இலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்! | Kalvimalar - News

இலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்!மார்ச் 29,2013,09:18 IST

எழுத்தின் அளவு :

நம்மை ஒரு பணிக்கு தகுதியான நபராக உருவாக்குதிலேயே நமது கல்வித்திட்டம் கவனம் செலுத்துகிறது. உயர்கல்வி மற்றும் அறிவைத் தேடுதல் என்பது தமக்கென, மேன்மையான நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, நடைமுறையில், பணி வாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

உங்களது கல்லூரி வளாகத்தை விட்டு, நீங்கள் செல்லும்போது, வாழ்க்கையைப் பற்றி ஒரு குறுகிய அணுகுமுறையுடனேயே இருக்கிறீர்கள். வளர்ச்சி, மேம்பாடு, உயர்வு, திறமை, அறிவு, அணுகுமுறை, தனித்தன்மை, வெற்றி, இலக்கு, கடமை, செயல்திறன், குணாதிசயம் மற்றும் செயல்பாடு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும், பணி என்ற ஒற்றை அம்சத்துடன் மட்டுமே நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

நமக்கு சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லையெனில், நாம் ஏன் கல்விப் பட்டங்களையும், திறன்களையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்? அதேபோன்று, வாழ்க்கையில், மகிழ்ச்சியாகவும், சவுகரியமாகவும் இருக்க விரும்பவில்லை என்றால், எதற்காக பணிபுரிய வேண்டும்? நமது பணியே, நமது வாழ்க்கையின் மிகப்பெரிய இறுதி திருப்தி எனும்போது, பிறகு, அந்த நிலைக்காக உங்களை தயார்செய்து கொள்வதைப் பற்றி நினைக்கக்கூடாதா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

நீங்கள் தனிமனிதராக வாழ்க்கையை நடத்துவீர்கள். பின்னர் உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும். உங்களுக்கான உறவுகள் விரிவடையும். வாழ்க்கையில், கடமை, சவால், அனுபவம், உணர்ச்சி நிலைகள் மற்றும் பொறுப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

ஒரு குடிமகனாக நீங்கள், உங்களின் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறீர்கள், வரி செலுத்துகிறீர்கள் மற்றும் சட்டத்தை மதிக்கிறீர்கள். அதேபோல் ஒரு குடும்ப உறுப்பினராக, உங்கள் குடும்பம், நிதி நிலைமை, முதலீடுகள் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் எப்போதும் சிந்திப்பதுடன், உங்களின் விடுமுறை நாட்களை கொண்டாடுவதைப் பற்றியும் திட்டமிடுகிறீர்கள். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பற்றிய அனைத்து விஷயங்களையும் சிந்திக்கிறீர்கள் மற்றும் திட்டமிடுகிறீர்கள்.

மேற்கூறிய அம்சங்கள், ஒரு மனிதனாக, உங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதன் வழியாகவே, நீங்கள், உங்களைச் சேர்ந்த மற்றவர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்துவதோடு, நாட்டிற்கும், மனித குலத்திற்கும் உங்களின் பங்கை ஆற்றுகிறீர்கள். உங்களின் பணியைவிட, மேற்கூறிய அம்சங்கள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

சமூக வளர்ச்சி

உங்கள் வாழ்க்கையின் இத்தகைய செயல்பாட்டு வளர்ச்சி சாத்தியக்கூற்றை அறிந்துகொள்வதை நோக்கிய உங்களின் முதல் சிறிய முயற்சியானது, உங்களின் தனிப்பட்ட மற்றும் சமூக இலக்குகளை வகுத்துக்கொள்வதற்கானது. உங்கள் இலக்குகளின் அர்த்தம் என்ன? என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுயபரிசோதனையில் ஈடுபட தொடங்க வேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிட வேண்டும். இந்த திட்டமிடுதலில், ஒரு தனிநபர், சமூக உறுப்பினர், நாட்டின் குடிமகன், பெற்றோரின் பிள்ளை, ஒரு குழந்தையின் பெற்றோர், ஒரு சகோதரன் அல்லது சகோதரி மற்றும் அடுத்த தலைமுறைக்கான ஒரு வழிகாட்டி என்ற வகையில், உங்களுக்குள் உள்ள பலவித சமூகப் பரிமாணங்கள் உங்களிடம் தாக்கம் செலுத்தும்.

