் முயற்சிகளில், பல முறை தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக முயற்சியே செய்யாமல் இருந்து விட்டால், வாழ்க்கையில் வெற்றி எப்படி கிடைக்கும்?

பிறந்த குழந்தை நடை பழகுவதைக் கவனித்திருக்கறீர்களா? கீழே விழுந்தவுடன் உடனே எழுந்து மீண்டும் தன் முயற்சியை, உற்சாகத்தோடு தொடங்கும். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதுதான்!

நம் சமுதாயத்தில் பலர் மற்றவர்களிடம் குறை கண்டு, அவர்களை கேலி செய்தே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகிறார்கள். சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் பயன்படாத மனிதர்கள் அவர்கள். ஒருவருக்கு தொடர் முயற்சியால் ஒரு நல்ல வெற்றி கிடைத்து விட்டால், அந்த புகழில் பங்கு போட முதல் ஆளாக வந்து நிற்கும் கும்பல் அது!

அப்பொழுது அவர்கள் பேசுவதே வேறு மாதிரி இருக்கும்! “நீங்கள் இதை சாதிப்பீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும். அதை நான் பலரிடம் பெருமையாகச் சொல்லியிருக்கிறேன்....” என்று சொல்வார்கள். உண்மையில் அவர்கள் சொன்னது வேறு மாதிரி இருக்கும். இப்படிப்பட்டவர்களின் புகழ்ச்சியும் சரி, இகழ்ச்சியும் சரி  அதை ஒரு போதும் பொருட்படுத்தக் கூடாது. நாம் நம் லட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்!

நம் உயிரை நாமே போக்கிக் கொள்வதை ‘தற்கொலை’ என்று சொல்கிறோம். நம் வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய வெற்றியைக் கூட நாமே தற்கொலை செய்து கொள்ள முடியும்! ஒரு காரியத்தைத் தொடங்கு முன்பே, ‘அது என்னால் முடியாது’ என்று தாழ்வு மனப்பான்மையோடு ஆரம்பித்தால் நிச்சயம் அது வெற்றியைத் தராது; அது தற்கொலைக்கு சமம்!

‘மூட்’ என்ற வார்த்தை சோம்பேறித்தனத்தில் இருந்து உதித்த வார்த்தை! அதை ஒரு போதும் பயன்படுத்திப் பழக வேண்டாம். விதி, அதிர்ஷ்டம் போன்ற வார்த்தைகள் கூட முயற்சி, உழைப்புக்குப் பயந்த சோம்பேறிகள் கண்டுபிடித்த வார்த்தைகள்.

இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள், தங்கள் வாழ்க்கையில் எல்லாக் காரியத்தையும் நாளைக்கு நாளைக்கு என்று ஒத்திப் போட்டுக் கொண்டே போவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் கூட தள்ளிப் போய் கொண்டே இருக்கும். பல காரணங்கள் சொல்லி வேலையை ஒத்திப் போடுவது, முன்னேற்றத்தை தள்ளிப் போடுவது தான்!

‘முடியும்’ என்று உறுதியாக நினைத்தால் அது நிச்சயம் முடியும்! என்னால் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஆழமாக மனதில் விதைத்து விடுங்கள். அது முளைத்து மரமாகி கனி கொடுக்கும்! எல்லா நேரமும் நல்ல நேரமே!

-துடுப்பதி ரகுநாதன்

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us