துணிவைத் தோழனாக்குங்கள்! | Kalvimalar - News

துணிவைத் தோழனாக்குங்கள்!பிப்ரவரி 12,2016,13:02 IST

எழுத்தின் அளவு :

‘துணிந்தவனுக்கு தூக்குமேடையும் ஒரு பஞ்சு மெத்தைதான்’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் கர்ஜனை ஆங்கிலேயரையே நடுங்கச் செய்தது. ஆம்! துணிந்து எழுபவன் கைதட்டல் பெறுகிறான். பயந்து கிடப்பவன் கைதட்டல் தருகிறான்!

துணிச்சல், முயற்சிக்கு மின்சாரம் பாய்ச்சுகிறது. முனை இருக்கிற ஊசிதான் தைக்கும், அதுபோல துணிச்சலுடன் பணிவும் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். வீழ்வதில் வெட்கமில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்!

நல்லதைத் துணிந்து செய்வேன். விளைவு எதுவாயினும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன் என்ற மனப்பக்குவமே, புதிய முயற்சிகளைத் துணிந்து எடுக்கச் செய்கிறது. புதிய முயற்சிகளின் மூலம் இணையில்லாத வெற்றிகளை பெற்றுத் தருகிறது. பயந்தவன் முயல்வதில்லை; துணிந்தவன் தோல்வியோடு ஒருபோதும் தேங்கிவிடுவதில்லை.

இலக்குகளை அடைய முயற்சி மட்டும் போதாது, தோல்வி மேல் தோல்வி வரும்போது, தளராத மனமும், துணிச்சலோடு மீண்டும் மீண்டும் போராடும் குணமும் வேண்டும். எடுத்ததற்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்பவர்களை உலக வரலாறும் ஒதுக்கி வைத்து விடுகிறது.

வாழ்வது ஒரு முறை வரலாறு படைத்திட யார் துணை? என்ற கேள்வி எழும்போது, துணிச்சலே எப்பொழுதும் துணை என்ற பதில் மனதில் ஒளிரட்டும். பிரச்சனைகளைக் கண்டு ஒருபோதும் பின்வாங்காதீர்கள். பிரச்சனை என்றால் ஒரு தீயணைப்பு வீரனைப் போல அதை நோக்கியே முன்னேறுங்கள். ஏனென்றால் விலகி ஓடினால் பிரச்சனைகள் உங்களை விடாமல் துரத்தும்.

‘நாமே நமக்குத் துணை’ என்று நினைக்கும் போதுதான் நமக்குள்ளாக துணிச்சல் நெருப்பு பற்றிக் கொள்கிறது. மற்றவர்களுடைய கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை நமது கைகள் உழைக்க ஓங்குவதில்லை.

கப்பலுக்குப் பாதுகாப்பான இடம் துறைமுகம்தான், என்றாலும் அது அதற்காகவல்ல என்பதை உணர்ந்து, அச்சத்தின் பிடியில் அகப்பட்டு தாழ்வு மனப்பான்மை என்னும் கரையானுக்கு இரையாகி வாழ்நாளைக் கொஞ்சமாக அழித்துக் கொள்வதை விட்டு விட்டு, ஆனது ஆகட்டும் ஒருகை பார்க்கலாம் என்று துணிச்சலோடு உழைக்கத் தொடங்கியவர்களுக்கு மட்டுமே உலக வரலாறு மணிமகுடம் சூட்டி மகிழ்விக்கிறது. ஆகவே, கனவுகளோடு கரைந்து போகாமல் துணிவைத் துணையாக்கித் துள்ளி எழுந்து உழைப்பில் மூழ்குங்கள்.

வெற்றி தேவதை உங்களுக்கு நெற்றித் திலகமிடக் துணிச்சலோடு எதையும் செய்ய வேண்டும் என்றாலும், மனசாட்சி இல்லாத துணிச்சல் என்பது ஒரு காட்டு விலங்கினைப் போன்று அபாயகரமானது. அவற்றை மனசாட்சியுடனும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.

நேர்மையை நெஞ்சமாக்கி, துணிவைத் தோழனாக்கி உழைப்பை உயிர் மூச்சாக்கினால் வெற்றிகள் உனது விலாசமாகும். சாதனைகள் உலக சரித்திரமாகும்!

-முனைவர் கவிதாசன்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us