டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் குளறுபடி | Kalvimalar - News

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் குளறுபடிஏப்ரல் 08,2013,08:36 IST

எழுத்தின் அளவு :

சென்னை: உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடத்துக்கான, டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வில், தேர்வு எழுத அதிகப்படியானோர் வந்ததால், காலதாமதம் ஏற்பட்டது.

கம்ப்யூட்டர் இல்லாதது, ஆன்-லைன் பிரச்னையால், சிலர் பெயரளவுக்கு தேர்வை எழுதிவிட்டு, சோகத்துடன் சென்றனர். தமிழகம் முழுவதும், காலியாக உள்ள புள்ளியியல் துறை உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு, சென்னை, கோவை, சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், முதன் முறையாக, ஆன்-லைன் மூலம், இந்த தேர்வை நடத்தியது. 9,000க்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொண்டனர்.சென்னையில், பூந்தமல்லி, வண்டலூர், கிழக்கு கடற்கரை சாலை இடங்களில் உள்ள கல்லூரிகளில், தேர்வு நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, சென்னையில் இருந்து, ஆன்-லைன் மூலம், தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு தேர்வருக்கும், கம்ப்யூட்டர் ஒன்று பிரத்யேகமாக கொடுக்கப்பட்டது.

பூந்தமல்லி பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த தேர்வில், ஆன்-லைன் இணைப்பு சரிவர கிடைக்காததால், 40 பேர் தேர்வு எழுத காலதாமதமானது. சேலம் மாவட்டத்தில், சேலம், எம்.பெருமாபாளையம், ஓமலூர், மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் தேர்வு நடந்தது.

சேலம் கணேஷ் கல்லூரியில் நடந்த தேர்வில், ஆன்-லைன் இணைப்பு சரிவர கிடைக்காததால், தேர்வர்களுக்கு காலதாமதமானது. நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு எழுத ஆட்கள் வந்திருந்தனர்.

அவர்களுக்கு, உடனடியாக கம்ப்யூட்டர் தயார் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுத வந்த பலர் விரக்திக்குள்ளாகினர்.ஒரு மணி நேர தாமதத்துக்கு பின், தேர்வு எழுதியும், முழுமையான வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தேர்வர்கள் புலம்பினர். ஆன்-லைன் குளறுபடியானதையடுத்து, தேர்வு எழுத, அரை மணி நேரம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தேர்வு எழுதிய ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் மூலம் நடத்தியது. சேலம் தனியார் கல்லூரியில், சரிவர ஏற்பாடு இல்லாததும், ஆன்-லைன் கிடைக்காததாலும், தேர்வு எழுதுவதில், காலதாமதம் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து, நிர்வாகம் தேர்வை துவக்குவதால், குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் முடித்துக் கொள்வர். காலதாமதத்தால், அந்த தேர்வை முழுமையாக, எங்களால் எழுத முடியவில்லை. நாற்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆன்-லைன் முறையை ரத்து செய்து, கேள்வித்தாள் மூலம் விடையளிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.

டி.ஆர்.ஓ., செல்வராஜ் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், ஐந்து இடங்களில் தேர்வு நடந்தது. சேலம், தனியார் கல்லூரியில், குறிப்பிட்ட எண்ணிக்கையை காட்டிலும், கூடுதல் எண்ணிக்கையில் தேர்வர்கள் வந்து விட்டனர்.

அவர்களை, ஆன்-லைன் முறையில் எழுத வைக்க, நடவடிக்கை மேற்கொண்டோம்.அதில், சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் பின், எந்தவித பிரச்னையும் இல்லை. அனைத்து சென்டர்களிலும், அமைதியான முறையில் தேர்வு நடந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site