எதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம் | Kalvimalar - News

எதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்மே 24,2015,16:49 IST

எழுத்தின் அளவு :

பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து, உயர்கல்விக்கு செல்லும் காலகட்டத்தில், பல மாணவர்கள், அதற்கான ஏற்பாடுகளில், மும்முரமாக இருக்கும் காலகட்டம் இது.

இந்தியாவில், குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் பொறியியல் படிப்பா? பலராலும் பெரிதாக நினைத்து விரும்பப்படும் மருத்துவமா? கலை, அறிவியல் படிப்பா? தொழில்நுட்ப படிப்பா? மேலாண்மை படிப்பா? அல்லது டிப்ளமோவா என்பன போன்ற பலவித குழப்பங்களில் மாணவர்கள் சிக்கித் தவிப்பர்.

இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெரிய கொடுமை என்னவென்றால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கூட, தாங்கள் விரும்பிய படிப்பை படித்து, விரும்பிய துறையில் பணிபுரியும் ஒரு நல்வாய்ப்பு வாய்ப்பதில்லை.

சமூக அந்தஸ்து, நல்ல வேலை வாய்ப்பு, சிறப்பான சம்பளம், பெற்றோரின் விருப்பம், மூன்றாம் நபரின் தலையீடு, போதுமான விழிப்புணர்வு இல்லாமை, நாட்டின் சூழல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், பலரும், தங்களுக்கு விருப்பமில்லாத படிப்பிலேயே சேர்ந்து படிக்கின்றனர். பாதிபேர், படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைப் பெறும் நிலையில், இன்னும் பாதிபேர், படிப்புக்கு தொடர்பேயில்லாத பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

அதாவது, விருப்பமில்லாத ஒரு படிப்பில் சேர்ந்து, அதை படித்து முடித்து, கடைசியில், அந்த படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைக்கூட பெற முடியாமல், வேறு ஏதோவொரு பணி வாய்ப்பை பெற்று, தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இதை கொடுமையிலும் கொடுமை என்று கூறலாம்.

40 மற்றும் 50 வயதைக் கடந்த பலர், தாங்கள் செய்யும் பணிகளில் திருப்தியில்லாமல்,

"ஏதோ, வேறு வழியில்லை, இப்படியே என் காலத்தை ஓட்டிவிட்டேன்; என்ன செய்வது, வருமானத்திற்காக ஏதோ ஒரு வேலையைப் பார்த்துதானே ஆக வேண்டியுள்ளது. என் பள்ளி மற்றும் கல்லுரி நாட்களில், நான் சிறந்த விளையாட்டு வீரன்/வீராங்கனை. ஆனால், என் தந்தைக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தி, ------- பட்டப் படிப்பை படிக்க வைத்தார். கடைசியில், அந்தப் படிப்பிற்குகூட சம்பந்தமில்லாத வேலையைத்தான் நான் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, குப்பைக்கொட்டி வருகிறேன்; இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. விரும்பிய பணியையும் மேற்கொள்ள முடியவில்லை"

என்பன போன்று, பல ரகமாக புலம்புவதை பலர் கேட்டிருக்கலாம்.

இதில், நமக்கான எச்சரிக்கை என்னவென்றால், இதுபோன்றதொரு வகையான புலம்பல், நாளை நம்முடையதாகி விடக்கூடாது. எனவே, மாணவர்களே, உங்களுக்கான உயர்கல்வியை மிகவும் கவனமாக தேர்வு செய்யுங்கள்.

பெற்றோர்கள், நாம் மோசம் போக வேண்டுமென நினைப்பதில்லை. ஏதோ அறியாமை அல்லது சமூக அழுத்தம் அல்லது அவர்களுடைய ஆசை ஆகியவற்றுக்காக நம்மை, உயர்கல்வி விஷயத்தில், நமது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்துகிறார்கள், அவ்வளவே. அவர்களை, நம்மளவிலோ அல்லது வேறு யாரேனும் சரியான நபர்களின் துணைகொண்டோ புரிய வைப்பது நம் கடமை.

இந்த சமூகத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை எங்குள்ளதோ, அதை நோக்கி இந்த சமூகம் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த சமூகத்தில் நிலவும் சூழலின் பொருட்டு, உங்களுக்கான படிப்பை தயவுசெய்து தேர்வுசெய்ய வேண்டாம்.

உங்களின் திறமை, விருப்பம் மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே படிப்பை தேர்வு செய்யவும். உங்களின் துறையில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால், இந்த சமூகம் உங்களைத் தூக்கி கொண்டாடும்.

இன்று புதிதுபுதிதாக பல துறைகள் முளைத்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த சில துறைகள், இன்று, வேறு வகையில் புத்துணர்வு பெற்று வருகின்றன. தகவல் தொழில்நுட்ப உலகில், நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். 20 ஆண்டுகளுக்கு அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை.

எனவே, உங்களுக்கான படிப்பை தேர்வு செய்யும்போது, இதைவைத்து நாம் பிழைக்க முடியுமா, கரை சேர முடியுமா? என்று வெறுமனே யோசிக்காமல், இத்துறையில் நுழைந்தால், நாம் எப்படியெல்லாம் நம் திறனை வளர்த்துக்கொண்டு, நம்மை சிறப்பான முறையில் வெளிப்படுத்திக்கொண்டு, புகழையும், பணத்தையும் சம்பாதிக்கலாம், இந்த சமூகத்திற்கு எதையாவது நல்லது செய்யலாம் என்பதைப் பற்றி மட்டுமே யோசியுங்கள்.

உங்கள் லட்சியத்தை, சரியான முறையில் திட்டமிட்டு, அதற்கேற்ப, விடாமுயற்சியுடன் உழைத்து, அதை அடைந்துவிட்டால், அப்புறம் பாருங்கள், இந்த சமூகம், உங்களை நோக்கி திரும்பி பார்க்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us