இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்? | Kalvimalar - News

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?மார்ச் 26,2013,10:50 IST

எழுத்தின் அளவு :

கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நன்றாக, தரமான உள்ள கட்டடங்களும், இடிப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை, தமிழக அரசு பாழாக்கலாமா என, அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

சம்பத் மாளிகை: ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வளாகத்தில், மிகப் பெரிய கட்டடமாக, சம்பத் மாளிகை கட்டடம் உள்ளது. இது, 10 தளங்களைக் கொண்டதாகும். 1985ல், அப்போதையமுதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பந்த், திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடம் கட்டி, 23 ஆண்டுகள் தான் ஆகின்றன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநூல் கழகம், மத்திய அரசின், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம், சி.பி.ஐ.,-கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடம், இடிப்பு பட்டியலில் உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனரகம்: இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடத்தைப்போல் பிரதிபலிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகமும், இடிக்கப்படுகிறது. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் இந்த கட்டடம் வலுவாகவே உள்ளது. மேலும், இந்த கட்டடம், தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேய அரசு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில், கல்விக்கென தனி இயக்குனரகத்தை கட்டியது. டி.பி.ஐ., (Directorate of Public Instruction) அதிகாரிகளாக, 1854ல் இருந்து, பல பேர் பதவி வகித்துள்ளனர். இதற்கான பெயர் பட்டியலும், அலுவலகத்திற்கு வெளியே உள்ளது.

எஸ்.எஸ்.ஏ., கட்டடம்: கூவம் ஆற்றை ஒட்டியுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக கட்டடம், 2000த்திற்கு முன்பு கட்டப்பட்டது. வெறும் 13 ஆண்டுகள் ஆன இந்த கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

அறிவுசார் பூங்கா: தேர்வுத் துறை வளாகத்தில், முந்தைய, தி.மு.க., அரசில், புதிய கூடுதல் கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடமும், இடிப்பு பட்டியலில் உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து கட்டடங்களை தவிர, மற்ற அனைத்து கட்டடங்களையும், விரைவில் தரை மட்டமாக்கி விட்டு, அனைத்து துறை அலுவலகங்களை உள்ளடக்கி, "ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா" கட்டடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.

அலுவலகங்களை தேடி: புது கட்டடத்தை கட்டுவதில், அரசு வேகம் காட்டுவதால், அனைத்து துறை அதிகாரிகளும், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்குமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கட்டடங்கள், நன்றாகவே உள்ளன. ஆனாலும், சில கட்டடங்களை தவிர, மற்ற அனைத்தும் இடிக்கப்பட உள்ளன. தற்காலிகமாக, வேறு இடங்களை, வாடகைக்கு பார்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப, கட்டடங்கள் கிடைக்குமா என்பது, சந்தேகம் தான். ஆவணங்கள் அனைத்தையும், புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் சிலர் கூறியதாவது: சம்பத் மாளிகை கட்டடம், எஸ்.எஸ்.ஏ., கட்டடம், பள்ளிக் கல்வி கட்டடம், தேர்வுத் துறையில் உள்ள கூடுதல் கட்டடம் ஆகியவை நன்றாகவும், வலுவாகவும் உள்ளன. இது போன்ற கட்டடங்களை இடிப்பதால், மக்களின் பலகோடி ரூபாய் வரிப்பணம் தான் பாழாகும். மெட்ரிக் கல்வி இயக்குனரகம், வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள தேர்வுத் துறை குடோன் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கலாம். நன்றாக உள்ள கட்டடங்களை தவிர்த்து, மீதமுள்ள இடங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப, ஒருங்கிணைந்த பூங்கா கட்டடத்தை கட்ட வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.

இடிக்கப்படும் கட்டடங்கள்

1. பள்ளிக்கல்வி இயக்ககம்
2. சம்பத் மாளிகை
3. மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
4. தேர்வுத்துறை இயக்குனரகம்
5. எஸ்.எஸ்.ஏ., இயக்குனரக கட்டடம்
6. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
7. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

புது கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? கடந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வித்துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா கட்டடம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோட்டூர்புரம் நூலகமும்,  இந்த கட்டடத்தில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us