நீங்கள் யாராக அறியப்பட விரும்புகிறீர்கள்? மற்றும் எந்த விஷயத்திற்காக புகழடைய விரும்புகிறீர்கள்? உங்களுடைய குழந்தைக்கு எந்தவகையில் ஒரு நல்ல பெற்றோராக இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் நாட்டிற்கு எப்படிப்பட்ட குடிமகனாக இருக்க விரும்புகிறீர்கள்? மற்றும் எது உங்களுக்கு நீடித்த திருப்தியைத் தரும்? போன்ற பலவாறான கேள்விகள் அலைமோதும்.

உங்களின் இலக்குகளைப் பற்றி, வாழ்வின் பல்வேறான அம்சங்களை யோசித்து, அதனடிப்படையில் எழுதி வைக்கவும். அத்தகைய இலக்குகளை அடைவதில் இருக்கும் உங்களின் பலம், பலவீனம், ஆற்றல், திறமை, சாத்தியக்கூறுகள், நெருக்கடிகள், ஆதரவு, வயது, குணாதிசயம் ஆகியவற்றை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இலக்கு நிர்ணயித்தல் என்பது, ஒரு முழு செயல்பாட்டிற்கு தயாராதலின் இறுதி நிகழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களின் இலக்குகள் பிரமாண்டமானதாகவும், பிரமாதமானதாவும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, தெளிவானதாகவும், சாத்தியப்படக்கூடியதாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும், சூழ்நிலைக்கேற்ப பொருந்தக்கூடியதாகவும் இருந்தாலே போதும். உங்களின் மிகச்சிறிய இலக்கு கூட, தேவைப்படும்போது எளிய அல்லது பெரிய முடிவுகளை நீங்கள் எடுக்கையில் மிகவும் உதவியாக இருக்கும்.

உதாரணமாக, உங்களின் தனிப்பட்ட இலக்குகளில் ஒன்று, உங்களுக்கான நோயற்ற, ஆரோக்கிய வாழ்வைத் தருவதாக இருக்கலாம். அத்தகைய இலக்கானது, நீங்கள் துரித உணவகம் செல்லும்போதோ, பீசா அல்லது பர்கர் ஆகியவற்றை சாப்பிட நினைக்கும்போதோ, உங்களுக்கு எச்சரிக்கை ஊட்டி, உங்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உதவி புரியும்.

தற்போதைய உலகம், நிச்சயமின்மை, சிக்கல்கள், நெருக்கடிகள், ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் நிறைந்தது. எனவே, நமது இலக்கானது, சரியாக அடையப்படுமா? என்பதை நம்மால் உறுதிசெய்ய இயலாத நிலையே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால், நமது வாழ்க்கை, நம் கையில் இல்லை என்று சொல்லும் நிலையே உள்ளது. நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.

எனவே, உங்களின் இலக்குகளை நிர்ணயிக்கையில், சற்றே திறந்த மனதுடனும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியக்கூறுகளையும் மனதில்கொண்டே செயல்படவும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி செல்கையில், ஒரு எதிர்பாராத நிகழ்வு அதை அடையவிடாமல் உங்களை வழிமாற செய்துவிட்டாலும், மனம் தளர்ந்துவிடாமல், வேறொரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுமளவு, மனவலிமையையும், நெகிழ்வையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கைக்கான இலக்குகளை நிர்ணயிப்பதில், நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கே, உங்களைப் பற்றிய பல வித்தியாசமான புரிதல்கள் ஏற்படும். உங்களால், மற்றவர்களுக்கான அல்லது இந்த சமூகத்திற்கான நன்மைகளைப் பற்றி உணர்வீர்கள். "உங்களின் நலன் சமூகத்தின் நலனில் சார்ந்துள்ளது. சமூகத்தின் நலன், உங்கள் நலனில் சார்ந்துள்ளது". இதை மனதில் வைத்து, செயல்பட்டாலே போதும். சிறப்பான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us