பாரதியார் பல்கலை உள்விளையாட்டு அரங்கம்: இறுதி கட்டத்தில் பணிகள் | Kalvimalar - News

பாரதியார் பல்கலை உள்விளையாட்டு அரங்கம்: இறுதி கட்டத்தில் பணிகள்மார்ச் 29,2013,09:43 IST

எழுத்தின் அளவு :

கோவை: கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த பாரதியார் பல்கலை உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கடந்த 2005ல், பல்கலை துணைவேந்தராக சுப்ரமணியம் இருந்த போது, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.2.5 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. செயல்வடிவம் பெற தாமதமானது. இந்நிலையில், கடந்த 2006 ஆக., துணைவேந்தராக திருவாசகம் பணியாற்றிய போது, பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2007 பிப்., 24ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. ஆனால், வரமுடியாத காரணத்தால், கல்வெட்டு மட்டும் நடப்பட்டு, திட்டமிட்ட நிதியுடன், ரூ. ஒரு கோடியும் சேர்த்து, மூன்றரை கோடி மதிப்பீட்டில், 2007 மே 30ல் பணிகள் துவங்கின.

வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டுத்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கிரிக்கெட், வாலிபால், கபடி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள் கூடுதலாக அமைப்பதற்கு எட்டு ஏக்கர் நிலத்துடன், ரூ.20 கோடி தொகையும் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் உள்விளையாட்டரங்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன.

கடந்த 2009 ஆக., புதிய துணைவேந்தராக சுவாமிநாதன் பதவிஏற்றார். 2010ல் பணிகள் மும்முரமாக நடைபெற துவங்கின. திட்டமிட்ட நிதிக்கு மேலாக கூடுதலாக ரூ.ஒரு கோடி செலவானாலும், தேவையான பணமும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

கடந்த 2012 ஜூன் 9-14 வரை விண்வெளி திருவிழா என்ற சர்வதேச அளவிலானஅறிவியல் மாநாடு பாரதியார் பல்கலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக உள்விளையாட்டரங்கம் தற்காலிகமாக வெள்ளையடித்து, அலங்கரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

2012 செப்.,9ம் தேதி துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை பதவி ஏற்ற நிலையில், உள்விளையாட்டு அரங்க பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறுகையில், "உள்விளையாட்டரங்க பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட பணிக்கென மேலும் ரூ.95 லட்சம் மதிப்பீடு உள்ளது. குறிப்பாக, மரப்பலகையால், உள்விளையாட்டரங்க தரை அமைத்து விட்டால், பணி நிறைவு பெறும்&'&' என்றார்.

உள் விளையாட்டரங்கத்தின் அளவீடுகள்விளையாட்டுத்துறைக்கென ஒதுக்கப்பட்ட 32 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், உள் விளையாட்டு அரங்கம் முழுவதும் 18 ஆயிரத்து 293 சதுர அடி நிலத்தில் அமைந்து வருகிறது.

விளையாட்டு போட்டி நடக்கும் இடம் 13 ஆயிரத்து 620 சதுர அடியில் உள்ளது. (72மீ.,நீளம்- 52மீ.,அகலம் ஆகும்.) வாகனம் நிறுத்தவும், அரங்கத்தை சுற்றிலும் அழகிய சிறு பூங்கா அமைக்கவும் 10 ஆயிரம் சதுர அடி நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேல் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை காண நான்கு புறமும் காலரிகள் கட்டப்பட்டுள்ளன.

வீரர்-வீராங்கனைகள் 200 பேர் தங்க அறைகள் உள்ளன. அரங்கின் இரு பகுதிகளிலும் கழிப்பறைகளும், குளியலறைகளும் கட்டப்பட்டுள்ளன. உள் அரங்கத்தில் மழை, வெயில் பாதிக்காத வண்ணம், தரையிலிருந்து 40 அடி உயரத்தில் "கால்வனைசிங் ஷீட்" போடப்பட்டுள்ளது.

கபடி, வாலிபால், கூடைப்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து, செஸ், கேரம், டென்னிகாய்ட் போன்ற விளையாட்டுகள் உள் விளையாட்டரங்கில் நடத்த முடியும்.

பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் கூறுகையில், "பணிகள் முடிந்ததும், மாநில, தேசிய அளவில் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியுடன் திறப்பு விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us