41 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசுப் பள்ளி மாணவர்கள்: கனத்த இதயத்துடன் பிரிந்தபோது கண்ணீர்! | Kalvimalar - News

41 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசுப் பள்ளி மாணவர்கள்: கனத்த இதயத்துடன் பிரிந்தபோது கண்ணீர்!ஏப்ரல் 22,2013,10:59 IST

எழுத்தின் அளவு :

அன்னூர்: "நீங்க...செந்தில்தானே..." "ஆமா... உங்களை பார்த்தா... கரெக்ட்... நீங்க ராமசாமிதானே..." இப்படி மிகுந்த தயக்கமுடனும் மரியாதையுடனும் துவங்கிய அந்த சந்திப்புகள், பின்னர், "டேய் எப்படிடா இருக்கே... இது யார் உன் சம்சாரமா...வணக்கங்க..." என, அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 41 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட நண்பர்கள்தான், இப்படி நெருக்கமாகவும் உருக்கமாகவும் அளவளாவிக் கொண்டனர்.

இப்பள்ளியில், 1971-72ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., (பழைய எஸ்.எஸ்.எல்.சி.,) "ஏ" செக்ஷனில் 36 பேர் படித்தனர். அப்போது படித்த மாணவர்கள் 41 ஆண்டுக்கு பின் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தனர்.

பள்ளி வருகை பதிவேட்டைப் பெற்று விசாரித்ததில், 36 பேரில் ஏழு பேர் இறந்து விட்டது தெரிய வந்தது. மீதி 29 பேருக்கு, இந்த அரிய சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று பள்ளி வளாகத்தில் சந்திப்பு நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் 27 பேர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக தலைமை ஆசிரியர் சந்திரன் பங்கேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சந்திரன் வரவேற்றார். பள்ளிக்கு யு.பி.எஸ்., அல்லது பள்ளிக்கு தேவையான ஏதாவது முக்கிய பொருளை கேட்டு வழங்கவும், அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் சார்பில், பர்மா ரங்கூன் நகரில், நிர்வாக அலுவலராக பணிபுரியும் முன்னாள் மாணவர் கனகராஜன், பேசுகையில், "வறுமை காரணமாக, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மேல் படிக்க முடியவில்லை. அஞ்சல் வழியில் பி.காம் மற்றும் எம்.ஏ., (பொது நிர்வாகம்) படித்தேன். எந்த வேலையில் சேர்ந்தாலும், அதை விட உயர்வான வேலைக்கு முயற்சி செய்வேன். தொடர்ந்து முயற்சி செய்ததால், சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான், இப்போது உயர் பதவி வகிக்கிறேன். உயர்வாக எண்ண வேண்டும். அதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்," என்றார்.

60 ஆண்டுகள் ஆன இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில், கே.ஜி., மருத்துவமனை சேர்மன் பக்தவத்சலம், எஸ்.என்.எஸ்.கல்லூரி தாளாளர் சுப்பிரமணியம், லயன்ஸ் கிளப் சர்வதேச இயக்குனர் ராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முன்னாள் மாணவர் சந்திரன், ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். மணிமேகலை கோவை, சிறைத்துறை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பணிபுரிகிறார். மின்வாரிய உதவி பொறியாளர் (ஓய்வு) முகமது உசேன் உள்பட பலர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், வெற்றி கண்ட விதம் ஆகியவற்றை உருக்கமாக தெரிவித்தனர்.
 
சிலர் தங்கள் மகன், மகள், பேரக் குழந்தைகளுடன் பங்கேற்றனர். 41 ஆண்டுகளுக்குபின் தங்கள் பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர். மொபைல் போன்களில் பரஸ்பரம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவின் இறுதியில் பிரியும் முன், "இனி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போமா?" என ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்த சந்தேகத்தையும், கூடவே துளிர்த்த கண்ணீரையும் தவிர்க்க முடியவில்லை.


வாசகர் கருத்து

This is a memorable moment in life. .:-P
by PuvaneshVaran,India    22-ஏப்-2013 20:34:40 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us