வழிகாட்டி நிகழ்ச்சி: பங்கேற்ற மாணவர்கள் கருத்து | Kalvimalar - News

வழிகாட்டி நிகழ்ச்சி: பங்கேற்ற மாணவர்கள் கருத்துமார்ச் 26,2013,08:34 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று துவங்கிய "வழிகாட்டி" நிகழ்ச்சிக்கு, காலை முதலே ஏராளமான மாணவர்கள் வந்து வண்ணம் இருந்தனர். ஒரே கூரையின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்களைக் காணவும், உயர்கல்வி பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும், வழிகாட்டி ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

வழிகாட்டி பற்றி இதோ மாணவர், பெற்றோரின் கருத்து:

எச்.வெங்கட்ராஜ், மதுரை: நான் பயோமேத்ஸ் மாணவன். இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரே இடத்தில் இத்தனை கல்லூரிகளை பார்க்க முடியுமா என்பதே ஆச்சரியம். என்ன மதிப்பெண் எடுத்தால், என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டோம். பிளஸ் 2ல் ஆயிரம் மதிப்பெண் எடுப்பேன் என எதிர்பார்க்கிறேன். எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தான் ஆர்வம். அது பற்றியும் அறிந்துகொண்டேன்.

எம்.சண்முகப்பிரியா, மதுரை: பொதுத்தேர்வில் 900 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். பல்வேறு கல்லூரிகளில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, கட்டணம் எவ்வளவு என்பதை ஒரே நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். எனக்கு நர்சிங் படிக்க விருப்பம்.

நாகஜோதி 25, உசிலம்பட்டி: எனது தங்கையை அழைத்து வந்துள்ளேன். அறிவியல் குரூப் படித்த அவர், வேதியியலில் பட்டம் பெற்று, பி.எட்., படிக்க விரும்புகிறார். இதற்கான விபரங்களை இங்கு வந்து தெரிந்து கொண்டோம்.

கிராமத்தில் இருந்தாலும், தினமலர் நாளிதழ் மூலம் இந்நிகழ்ச்சி பற்றி அறிந்து இங்கு வந்தோம். இங்கு வந்த பிறகு தான், நாட்டில் இத்தனை கல்லூரிகள் இருப்பதே தெரிய வந்தது. தினமலர் வழங்கும் கல்வி, வேலைவாய்ப்பு மலர் பயனுள்ளதாக இருக்கிறது.

எம்.மீன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்: தினமலர் நாளிதழைப் பார்த்து, எங்கள் ஊரில் இருந்து 10 பேர் இந்நிகழ்ச்சியைக் காண வந்துள்ளோம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இங்கு வருவதற்கு முன், எங்கு படிக்க வேண்டும் என நிறைய குழப்பம் இருந்தது. இப்போது அது தெளிவாகி உள்ளது. ஊருக்கு சென்று என் மற்ற நண்பர்களையும் வரச் சொல்வேன். கவுன்சிலிங், கல்விக் கடன் பற்றியும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்தது.

ஆர்.லட்சுமி 45, திண்டுக்கல்: எனது மகளுக்காக நான் இங்கு வந்தேன். அவர் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து வருவதால், அவர் வர முடியவில்லை. என் மகள் மாநில ரேங்க் பெறுவார் என எதிர்பார்க்கிறேன். அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் அல்லது மருத்துவம் படிக்க விரும்புகிறார். உயர் கல்வி பற்றி இப்போது தான் நிறைய "ஐடியா" கிடைத்துள்ளது. இது போல் நிகழ்ச்சியை நிறைய ஊர்களில் நடத்த வேண்டும்.

எஸ்.ரேவதி, சோழவந்தான்: ஆயிரம் மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். எனது தந்தை "டிவி" மெக்கானிக்காக இருந்தும், எங்களை நன்கு படிக்க வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அவர் தான் அனுப்பி வைத்தார். என்னுடன் அம்மா, சித்தி, அவரது மகள் வந்துள்ளனர். அனைவருமே, கல்லூரி ஸ்டால்களை சுற்றிப் பார்த்து, நிறைய விஷயங்களை அறிந்து கொண்டோம். ஊருக்கு சென்று என்னுடன் படித்தவர்களையும் வரச்சொல்லப் போகிறேன்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us