தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்: கிராமப்புற மாணவர் சிரமம் குறையும் | Kalvimalar - News

தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்: கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்செப்டம்பர் 11,2013,08:50 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த பணிகளை கவனிக்க, இயக்குனரகத்தில் இருந்து பணியாளர்கள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

தேர்வு எழுதுவதற்கும், அதன்பின், விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல், மறு மதிப்பீடு, தனித்தேர்வு என, ஒவ்வொன்றுக்கும், மாணவர்கள், தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. அனைத்து பதிவுகளையும், தேர்வுத்துறை இணையதளம் வழியாகவே செய்ய வேண்டிய நிலையில், மாணவர்கள் உள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

எந்த கட்டணமாக இருந்தாலும், இணையதளத்தில் இருந்து கட்டண செலுத்துச் சீட்டை பதிவிறக்கம் செய்து, பின், அதில் உள்ள விவரங்களை நிரப்பி, வங்கியில், கட்டணத்தை செலுத்த வேண்டும். பின், அந்த கட்டண சலானை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து, மீண்டும், தேர்வுத்துறை குறிப்பிடும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு திட்டத்திற்கு விண்ணப்பித்து முடிப்பதற்குள், மாணவர்களுக்கு, போதும் போதும் என்றாகி விடுகிறது.

இந்நிலையில், கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்களை நீக்கி, மாணவர்கள், எளிதில், தேர்வுத்துறை அலுவலர்களிடம், பணமாக செலுத்துவதற்கு, இயக்குனர், தேவராஜன் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் துவங்க உள்ள, பிளஸ் 2 தனித்தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான கட்டணங்களை, இந்த வகையில் செலுத்துவதற்கு, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

விண்ணப்பம் பெறுவதிலும், கட்டணங்களை பெறுவதிலும், எவ்வித குழப்பங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இயக்குனரகத்தில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்தும், தேவையான பணியாளர்கள், விண்ணப்பம் மற்றும் கட்டணம் பெறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 68 கல்வி மாவட்டங்களிலும், இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து, தேர்வுத்துறை பணியாளர்கள் சிலர் கூறியதாவது: சரியாக விண்ணப்பிக்காதது, சரியான முகவரியில் கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட காரணங் களால், பல மாணவர்களின், தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போதைய, புதிய நடவடிக்கை காரணமாக, மாணவர்கள் பாதிப்படைவது, பெரிதும் தடுத்து நிறுத்தப்படும்.

ஏனெனில், நாங்கள், விண்ணப்பத்தை, முழுமையாக சரிபார்த்து, குறை இருந்தால், அதைப்பற்றி கூறி, சரி செய்யச் சொல்கிறோம். இதனால், மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படாது. அவர்கள் விண்ணப்பம், 100 சதவீதம் ஏற்கப்படும் என்பதை, உறுதி செய்கிறோம். ஆனால், இந்த பணிக்காக, எங்களை ஈடுபடுத்தும் போது, வழக்கமாக நாங்கள் செய்கின்ற பணிகள், அப்படியே தேங்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த பிரச்னையை சரிசெய்ய, தேர்வுத்துறையில் காலியாக உள்ள, 90 உதவியாளர் பணிஇடங்களை நிரப்ப, இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பிரச்னை தீரும். மேலும், பல்வேறு தேர்வுகளுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us