மாற்றங்கள் காணும் மருத்துவத் துறை! | Kalvimalar - News

மாற்றங்கள் காணும் மருத்துவத் துறை!ஏப்ரல் 15,2015,12:31 IST

எழுத்தின் அளவு :

கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவ துறையில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன; மக்களின் எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன.

தொழில்நுட்ப புரட்சியால் உலகில் நடக்கும் விஷயங்களை மக்கள் உடனுக்குடன் அறிகின்றனர். நோயாளிகளை பரிசோதித்து அளிக்கப்படும் அறிக்கை, அடுத்த நிமிடமே அயல்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு செல்கிறது. அங்குள்ள மருத்துவ வல்லுனர்களுடன் உடனடியாக ஆலோசித்து, சிகிச்சை முறை குறித்த பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

பாடத்திட்டத்திலும் மாற்றங்கள்

இன்று நோய் வரும் முன்பே காப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு நோய் வந்தவுடன் குணப்படுத்துவதைவிட, வருவதற்கு முன்பே தடுப்பதற்கான செலவு குறைவே. மருத்துவ பாதுகாப்பு அளிப்பதில் அரசுக்கு மட்டுமே பொறுப்புள்ளது என்றில்லை; அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு.

மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் வெகுவாக அதிகரித்துள்ளது. இவற்றை உணர்ந்து, எதிர்கால தேவைக்கு ஏற்ப மருத்துவத் துறையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை புதுப்பிக்கிறது இந்திய மருத்துவக் கவுன்சில்.

எம்.பி.பி.எஸ்., மட்டும் போதாது

தங்களுக்கான படிப்பை தேர்வு செய்வதில், இன்று மாணவர்கள் மிகவும் தெளிவாக திட்டமிட்டு முடிவு எடுக்கின்றனர். அனாடமி, பிசியாலஜி, பார்மகாலஜி, பெத்தாலஜி போன்ற மருத்துவத்தின் அனைத்து அடிப்படை சாராம்சங்களையும் உள்ளடக்கிய துவக்கநிலை படிப்பாக எம்.பி.பி.எஸ்., விளங்குகிறது.

இன்றைய நிலையில், ஒரு துவக்கநிலை டாக்டராக மட்டும் இருப்பது போதாது.  ஸ்பெஷலைசேஷன் மற்றும் சூப்பர் ஸ்பெஷலைசேஷன் நிலைக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இன்று, நியூரோ, கார்டியோ உள்ளிட்ட ஏராளமான சிறப்பு பிரிவுகளையும் கடந்து, அவற்றில் பல உட்பிரிவுகளும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமிக்க நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவத் துறையின் மாற்றத்தை உணர்ந்து, அதற்கேட்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளும் மாணவர்களையே, இன்றைய கல்வி நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.

தேவை மிகுந்த படிப்புகள்

எம்.பி.பி.எஸ்., படிப்பை கடந்து, பல் மருத்துவம், பார்மசி, பிசியோதெரபி, நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.  பி.எஸ்சி.,(ஸ்போர்ட்ஸ் மெடிசின்), எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்), என்விரான்மென்ட் ஸ்டடீஸ், ஸ்பீச் லேங்குவேஜ் தெரபி உள்ளிட்ட புதிய படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மருத்துவத்துறையின் தேவையை உணர்ந்து, நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், இத்தகைய பல்வேறு படிப்புகளை வழங்குவதில் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழ்கிறது.

- டாக்டர் ஜே.எஸ்.என். மூர்த்தி, துணைவேந்தர், ஸ்ரீராமசந்திரா பல்கலைக்கழகம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us