மனப்பாடம் வேண்டாம்; மனப்படம் வேண்டும்! | Kalvimalar - News

மனப்பாடம் வேண்டாம்; மனப்படம் வேண்டும்!பிப்ரவரி 22,2017,15:45 IST

எழுத்தின் அளவு :

எதைப்படித்தாலும், அதை அகக்காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போது தான், படித்தவை எப்போதும் நினைவில் நீடித்து நிலைக்கும்!

உதாரணத்திற்கு, ஒரு ஆலமரத்தை பற்றி படித்தால், மனதிற்குள்ளாக ஒரு ஆலமரம் காட்சிப்பட வேண்டும். அதன் இலைகள், காற்றால் அசைவதாகவும், விழுதுகள் தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கிளைகளில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருப்பதாகவும், நிழலில் வழிப்போக்கர்கள் அமர்ந்திருப்பதாகவும் மனத்திரையில் காட்சிகள் ஓட வேண்டும். இது வெறும் கற்பனைதான் என்றாலும், காட்சிப் படுத்துவதன் மூலம், வாசிக்கும் கருத்துக்களை மனதின் ஆழத்தில் பதிய வைக்க முடியும்!

மேலும் கற்றலில் ஐந்து நிலைகள் இருக்கின்றன. அவை:
1. அறிதல்
2. புரிதல்
3. சிந்தித்தல்
4. தெளிதல்
5. செயல்படுத்துதல்

அறிதல்: அறிந்து கொள்வது அறிவு. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் வள்ளுவர். துன்பத்தைப் போக்கும் வல்லமை அறிவுக்கு இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளுக்கு விடை தேடினால், அறிவு வளரத் தொடங்கும். அறிவு வளத்தைப் பெருக்குவதற்கு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

புரிதல்: அறிவது என்பது எதையும் புரிந்து கொள்வதற்குத் தான். புரிதலை உண்டாக்காததால் மனதில் நிற்பதில்லை. புரியும் போதுதான் உள்ளம் பூரிக்கிறது. கற்றதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் நிகழ்ந்தால்தான் சிந்தனை தோன்றும்.

சிந்தித்தல்: புரிந்து கொண்டதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல், அது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘மெய்ப்பொருள்’ காண முயற்சிக்க வேண்டும். எதையும் ஏற்புடையதா? எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்க சிந்திக்கத்தான் தெளிவு பிறக்கும்.

தெளிதல்: “தெளிந்த நல்லறிவு வேண்டும்” என்றார் மகாகவி பாரதி. குழப்பிமில்லாத நல்லறிவே சிறந்த சக்தி வாய்ந்தது. ஆகவே, கற்றுப் புரிந்து பின்னர், அதுகுறித்து சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

செயல்படுதல்: செயலாக்கம் பெறாத அறிவினால் எந்த நன்மையும் உண்டாகாது. ஆகவே, சிந்தித்து தெளிந்தனவற்றை நடமுறை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அப்போது கற்றதன் பயன் மங்காது கிடைக்கும்!

-முனைவர் கவிதாசன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us