வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி | Kalvimalar - News

வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சிஜூன் 30,2013,08:21 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில் மோசடியைத் தவிர்க்க, அரசு தற்போது விதித்துள்ள, கிடிக்கிப்பிடி உத்தரவால், பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கி, அயல்நாடு சென்று கல்வி கற்பது வரை, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது.

தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் நலத்துறை சார்பில், மூன்றாம் வகுப்பு முதல், மருத்துவப் படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை சார்பிலும், உழவர் பாதுகாப்பு திட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், அமைப்புசாரா தொழிலார்கள் துறை சார்பில், அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அவை, பணமாகவே கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு முதல், கல்லூரி மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் வழங்கப்படும், கல்வி உதவி அனைத்தும், பள்ளி மாணவருக்கும், வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த கிடிக்கிப்பிடியால், கல்வி உதவித்தொகை பெற்றுத்தர, லஞ்சம் உள்ளிட்ட முறைகேடு வேலைகளில் ஈடுபட்ட, சில தலைமை ஆசிரியர்கள் அதிர்ந்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், எங்கள் துறை மூலம், சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில், போலியான பெயரில் மாணவர்களின் கையெழுத்தை போட்டு, லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்தது.

அதில் சிக்கிய, 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள் மூலம், கல்வி உதவித்தொகை பணமாக வழங்கப்பட்டதால், அதில் மோசடி நடந்தது. நடப்பாண்டு, மோசடியை தவிர்க்க, மாணவர்கள் பெயரில், "நெட் பேங்கிங்" வசதியுள்ள வங்கிகளில், மாணவர்களின் பெயரில் தந்தையுடன், கூட்டு அக்கவுண்ட் துவங்கப்படும்.

மாணவர்கள் வங்கிக்கு சென்று, கணக்கு துவங்க செல்ல வேண்டியதில்லை.
வங்கியாளர்களே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, வங்கி கணக்கை துவங்கி கொடுப்பர். பின், எங்களது துறையில் இருந்து பணம் பரிவர்த்தனை, மாணவர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

"நெட் பேங்கிங்" வசதியில்லாத பகுதி மாணவர்களுக்கு, தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கி, உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், மாணவரின் பெற்றோர் செய்யும் தொழில் குறித்த விவரங்களை, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில், வி.ஏ.ஓ., சான்று பெற வேண்டும்.

அரசின் இந்த உத்தரவால், 100 சதவீதம் பயனும், எவ்வித மோசடிக்கு வழியும் இன்றி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் இந்த உத்தரவால், பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டாலும், மாணவர்களின் பணத்தை விருப்பப்படி செலவழித்து விட்டு, கடைசி நேரத்தில், அவர்களுக்கு வழங்கி வந்த பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us