மாணவர் வெள்ளத்தில் தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சி | Kalvimalar - News

மாணவர் வெள்ளத்தில் தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சிஏப்ரல் 07,2013,09:20 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "தினமலர்" நாளிதழ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து, மூன்று நாட்கள் நடத்தும், "வழிகாட்டி" நிகழ்ச்சிக்கு, இரண்டாம் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோருடன் குவிந்தனர். உயர்கல்வி தொடர்பான பல்வேறு தகவல்களை, ஆர்வமுடன் பெற்று சென்றனர்.

அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், "ஜெயித்துக் காட்டுவோம்" மற்றும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், "வழிகாட்டி" என, மாணவர்களுக்காக பல்வேறு உயர் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை, "தினமலர்" நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

18வது ஆண்டில் காலடி வைத்துள்ள, "வழிகாட்டி" நிகழ்ச்சி, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஏப்., 5ம் தேதி துவங்கியது. காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தும், காலை, 8:00 மணி முதலே, மாணவிகளும், பெற்றோரும் அரங்கில் குவிந்தனர். நீண்ட வரிசையில் சென்று, கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிட்டு, உயர்கல்வி தொடர்பான தகவல்களை பெற்றனர்.

இதழியல், அனிமேஷன், இன்டீரியல் டிசைன், தோட்டக் கலை, ஓட்டல் மெனேஜ்மென்ட், நகைகள் வடிவமைப்பு உள்ளிட்ட, பல துறை படிப்புகள் குறித்து, தகவல்களும் அரங்குகளில் பெற்றனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களையும், துறை வல்லுனர்களிடம் பெற்றனர்.

கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் படிப்புகளை தவிர, வேலை வாய்ப்பு துறைகள் குறித்த தகவல்கள், முக்கிய கல்லூரிகள், அவற்றில் உள்ள படிப்புகள், முகவரி, இணையதள முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் துறைகள், வேலைவாய்ப்பு விவரங்கள் உள்ளிட்டவை, அதில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 95 கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஆலோசனை கருத்தரங்கம், காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையிலும் நடக்கிறது. வழிகாட்டி நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.

வழிகாட்டியில்... இன்று நடக்கும் கருத்தரங்கில், "மொழிப் பாடங்களை தேர்ந்தெடுத்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி?" என விவரிக்கிறார், ஞானசம்பந்தம்.

தகவல் தொழில்நுட்ப துறையின் தற்போதைய போக்கு பற்றி பேசுகிறார், ஹேமா கோபால். மேற்படிப்புக்கு காசு வேண்டாமா? வங்கிகளில் கல்வி கடன் பெறும் வழிமுறைகளை விவரிக்கிறார், வணங்காமுடி.

திடீர் முக்கியத்துவம் பெற்றுள்ள நானோடெக், ஏரோஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ் குறித்து பேசுகிறார், அரவிந்தன்.

60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெற்ற மாணவருக்கான மேல்படிப்பு வாய்ப்புகள் குறித்து விளக்குகிறார், ரமேஷ் பிரபா.

வேலைக்கு தயாராவது எப்படி என்று, விளக்கம் தருகிறார் சுஜித்குமார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us