உங்களை உயர்த்தும் பழக்கங்கள் | Kalvimalar - News

உங்களை உயர்த்தும் பழக்கங்கள்பிப்ரவரி 24,2015,17:22 IST

எழுத்தின் அளவு :

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்‘

தமிழகப் பேருந்துகளில் வள்ளுவரின் இந்த வைர வரிகளை அடிக்கடி பார்க்கும்போது, அதனுடனே ஒரு கேள்வியும் எழுகிறது.

மேன்மை தரும் ஒழுக்கத்தை அடைய, இன்றைய இளைஞர்கள் அன்றாடம் என்னென்ன பழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர் என்பது தான் அது.

முதலில், என்றோ ஆன்றோர் சொன்ன ஓர் கருத்தை மனதில் அசை போடுவோம்.
 
‘உன்  எண்ணங்களை கவனி.  அவை வார்த்தைகளாகின்றன.
 உன் வார்த்தைகளை கவனி. அவை செயல்களாகின்றன.
 உன் செயல்களை கவனி. அவை பழக்கங்கள் ஆகின்றன.
 உன் பழக்கங்களை கவனி. அவை நடத்தையாகிறது.
 உன் நடத்தையை கவனி. அது விதியாகிறது.’

ஒருவரது நல்ல எண்ணங்களே, அவரது வாழ்க்கை விதியை நல்லபடியாக உருவாக்குகின்றன என்பதை, நாம் புரிந்துகொள்ளலாம். ’எல்லாம் என் விதி’ என நொந்து கொள்பவர், தன் எண்ணங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதையே சங்க காலத்திலேயே ’தீதும், நன்றும் பிறர் தர வாரா’என கணியன்  பூங்குன்றனார் ’நச்’சென்று கூறியிருக்கிறார். ‘மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு’ என வள்ளுவரும் அடித்துச் சொல்லியிருக்கிறார்.

பழக்கம் எப்படி உருவாகிறது?

‘ஒரு செயலைச் செய்ய ’என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும்’ என்பது அறிவு. ’எப்படிச் செய்யவேண்டும்’ என்பது திறன். ’விரும்பிச் செய்ய’  நினைப்பது ஆர்வம். ஒருவர் ஒரு செயலை அறிவு, திறன் மற்றும் ஆர்வம் மூன்றோடும்,  திரும்பத் திரும்பச் செய்தால், அது பழக்கமாகி விடுகிறது.

பழக்கங்களை உண்டாக்குவதும், உடைப்பதும், மேலே சொன்ன மூன்றும் இணையும்போதுதான்!  எனவே, ஒரு கெட்ட பழக்கத்தை ஒழிக்கவும், நல்ல பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவும், அம்மூன்றில் ஒன்றையோ, இரண்டையோ அல்லது மூன்றையுமோ, தக்கபடி  மாற்றி, பின்பு இணைத்தால் போதும்!

தத்துவஞானி அரிஸ்டாட்டில் சொன்னதை நினைவில் கொள்வோம்! ‘நீ என்பது உன் எண்ணங்களே! எனவே, ஒளிர்விடும் திறமை என்பது ஓர் பழக்கமே, செயல் அல்ல.‘

-ஏ.வி.ராமநாதன், மனித வள மேம்பாட்டு ஆர்வலர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us